/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவும் வேளாண் அதிகாரி!
/
ரியல் எஸ்டேட் தொழிலுக்கு உதவும் வேளாண் அதிகாரி!
PUBLISHED ON : டிச 03, 2025 03:37 AM

''பு து அதிகார மையமா உருவாயிட்டு இருக்காரு வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மத்திய அரசின் முன்னாள் அதிகாரி ஒருத்தர், தமிழக வெற்றிக் கழகம் கட்சியில இருக்கார்... சமீபத்துல, செங்கோட்டையன் அந்த கட்சியில சேர்ந்தாருல்லா...
''அவரை நான் தான் கட்சிக்கு அழைச்சிட்டு வந்தேன்னு எல்லார்கிட்டயும், 'மாஜி' அதிகாரி சொல்லுதாரு... அதாவது பரவாயில்ல... 'விஜயை கட்சி துவங்கச் சொன்னதே நான் தான்'னும் பலரிடமும் சொல்லுதாரு வே...
''பண பலத்தோட இருக்கிறவங்களிடம், 'விஜயை சந்திக்க ஏற்பாடு பண்ணுதேன்'னு சொல்லி, அவங்களை வேட்பாளராக்கும் முயற்சியிலும் ஈடுபட்டிருக்காரு... விஜய் ரசிகர் மன்றத்துல இருந்து கட்சிக்கு வந்தவங்களை ஓரங்கட்டும் அவர், தன் தலைமையில் ஒரு கோஷ்டியை உருவாக்குறதுல ரொம்பவே தீவிரமா இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''அருண்ராஜ், இப்படி உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த குப்பண்ணாவே, ''வனத்துறையிலும், 'என்கவுன்டர்' நடக்கறதோன்னு சந்தேகப்படறா ஓய்...'' என்றபடியே தொடர்ந்தார்...
''கோவை மாவட்டம், தொண்டாமுத்துார் மற்றும் போளுவாம்பட்டி பகுதிகளில், போன மாசம் ஒரு காட்டு யானை ஊருக்குள்ள புகுந்துடுத்து... பொதுமக்களை தாக்கியதும் இல்லாம, நிறைய பொருட்களையும் சேதப்படுத்திடுத்து ஓய்...
''இந்த யானைக்கு, 'ரோலக்ஸ்'னு வனத்துறையினர் பெயர் வச்சிருந்தா... யானையை விரட்ட எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் தரல ஓய். ..
''அப்புறமா, 'கும்கி' யானைகளை வரவழைச்சு மயக்க ஊசி போட்டு, யானையை பிடிச்சா... அதை, ஆனைமலை புலிகள் காப்பகம், வரகழியாறு பகுதியில் அடைச்சு வச்சிருந்தா ஓய்...
''சில நாட்கள் கழிச்சு, 'ரோலக்ஸ்' யானை திடீர்னு இறந்துட்டதா வனத்துறையினர் சொல்லிட்டா... 'அட்டகாசம் பண்ற ரவுடிகளை போலீசார் என்கவுன்டர்ல போட்டு தள்ளற மாதிரி, ரோலக்ஸ் யானையால பெரிய இம்சைன்னு நினைச்சு வனத்துறையினரே கொன்னுட்டாளோ'ன்னு அந்த பகுதி மக்கள் பேசிக்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''வசூலை வாரி குவிக்கிறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த அதிகாரியை சொல்றீங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி மாவட்ட வேளாண்மை துறையில் ஒரு அதிகாரி இருக்கார்... போன வருஷம், வெள்ள நிவாரணமா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட, 56 கோடி ரூபாயை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கிடைக்காம, குளறுபடி பண்ணிட்டாருங்க...
''ரியல் எஸ்டேட் தொழில் பணறவங்களுக்கு சாதகமா அதிகாரி செயல்படுறாரு... விவசாய நிலங்களை வீட்டு மனைகளா மாத்தணும்னா, வேளாண்மை துறையில், தடையில்லா சான்று வாங்கணும்னு விதிமுறை இருக்குதுங்க...
''இதுக்கு எந்த ஆவணங்களும் தேவையில்ல.... ஏக்கருக்கு இவ்வளவுன்னு அதிகாரிக்கு, 'கட்டிங்' வெட்டிட்டா, கையோட சான்றிதழை தந்துடுறாருங்க...
''ஒரு சான்றிதழுக்கு குறைந்தபட்சம், 50,000 ரூபாய் வாங்குறாரு... இவர் இங்க வந்ததுல இருந்து இதுவரைக்கும், 200க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை குடுத்திருக்காருங்க...
''இது பத்தி விவசாயிகள் பலர், கலெக்டரிடம் புகார் குடுத்தும் நடவடிக்கை இல்ல... இதனால, அதிகாரிக்கு எதிரா போராட்டம் நடத்தலாமான்னு விவசாயிகள் யோசனை பண்ணிட்டு இருக்காங்க...'' என முடித்த அந்தோணிசாமி, ஒலித்த மொபைல் போனை எடுத்து ''பெரியசாமி, நாளைக்கு பேசலாம்...'' என்றபடியே, மொபைல் போனை அணைத்து எழ, மற்ற வர்களும் கிளம்பினர்.

