PUBLISHED ON : மார் 28, 2026 03:25 AM

''யாருக்கு சீட்னு பட்டிமன்றம் நடக்கு வே...'' என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார், பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த தொகுதியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை, மதுரவாயல் தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர், காரப்பாக்கம் கணபதி... இந்த தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் முன்னாள் அமைச்சர் பெஞ்சமின் போட்டியிடுதாரு வே...
''கணபதிக்கு, தொகுதியில் அவரது சமுதாய மக்கள் மத்தியிலயே ஆதரவு இல்லையாம்... இதனால, 'பெஞ்சமினை எதிர்க்கும் அளவுக்கு பலமான வேட்பாளரை நிறுத்தணும்'னு தொகுதி தி.மு.க.,வினர் சொல்லுதாவ வே...
''காரப்பாக்கம் ஒன்றிய தி.மு.க., செயலரான துரை வீரமணியும் இந்த தொகுதியை கேட்டிருக்காரு... 'பெஞ்சமினுக்கு இவர் கடும் போட்டியை உருவாக்குவார்'னு தி.மு.க.,வினர் சொல்லுதாவ வே...
''தலைமை நடத்திய நேர்காணல்லயும், வீரமணி பெயரை, 'டிக்' அடிச்சு வச்சிருக்காங்களாம்... இதனால, 'வேட்பாளர் பட்டியல்ல இடம் பிடிக்க போறது கணபதியா, வீரமணியா'ன்னு கட்சியினர் பட்டிமன்றம் நடத்திட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''கண்டக்டருக்காக நாலு அதிகாரிகளை பந்தாடியிருக்காங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''மதுரை மாவட்டம், உசிலம்பட்டி டிப்போவுல, அ.தி.மு.க., தொழிற்சங்க நிர்வாகியின் ஆதிக்கம் அதிகமா இருக்கு... இவர் கண்டக்டரா இருந்தாலும், மதுரை மண்டல போக்குவரத்து அதிகாரிகளுடன் நல்ல நெருக்கமா இருக்காருங்க...
''இந்த கண்டக்டர், மண்டல அதிகாரிகளுக்கு முன்கூட்டியே சில லட்சம் ரூபாயை, 'டிபாசிட்' மாதிரி குடுத்துடுறாரு... அப்புறமா டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு இடமாறுதல், பதவி உயர்வுக்கு, 'கட்டிங்' வசூல் பண்ணி, மண்டல அதிகாரிகள் மூலமா அதை வாங்கி குடுத்துட்டு, டிபாசிட் பணத்துல கழிச்சுக்க சொல்லிடுறாருங்க...
''கட்டிங் பணத்தை அட்வான்சா குடுத்துடுறதால, கண்டக்டர் சொன்ன சொல்லை அதிகாரிகள் தட்ட மாட்டேங்கிறாங்க... சமீபத்தில், உசிலம்பட்டி டிப்போ மேலாளருடன், கண்டக்டருக்கு தகராறு வந்துடுச்சுங்க...
''உடனே, மண்டல அதிகாரிகளிடம் பேசி, மேலாளரை எல்லீஸ் நகர் டிப்போவுக்கு துாக்கி அடிச்சிட்டாரு... எல்லீஸ் நகர் மேலாளரை, வேற பிரிவுக்கு மாத்திட்டாங்க...
''செக்கானுாரணி டிப்போ மேலாளரை உசிலம்பட்டிக்கும், உசிலம்பட்டியில் ஓரங்கட்டி வச்சிருந்த ஒரு அதிகாரியை செக்கானுாரணிக்கும் மாத்தியிருக்காங்க... கண்டக்டரை திருப்திபடுத்த, நாலு அதிகாரிகளை பந்தாடிட்டாங்க... அந்த அளவுக்கு கண்டக்டர், 'ராஜாங்கம்' பண்றாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''என்கிட்டயும் அதிகாரிகள் தகவல் ஒண்ணு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''சீக்கிரம் சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சென்னை வண்டலுார் உயிரியல் பூங்காவுக்கு தனி இயக்குநர் இருக்கார்... பூங்கா வளாகத்துலயே, இவருக்கு தனி பங்களாவும் குடுத்திருக்காங்க பா...
''ஆனா, இந்த பங்களாவை முன்னாள் இயக்குநர் ஒருத்தர், தன் கட்டுப்பாட்டுல வச்சிருக்காரு... அதுவும் இல்லாம, பூங்கா நிர்வாக பணிகள்லயும் முன்னாள் இயக்குநர் தலையீடு அதிகமா இருக்குது பா...
''இதனால, இப்போதைய இயக்குநர் சுதந்திரமா செயல்பட முடியாம தவிக்கிறாரு... முன்னாள் இயக்குநர், இப்ப வனத்துறையில் உயர் பதவியில் இருக்கிறதால, அவரை எதிர்த்து எதுவும் பேச முடியல... 'இந்த பூனைக்கு யாராவது மணி கட்டணும்'னு வனத்துறை அதிகாரிகள் எல்லாம் புலம்புறாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''வாரும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி, திருப்பதி போயிட்டு எப்ப வந்தீர்...'' என, நண்பரிடம் குப்பண்ணா பேச துவங்க, மற்றவர்கள் கிளம்பினர்.
