/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஓய்வுக்கு பிறகும் அலுவலகம் வந்து பணியாற்றும் அதிகாரி!
/
ஓய்வுக்கு பிறகும் அலுவலகம் வந்து பணியாற்றும் அதிகாரி!
ஓய்வுக்கு பிறகும் அலுவலகம் வந்து பணியாற்றும் அதிகாரி!
ஓய்வுக்கு பிறகும் அலுவலகம் வந்து பணியாற்றும் அதிகாரி!
PUBLISHED ON : ஜன 11, 2026 03:11 AM

பில்டர் காபிக்கு ஆர்டர் தந்தபடியே, ''கான்ட்ராக்டரா மாறிட்டார் ஓய்...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''மற்ற அரசு துறைகள் போலவே, தமிழக வனத்துறையிலும் நிறைய பணிகளை, 'டெண்டர்' விட்டு செய்றா... இதுல, துாத்துக்குடி மாவட்ட வனத்துறை சார்பில் விடப்படும் டெண்டர்களை, இங்க இருக்கற வனத்துறை அதிகாரி ஒருத்தரே, 'பினாமி' பெயர்ல எடுத்து செய்றார் ஓய்...
''ஏனோ, தானோன்னு பணிகளை செய்றதால, அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படறது... அதிகாரியே, நிறைய டெண்டர்களை எடுத்துடறதால, மத்த கான்ட்ராக்டர்கள் வேலை கிடைக்காம புலம்பறா...
''அவாள்லாம், அதிகாரி மீது சென்னைக்கு நிறைய புகார்களை தட்டி விட்டிருக்கா... 'அதிகாரியிடம் விசாரணை நடத்தினா, நிறைய முறைகேடுகள் அம்பலமாகும்'னு அதுல சொல்லியிருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
டீ கடை ரேடியோவில் ஒலித்த பாடலை கேட்ட அந்தோணிசாமி, ''இளையராஜா மாதிரி, யாராலும் இசை அமைக்க முடியாதுங்க...'' என்றபடியே, ''அரசே விதிகளை மீறினா எப்படின்னு கேட்கிறாங்க...'' என்றார்.
''என்ன விவகாரம் பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''நீலகிரி மாவட்டத்தில், நிலச்சரிவு அபாய பட்டியல்ல, 283 பகுதிகள் இருக்கு... இதுல, குன்னுார் நகரமும் இருக்கு... இங்க இருக்கிற மவுன்ட் ரோட்டுல, பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்தி, மண் குன்றுகளை உடைச்சி மண்ணை அள்ளுறாங்க...
''இங்க, அரசின் நுாலகம் கட்டுறதுக்கு தான் இப்படி செய்றாங்க... இங்க எடுக்கிற மண்ணை, புரூக் லேண்ட் நீரோடையில கொண்டு போய் கொட்டுறாங்க... 'இதனால மழைக்காலத்துல, நீரோடையின் தடம் மாறி, பக்கத்துல இருக்கிற குடியிருப்புகளுக்குள்ள தண்ணீர் புகுந்துடும்'னு அந்த பகுதி மக்கள் புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஓய்வுக்கு பிறகும் அலுவலகம் வர்றாரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''திருச்சி மாவட்டம், மணப்பாறை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் ஒரு அதிகாரி, ஏகப்பட்ட முறைகேடுகளை பண்ணியிருக்காரு... தனக்கு சாதகமான பால் விற்பனையாளர்களை வச்சி, பால்ல தண்ணீர் கலந்து வித்திருக்காரு வே...
''இப்படி, தண்ணீர் கலந்தப்ப ஒரு பால் விற்பனையாளர் மாட்டிக்கிட்டாரு... அவர் தற்காலிக பணியாளர் என்பதால, அவரை வீட்டுக்கு அனுப்பிய அதிகாரி, உடந்தையா இருந்த நிரந்தர ஊழியர் ஒருத்தரை, 'சஸ்பெண்ட்' பண்ணி, அவருக்கு, 50,000 ரூபாய் அபராதமும் விதிச்சாரு வே...
''ஆனா, கொஞ்ச நாள்லயே, நிரந்தர ஊழியரின் சஸ்பெண்ட், அபராதம் ரெண்டையும் அதிகாரியே ரத்து பண்ணிட்டாரு... அதிகாரி உத்தரவுப்படி, பால் விற்பனையாளர்கள் பலர் தண்ணீர் கலந்து பால் வித்து, அதிகாரிக்கு கப்பம் கட்டியிருக்காவ வே...
''அதுவும் இல்லாம, மொத்த பால் விற்பனையிலும், இனிப்பு வகைகளில் ஒன்றான, பால் பேடா விற்பனையிலும் அதிகாரி நிறைய முறைகேடு பண்ணியிருக்காரு... இப்படி சம்பாதிச்ச பணத்துல, மணப்பாறையில், 1 கோடி ரூபாய்க்கு ஆடம்பர பங்களா கட்டியிருக்காரு வே...
''போன டிச., 30ல் அதிகாரி, 'ரிட்டயர்' ஆகிட்டாரு... ஆனாலும், பணி நீட்டிப்பு எதுவும் இல்லாமலே, இன்னும் அலுவலகத்துக்கு வந்து வேலை பார்த்துட்டு இருக்காரு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''தங்கவேல், இப்படி உட்காரும்...'' என்றபடியே குப்பண்ணா எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

