/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
உளவுத்துறையில் கோலோச்சும் அ.தி.மு.க. , அனுதாபிகள் !
/
உளவுத்துறையில் கோலோச்சும் அ.தி.மு.க. , அனுதாபிகள் !
உளவுத்துறையில் கோலோச்சும் அ.தி.மு.க. , அனுதாபிகள் !
உளவுத்துறையில் கோலோச்சும் அ.தி.மு.க. , அனுதாபிகள் !
PUBLISHED ON : மார் 16, 2025 12:00 AM

நுரை பொங்க வந்த பில்டர் காபியை வாங்கிய படியே, “கலப்பட உரத்தை வித்து காசு பார்க்கறா ஓய்...” என, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த ஊருல பா...' என கேட்டார், அன்வர்பாய்.
“கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கேரளா எல்லையில் இருக்கு... இங்க இருக்கற தென்னை மரங்கள்ல, கேரளாவின் வேர்வாடல் நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கு ஓய்...
“அதுல இருந்து மீண்டு வரதுக்குள்ள, வெள்ளை ஈ பூச்சி தாக்குதல் வந்துடுத்து... இதுக்கு, 'செயற்கை மருந்து அடிக்க வேண்டாம்'னு வேளாண் அதிகாரிகள் சொல்றா ஓய்...
“இதை பயன்படுத்தி, விவசாயிகள் தோட்டங்களுக்கு வர்ற சிலர், 'பயோ உரம்'னு சொல்லி கலப்பட உரத்தை விற்பனை பண்றா... இதுல, எம்.சாண்ட், சாம்பல் கலந்திருக்கறதால அந்த உரம் தண்ணீர்ல கரைய மாட்டேங்கறது ஓய்...
“கலப்பட உரம் விக்கறவாளை பத்தி, வேளாண் அதிகாரிகளுக்கு புகார்கள் போயும், அவா எதையும் கண்டுக்க மாட்டேங்கறா... இதனால, அப்பாவி விவசாயிகள் ஏமாந்துண்டு இருக்கா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“அமைச்சர் மீது அதிருப்தியில இருக்காவ வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“செங்கல்பட்டு மாவட்டத்துல, சமீபத்துல நடந்த அரசு விழாவுல, முதல்வர் ஸ்டாலின் கலந்துக்கிட்டு, நலத்திட்ட உதவிகளை வழங்குனாருல்லா...
“இதுக்காக, காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்துல இருக்கிற ஒவ்வொரு சட்டசபை தொகுதியில் இருந்தும் தலா, 5,000 பேரை அழைச்சிட்டு வரணும்னு, மாவட்ட அமைச்சர் அன்பரசன் உத்தரவு போட்டிருந்தாரு வே...
“ஆனா, பணம் எதையும் கண்ணுலயே காட்டல... கட்சி நிர்வாகிகள், கைக்காசை செலவு பண்ணி, கூட்டத்தை திரட்டிட்டு போயிருக்காவ... 'மற்ற மாவட்டங்கள்ல முதல்வர் சுற்றுப்பயணம் போறப்ப, அமைச்சர்கள் எல்லாம் தாராளமா செலவு செய்றப்ப, அன்பரசன் மட்டும், நம்ம தலையில கை வச்சுட்டாரே'ன்னு புலம்பிட்டு இருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.
“அ.தி.மு.க., அனுதாபிகளா இருக்காங்க...” என்றார், அந்தோணிசாமி.
“எந்த துறையில பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருச்சி மாவட்ட உளவுத்துறை பெண் அதிகாரியின் தம்பி, அ.தி.மு.க.,வுல தஞ்சை மண்டல ஐ.டி., விங் தலைவரா இருக்காரு... இவர், தி.மு.க., ஆட்சி பத்தி, 'பேஸ்புக்'ல கேலி செய்து போட்ட பதிவுகளுக்கு பெண் அதிகாரி, 'லைக்' போட்டிருக்காங்க...
“இது வெளியில கசிய, உடனே அதை அழிச்சுட்டாங்க... அ.தி.மு.க., தலைவர்கள் படம் போட்டு, தன் தம்பி அடிச்சு கொடுத்த காலண்டர்களை, தன் ஆபீஸ்ல இருக்கிற பலருக்கும் குடுத்திருக்காங்க...
“தன் போலீஸ் ஜீப்புல அடிக்கடி கொல்லிமலைக்கு சுற்றுலா போறாங்க... அந்த அரசு ஜீப்புக்கு கூடுதல் டீசலை வாங்கி, மன்னார்புரத்தில் உள்ள மெக்கானிக் ஷாப்புல வித்துடுறாங்க...
“இது போக, ஏட்டு ஒருத்தரின் மனைவியுடன் சேர்ந்து, துவரங்குறிச்சி பகுதியில் நிலம் வாங்கி விவசாயம் பண்றாங்க... அந்த ஏட்டு, பெண் அதிகாரி தயவுல, அ.தி.மு.க.,வுல பலருக்கும் சீட் வாங்கி தர்றதா வசூல் பண்ணிட்டு இருக்காருங்க...
“ஏட்டின் தந்தை, அ.தி.மு.க.,வுல நகர செயலரா இருந்தவர்... இப்படி, 'அ.தி.மு.க., அனுதாபிகள் உளவுத் துறையில இருக்கிறது, தேர்தல் நேரத்துல தி.மு.க., வுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்'னு அந்த கட்சியினர் பயப்படுறாங்க...
“பெண் அதிகாரியோ, 'சென்னையில என் உறவினர் பெரிய பதவியில இருக்கிறதால, என்னை யாரும் எதுவும் பண்ண முடியாது'ன்னு ஜம்பமா சொல்றாங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.