/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
இடமாறுதல் வசூலில் இடம் வாங்கி குவிக்கும் அதிகாரி!
/
இடமாறுதல் வசூலில் இடம் வாங்கி குவிக்கும் அதிகாரி!
இடமாறுதல் வசூலில் இடம் வாங்கி குவிக்கும் அதிகாரி!
இடமாறுதல் வசூலில் இடம் வாங்கி குவிக்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஜூலை 15, 2025 12:00 AM

''இலவச பயணத்துக்கு காசு வாங்கறா ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''ஐகோர்ட் உத்தரவுப்படி, பழனி முருகன் கோவில் கிரிவீதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, பொது வாகனங்களுக்கு தடை விதிச்சிருக்கால்லியோ... அதே நேரம், பக்தர்கள் வசதிக்காக கிரிவீதியை சுற்றிலும் பேட்டரி கார்கள், இலவச பஸ்களை கோவில் நிர்வாகம் சார்புல இயக்கறா ஓய்...
''இந்த பேட்டரி கார்களுக்கான பொறுப்பாளர், வசூல் வேட்டை நடத்தறார்... அதாவது, 22 பேட்டரி கார்களின் டிரைவர்களும், தனக்கு தலா, 100 ரூபாய் தந்துட்டு தான் வண்டியை எடுக்கணும்னு சொல்லியிருக்கார் ஓய்...
''அவாளும் அந்த பணத்தை குடுத்துட்டு, வண்டியில ஏறும் பக்தர்களிடம் காசு வாங்கறா... இலவச பயணத்துக்கு பணம் கேக்கறது, பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சந்தானம், இங்கன உட்காரும்...'' என, நண்பருக்கு இடம் தந்த பெரியசாமி அண்ணாச்சியே, ''மீனவ சேமிப்பு திட்டத்துலயும் வசூல் வேட்டை நடக்குல்லா...'' என்றார்.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சென்னையில், மீனவர் கூட்டுறவு சங்கங்கள் மூலமா, மீனவர் சேமிப்பு திட்டத்துல வருஷத்துக்கு, 1,500 ரூபாய் சந்தா கட்டணும்... மத்திய, மாநில அரசுகள் தலா, 1,500 ரூபாய் கட்டி, மொத்தம், 4,500 ரூபாயை, தீபாவளி பண்டிகை சமயத்துல மீனவர்கள் வங்கி கணக்குல வரவு வைப்பாவ வே...
''இந்த திட்டத்துல மீனவர்கள் சந்தா பணம் செலுத்தணும்னா, அவங்க ஏரியா ஆளுங்கட்சி புள்ளிக்கு, 200 ரூபாய், 'கட்டிங்' குடுத்தா தான், பணத்தை வரவு வைப்பாவ... அதை குடுக்காம, சந்தா பணம் செலுத்த நேரடியா மீன்வளத்துறை அலுவலகத்துக்கு போனா, ஏதாவது காரணங்களை சொல்லி அதிகாரிகள் திருப்பி அனுப்பிடுதாவ வே...
''அதுவும் இல்லாம, ஆளுங்கட்சி புள்ளிகளுக்கு போனை போட்டு, 'உங்க ஏரியாவுல இருந்து இன்னார் சந்தா கட்ட வந்தார்'னு, 'போட்டும்' குடுத்துடுதாவ... ஆளுங்கட்சி புள்ளிகளும் தங்களது பவரை காட்டி, அந்த மீனவரை தகுதி நீக்கம் பண்ணி, எந்த சலுகையும் கிடைக்க விடாம செஞ்சிடுவாவ... இதனால பலரும், 200 ரூபாயை சத்தமில்லாம குடுத்துடுதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''என்கிட்டயும் ஒரு வசூல் தகவல் இருக்குதுங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மருத்துவ கல்வி இயக்குனரகத்தில், கண்காணிப்பாளருக்கு அடுத்த பதவியில் ஒரு அதிகாரி இருக்காருங்க... இவர், துறை அமைச்சரது உதவியாளர்களின் பெயர்களை பயன்படுத்தி, நர்ஸ்களுக்கு இடமாறுதல் வாங்கி தர்றதா, வசூல் வேட்டையில ஈடுபடுறாருங்க...
''சொன்ன மாதிரியே, இடமாறுதலை வாங்கியும் தந்துடுறாரு... இப்படி சம்பாதிக்கிற பணத்துல, சென்னையின் கிழக்கு கடற்கரை சாலை உட்பட பல இடங்களில், வீடு மற்றும் நிலங்களை வாங்கி போட்டுட்டு இருக்காருங்க... இவரை பத்தி, துறையின் அதிகாரிகளுக்கு நிறைய புகார்கள் போயும் நடவடிக்கை இல்லைங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
ஒலித்த மொபைல் போனை எடுத்த அண்ணாச்சி, ''சொல்லும் மணிகண்டன்... நாளைக்கு கண்டிப்பா சந்திப்போம்...'' என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.