/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
மதுரையை அடுத்து சென்னை மாநகராட்சியிலும் முறைகேடு!
/
மதுரையை அடுத்து சென்னை மாநகராட்சியிலும் முறைகேடு!
மதுரையை அடுத்து சென்னை மாநகராட்சியிலும் முறைகேடு!
மதுரையை அடுத்து சென்னை மாநகராட்சியிலும் முறைகேடு!
PUBLISHED ON : ஜூலை 31, 2025 12:00 AM

“கோ ட்டையில் ஓட்டை விழுந்துடுமோன்னு பயப்படுதாரு வே...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
“யார் ஓய் அது...” என கேட்டார், குப்பண்ணா.
“மதுரை மேற்கு தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருப்பவர், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு... 'மூணு முறை இந்த தொகுதியில ஜெயிச்சு, அ.தி.மு.க., கோட்டையா மாத்தியிருக்கேன்'னு அடிக்கடி பெருமை அடிச்சுக்குவாரு வே...
“வர்ற தேர்தல்ல, நாலாவது முறையா களம் இறங்க நினைக்காரு... ஆனா, அதுக்கு முட்டுக்கட்டை போடும் விதமா, மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளரா, அமைச்சர் மூர்த்தியை, தி.மு.க., தலைமை களமிறக்கிட்டு வே...
“கிட்டத்தட்ட மேற்கு தொகுதி எம்.எல்.ஏ., மாதிரியே ஆகிட்ட மூர்த்தி, பல நலத்திட்டங்களை தொகுதிக்கு அள்ளி விடுதாரு... தொகுதி நிதியில் செல்லுார் ராஜு செய்ய இருந்த திட்டங்களுக்கு எல்லாம், அரசின் பொது நிதியை ஒதுக்கிடுதாரு...
“இதனால, 'தொகுதி மக்களிடம் எனக்கு நல்ல பெயர் கிடைச்சுடக் கூடாதுன்னே அமைச்சர் தரப்பு இப்படி பண்ணுது'ன்னு செல்லுார் ராஜு புலம்பிட்டு இருக்காரு வே...” என்றார், அண்ணாச்சி.
“ஓட்டப்பிடாரம் மாதிரியே, அரியலுார் விழாவுலயும் எம்.எல்.ஏ.,வை புறக்கணிச்சுட்டாங்க...” என்ற அந்தோணிசாமியே தொடந்தார்...
“அரியலுார் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் நடந்த ஆடி திருவாதிரை விழாவில், பிரதமர் மோடி கலந்துக்கிட்டாரே... இது சம்பந்தமா, ஜெயங்கொண்டம் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ., கண்ணன், தன் முகநுால் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருக்காருங்க...
“அதுல, 'கங்கைகொண்ட சோழபுரம் அமைந்துள்ள தொகுதி எம்.எல்.ஏ.,வான என் பெயரை அழைப்பிதழ்ல போடல... விழா அன்னைக்கு காலையில, 8:30 மணிக்கு தான் அழைப்பிதழே தந்தாங்க... ஆனாலும், கார் பாஸ் தரல...'ன்னு எழுதி இருக்காரு...
“இன்னும், 'எனக்கு ஏழாவது வரிசையிலும், அரியலுார் எம்.எல்.ஏ., சின்னப்பாவுக்கு எட்டாவது வரிசையிலும் சீட் போட்டிருந்தாங்க... ஆனா, பா.ஜ., நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களின் அதிகாரிகள், அ.தி.மு.க., - பா.ம.க., - அ.ம.மு.க., மற்றும் வி.சி., கட்சியினர் பலருக்கும், வி.ஐ.பி., பாஸ்கள் கொடுத்து, முன்வரிசையில உட்கார வச்சிருந்தாங்க'ன்னு குறை சொல்லியிருக்காருங்க...” என்றார், அந்தோணிசாமி.
உடனே, “மதுரை மாநகராட்சியில சொத்து வரி விதிப்பில், 200 கோடி ரூபாய் முறைகேடு நடந்திருக்குன்னு புகார் எழுந்திருக்கே... இதே மாதிரி, சென்னை மாநகராட்சியிலும் முறைகேடு நடந்திருக்குது பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“மாநகராட்சியின், ஒன்பதாவது மண்டலத்துல அண்ணா சாலை, ஜெமினி மேம்பாலம், சைதாப்பேட்டை, நந்தனம் பகுதி கட்டடங்கள்ல அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான அளவுல விளம்பர பலகைகளை வச்சிருக்காங்க... இதனால, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்குது பா...
“ஒரு கட்டடத்துல ஒரு கதவு எண்ணுக்கு தான் விளம்பர பலகை வைக்க அனுமதி தரணும்... ஆனா, ஒரு கதவு எண்ணுக்கு பல விளம்பர பலகைகள் வைக்க அனுமதி தந்திருக்காங்க பா...
“அதுவும் இல்லாம, ரெண்டாவது மாடியில வைக்க அனுமதி வாங்கிட்டு, ஒன்பதாவது மாடியில வச்சிருக்காங்க... 'இதனால, புயல், மழை நேரங்கள்ல விளம்பர பலகைகள் கீழே விழுந்து, பொதுமக்கள் உயிருக்கே ஆபத்து ஏற்படும்'னு சமூக ஆர்வலர்கள் எல்லாம் வருத்தப்படுறாங்க பா...” என முடித்தார், அன்வர்பாய் .
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.