/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
குறுக்கு வழியில் பதவிக்கு வர துடிக்கும் அதிகாரி!
/
குறுக்கு வழியில் பதவிக்கு வர துடிக்கும் அதிகாரி!
PUBLISHED ON : ஜன 19, 2025 12:00 AM

பில்டர் காபியை உறிஞ்சியபடியே, ''பாலியல் விவகாரத்தை மூடி மறைச்சுட்டார் ஓய்...'' என, விவாதத்தை ஆரம்பித்தார் குப்பண்ணா.
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''துாத்துக்குடி மாவட்டத்தில் இருக்கிற பிற்படுத்தப்பட்டோர் மாணவ - மாணவியர் விடுதிகள்ல, வார்டன்கள் பற்றாக்குறை இருக்கு... கோவில்பட்டி தாலுகா வுல, அஞ்சு விடுதிகளுக்கு ஒரு வார்டன் தான் இருக்கார் ஓய்...
''இதுல ஒரு விடுதியில் தங்கி படிச்ச கல்லுாரி மாணவியிடம், வார்டன் எல்லை மீறியிருக்கார்... இதை, தட்டிக் கேட்க வந்த மாணவியின் உறவுக்கார பெண்ணிடமும் சில்மிஷத்துல ஈடுபட்டிருக்கார் ஓய்...
''இது சம்பந்தமா, விடுதி மாணவியர் சிலர் துறையின் மாவட்ட அதிகாரி யிடம் புகார் குடுத்திருக்கா... ஆனா, அந்த அதிகாரிக்கு தேவையானதை சில்மிஷ வார்டன் முறையா செய்து தந்துடறதால, புகாரை அதிகாரி மூடி மறைச்சுட்டாராம்... இதனால, வார்டனுக்கு எதிரா போராட்டம் நடத்த மாணவியர் தயாராகிண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஏகத்துக்கும் தோண்டி எடுக்கிறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியில், ஏராளமான தனியார் கல் குவாரிகள், ஜல்லி கிரஷர்கள் செயல்படுது... இங்க அரசால் அனுமதிக்கப்பட்டதை விட அதிகமான பாறைகளை வெடி வச்சு, ஜல்லிகள் மற்றும் எம்.சாண்ட் தயாரிக்கிறாங்க பா...
''இப்படி, 24 மணி நேரமும் இயங்கும் கிரஷர்களால காற்று மாசுபடுறதும் இல்லாம, சுத்தி இருக்கிற வீடுகளின் சுவரிலும் விரிசல் விழுதுன்னு கிராம மக்கள் புலம்புறாங்க... அதுவும் இல்லாம, கல் குவாரிகள்ல தேங்கும் மழைநீரில் மூழ்கி, பள்ளி சிறுவர்கள் இறந்து போயிடுறாங்க... 'இது பத்தி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு குடுத்தும், எந்த நடவடிக்கையும் இல்ல'ன்னு கிராம மக்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஐகோர்ட் உத்தரவை மதிக்கலைங்க...'' என, கடைசி தகவலுக்கு கட்டியம் கூறினார் அந்தோணிசாமி.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''கோவை மாநகராட்சியில் இருந்த ஒரு பொறியாளர், கடந்த அ.தி.மு.க., ஆட்சிக்கு செல்லப்பிள்ளை மாதிரி இருந்தார்... தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், அவரை வேற வேற ஊர்களுக்கு துாக்கி அடிச்சாங்க...
''இப்ப, சென்னையை ஒட்டியிருக்கிற ஒரு மாநகராட்சியில், நிர்வாக பொறியாளரா இருக்காருங்க... இவர், டிப்ளமா படிச்சுட்டு ஓவர்சீயரா அரசு பணியை துவங்கியவருங்க...
''இவரது பி.இ., தேர்வு முடிவு வர்றதுக்கு முன்னாடியே, மாநகராட்சியில் உதவி பொறியாளர் பதவி தந்தது சர்ச்சையை ஏற்படுத்துச்சு... இப்ப, துறை வி.ஐ.பி.,யை பார்த்து, கோவை மாநகராட்சியின் கண்காணிப்பு பொறியாளர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்திட்டு இருக்காருங்க...
''இப்படி, குறுக்கு வழியில் பதவியை பிடிக்கிற இவரால, சீனியாரிட்டி பாதிக்கப்படுற மற்ற அதிகாரிகள், ஐகோர்ட்ல வழக்கு போட்டிருக்காங்க... விசாரிச்ச ஐகோர்ட், அந்த பொறியாளரை பதவியிறக்கம் செய்யும்படி உத்தரவு போட்டுச்சு... ஆனா, அதை அரசு தரப்பு கண்டுக்காம இருக்குதுங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் மவுனித்தது.

