/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
/
முதல்வர் அலுவலகம் பெயரில் மிரட்டும் அதிகாரி!
PUBLISHED ON : செப் 11, 2025 12:00 AM

''ம றுபடியும் சத்தமில்லாம திறந்துட்டா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் ஆஜரானார் குப்பண்ணா.
''என்னத்த வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''நீலகிரி மாவட்டத்தில், நிறைய போலி சித்த மருத்துவர்கள் இருக்கறதா புகார்கள் வந்துது... அதாவது, சித்த மருத்துவர்களிடம் உதவியாளர்களா இருந்த சிலபேர், கிளினிக் துவங்கி, பொதுமக்களுக்கு சிகிச்சை குடுத்துண்டு இருந்தா ஓய்...
''சில மாதங்களுக்கு முன்னாடி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, மாவட்டம் முழுக்க, 47 போலி சித்த மருத்துவர்களை கண்டுபிடிச்சு, அவாளோட கிளினிக்குகளை மூடி, 'சீல்' வச்சா...
''இப்ப, அந்த போலி மருத்துவர்கள், சுகாதாரத் துறை அதிகாரிகள் சிலரை, 'கவனிச்சு' கிளினிக்குகளை திறந்து, வழக்கம்போல சிகிச்சை குடுத்துண்டு இருக்கா... இது சம்பந்தமா, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார்கள் போயிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கறாரா கப்பம் வசூலிக்கிறாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவை தெற்கு மாவட்ட, 'டாஸ்மாக்' உயர் அதிகாரிக்கு உதவியாளர் ஒருத்தர் இருக்கார்... இவர், தெற்கு மாவட்டத்தில் இருக்கிற ஒவ்வொரு மது கடையிலும், மாசம், 25,000ல் இருந்து, 50,000 ரூபாய் வரை கறாரா கப்பம் வசூலிக்கிறாருங்க...
''அப்படி தராத கடை ஊழியர்கள் மீது தேவையற்ற புகார்களை சொல்லி, அவங்களுக்கு அபராதம் விதிக்கிறாரு... அதுவும் இல்லாம, பணியில் ஒழுங்கீனமா நடந்துக்கிட்டதா புகார் பண்ணி, மாவட்ட அதிகாரி உதவியுடன் விசாரணைக்கு அழைச்சு அலைக்கழிக்கிறாருங்க...
''அப்புறமும் அந்த ஊழியர் வழிக்கு வரலைன்னா, தொலைதுார கடைக்கு இடமாறுதல் பண்ணி பழிவாங்கிடுறாரு... இதுக்கு, மாவட்ட அதிகாரியும் உதவியா இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஜோதிசங்கர், அன்பு வராவ... இஞ்சி டீ குடும் நாயரே...'' என்ற அண்ணாச்சியே, ''என்கிட்டயும் ஒரு அதிகாரி தகவல் இருக்குல்லா...'' என்றபடியே தொடர்ந்தார்...
''திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் ஆபீஸ்ல இருக்கும், செய்தி மக்கள் தொடர்பு துறையில் ஒரு அதிகாரி இருக்காரு... கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், 'மாஜி' துணை முதல்வர் பன்னீர்செல்வம் தயவுல இந்த பணிக்கு வந்தாரு வே...
''ஆபீசுக்கு சரியா வராததுடன், பணியிலும் மெத்தனமாவே இருக்காரு... துறையின் உயர் அதிகாரி மற்றும் பத்திரிகையாளர்கள்னு யாரையும் மதிக்கவே மாட்டாரு வே...
''மற்ற துறைகள் சார்பில் நடக்கிற நிகழ்ச்சிகளை, 'கவர்' செய்றதுக்கு, 'ரேட்' பேசி தனியா காசு பார்த்துடுதாரு... தன் சொந்த வேலையை பார்த்து கொடுக்காத அலுவலக ஊழியர்களுக்கு ஏதாவது காரணம் சொல்லி, 'மெமோ' குடுத்துடுதாரு வே...
''அதுவும் இல்லாம, 'எனக்கு முதல்வர் ஆபீஸ்ல இருக்கிற, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பலருடன் நெருக்கம் இருக்கு... என்னை யாரும் அசைக்க முடியாது'ன்னும் மார்தட்டுதாரு வே...
''இவரை பத்தி முதல்வர் தனிப்பிரிவு, செய்தி துறையின் செயலர் மற்றும் இயக்குநருக்கு பல புகார்கள் போயும் நடவடிக்கை இல்ல...
''இதனால, 'அவர் சொல்றது உண்மைதானோ'ன்னு ஊழியர்கள் பயப்படுதாவ வே...'' என முடித்த அண்ணாச்சியே, ''இளையேந்திரன் இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த படியே எழ, மற்றவர்களும் கிளம்பினர்.