/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நடுக்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் விரைந்து மீட்டது இந்திய போர்க்கப்பல்
/
நடுக்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் விரைந்து மீட்டது இந்திய போர்க்கப்பல்
நடுக்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் விரைந்து மீட்டது இந்திய போர்க்கப்பல்
நடுக்கடலில் சரக்கு கப்பல் மீது தாக்குதல் விரைந்து மீட்டது இந்திய போர்க்கப்பல்
PUBLISHED ON : ஜன 19, 2024 12:00 AM

புதுடில்லி, நடுக்கடலில் சரக்கு கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடந்தது தொடர்பான தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்தில், நம் கடற்படை போர்க் கப்பல் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் - ஹமாஸ் பயங்கரவாத அமைப்புக்கு இடையே போர் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஈரானின் ஆதரவு பெற்ற ஏமனில் இருந்து இயங்கும் ஹவுதி பயங்கரவாதிகள், செங்கடல் வழியாக செல்லும் சரக்கு கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
மேலும், அரபிக்கடலிலும் இதுபோன்ற தாக்குதல்கள் நடக்கின்றன.
குறிப்பாக, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக இந்த தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
இதையடுத்து, இந்தப் பகுதியில், பல நாடுகளின் போர்க் கப்பல்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன.
நம் கடற்படை போர்க் கப்பல்கள் சமீபத்தில் இவ்வாறு தாக்குதலுக்கு ஆளான மூன்று சரக்கு கப்பல்களை மீட்டன. விரைந்து சென்று, அந்த சரக்கு கப்பல்களில் ஏற்பட்ட தீயை அணைத்து, நம் போர்க் கப்பல்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டன.
இந்நிலையில், பசிபிக் பெருங்கடல் நாடான மார்ஷல் தீவுகளைச் சேர்ந்த சரக்கு கப்பல் ஒன்று, ஏமனுக்கு அருகில் உள்ள ஏடன் வளைகுடா பகுதியில் சென்றபோது, ட்ரோன் வாயிலாக தாக்குதல் நடத்தப்பட்டது.
நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த தாக்குதல் நடந்தது. இதைத் தொடர்ந்து அந்தக் கப்பல் உதவி கேட்டு தகவல் அனுப்பியது.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில், நம் கடற்படைக்கு சொந்தமான, ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம் போர்க் கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. தகவல் கிடைத்த ஒரு மணி நேரத்துக்குள், அந்த போர்க் கப்பல் அங்கு விரைந்து சென்றது. சரக்கு கப்பலில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டது.
நம் கடற்படை வீரர்கள், அந்த சரக்கு கப்பலுக்குச் சென்று அதை ஆய்வு செய்தனர். பாதிப்புகள் அதிகம் இல்லாததால், பயணத்தைத் தொடர அனுமதிக்கப்பட்டது.
இந்த சரக்கு கப்பலில், ஒன்பது இந்தியர்கள் உட்பட, 22 ஊழியர்கள் இருந்தனர். அவர்கள் காயமின்றி தப்பினர்.

