/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
காஞ்சியில் புதை மின் வழித்தடம் அமைக்கும் பணி... கண்துடைப்பு!
/
காஞ்சியில் புதை மின் வழித்தடம் அமைக்கும் பணி... கண்துடைப்பு!
காஞ்சியில் புதை மின் வழித்தடம் அமைக்கும் பணி... கண்துடைப்பு!
காஞ்சியில் புதை மின் வழித்தடம் அமைக்கும் பணி... கண்துடைப்பு!
PUBLISHED ON : நவ 17, 2024 12:00 AM

காஞ்சிபுரம்,
காஞ்சிபுரத்தில், நிலத்திற்கடியில் மின் வடம் புதைக்கும் பணிக்கு, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், மின் விரிவாக்கப் பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. அரசிடம் 103 கோடி ரூபாய் கேட்டதற்கு, வெறும் ஆறு கோடி ரூபாய் மட்டும் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அரைகுறையாக முடிக்கப்பட்ட பணியால், நான்கு ராஜ வீதிகளில், கோவில் தேர்கள் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளன.
காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், பஞ்சுப்பேட்டை, ஓரிக்கை, பெரியார் நகர், காஞ்சிபுரம் ரயில்வே சாலை, வையாவூர் ஆகிய துணை மின் நிலையங்களில், 1.25 லட்சம் மின் இணைப்புகள் உள்ளன.
இதில், 25,000க்கும் மேற்பட்ட இடங்களில், வணிக மின் இணைப்புகள் உள்ளன. பல ஆயிரம் மின் கம்பங்களின் வாயிலாக, மின் வழித்தடங்கள் செல்கின்றன. ஒவ்வொரு மின் கம்பத்திற்கும், 100க்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் செல்கின்றன.
ஒவ்வொரு மழைக்காலத்திலும் மின் வெட்டு, மின்னழுத்த பிரச்னை ஏற்படுகிறது. தவிர, காற்றில் மின் கம்பிகள் அறுந்து விழுந்தால், அதை சீரமைத்து மின் வினியோகத்தை சீராக்குவதற்குள், பெரிதும் சிரமம் ஏற்படுகிறது.
தனி நிதி ஒதுக்கீடு
தவிர, காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் மற்றும் ஏகாம்பரநாதர் கோவில்களில் பிரம்மோற்சவ நாட்களில், தேர் செல்வதில் இடையூறு ஏற்படாமல் இருக்க, மின் வழித்தடங்களை மாற்றி அமைக்கவும், மின் வினியோகத்தை நிறுத்த வேண்டியதாகிறது.
இதனால், தேர் செல்லும் வழியிடங்கள் தவிர்த்து, பிற பகுதி மின் நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
இது போன்ற பிரச்னைகளை தவிர்க்கும் வகையில், செங்கழுநீரோடை வீதி, நெல்லுக்கார தெரு, கிழக்கு ராஜவீதி, மேற்குராஜ வீதி ஆகிய நான்கு ராஜவீதி பகுதிகளில், நிலத்திற்கடியில் மின் கேபிள் புதைக்க வேண்டும், என பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இது சம்பந்தமாக, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ., 2022ம் ஆண்டு சட்டசபை கூட்ட தொடரில், கோரிக்கை விடுத்தார். தவிர, மின்சார துறை அமைச்சரை தனியாக சந்தித்து, மனுக்களும் வழங்கி இருந்தார்.
இதை ஏற்று, காஞ்சிபுரம் மின் பகிர்மான வட்டத்தைச் சேர்ந்த பொறியாளர் வல்லுனர்கள், திட்ட அறிக்கை தயாரித்தனர்.
அதில், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில் முதல், நான்கு ராஜவீதிகள் முடிய, 5 கி.மீ., துாரத்திற்கு, நிலத்திற்கடியில் மின் கேபிள் புதைக்க 103 கோடி ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசிற்கு பரிந்துரை செய்தனர். இருப்பினும், தனி நிதி ஒதுக்கீடு கிடைக்கவில்லை.
மாறாக, கோவில் தேர் செல்லும் வழித்தடங்களை மட்டும் மேம்படுத்தும் நோக்கத்தில், ஒரு கோவிலுக்கு தலா 2 கோடி என, மூன்று கோவில்களுக்கு, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இந்த நிதியை பயன்படுத்தி கச்சப்பேஸ்வரர் கோவில் வளைவு முதல், மேற்கு ராஜவீதி வரை; கங்கை கொண்டான் மண்டபம் முதல், ஆதிகாமாட்சி கோவில் வரை மட்டுமே மின் கேபிள் புதைக்கும் வழித்தடமாக மாற்றப்பட்டு உள்ளது.
கிழக்கு ராஜ வீதி, நெல்லுக்கார தெரு, பூக்கடை சத்திரம், காமராஜர் வீதி, மூங்கில் மண்டபம், காந்தி சாலை உள்ளிட்ட பகுதிகளில் புதை வழித்தடம் அமைக்கும் பணி, நிதி இல்லாததால் அரைகுறையாக நிற்கிறது.
பணிகள் நிறைவு
அதேபோல், செங்கழுநீரோடை வீதி, கங்கை கொண்டான் மண்டபம், பெரிய காஞ்சிபுரம் காய்கறி மார்க்கெட் இடையே, தர்கா அமைந்துள்ளது.
இங்கு, ஆண்டுதோறும் சந்தனக்கூடு உற்சவமும் நடக்கிறது. இந்த தெரு மிகவும் குறுகலாக இருக்கிறது. சாலையோரம் மின் கம்பங்கள் இடையூறாக உள்ளன. இந்த குறுக்கு தெரு பகுதிக்கு, புதை வழித்தடம் அமைத்தால், வாகனங்கள் செல்ல சவுகரியமாக இருக்கும் என, அப்பகுதியில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இது குறித்து, காஞ்சி புரம் மின் பகிர்மான வட்ட மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரம்பரிய கோவில் நகரங்கள் சீரமைக்கும் பணியில், வரதராஜ பெருமாள் கோவில், ஏகாம்பரநாதர் கோவில் ஆகிய மாட வீதிகளில், நிலத்திற்கடியில் மின் கேபிள் வழித்தடம் ஏற்படுத்தி உள்ளோம்.
இதையடுத்து, ராஜவீதிகளில் அமைக்க, 103 கோடி ரூபாய் நிதி கேட்டு, அரசிற்கு பரிந்துரை செய்தோம். அரசு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாறாக, கோவில் தேர் செல்லும் வழித்தடத்தை மேம்படுத்த அரசு, ஆறு கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
ஒதுக்கீடு செய்த நிதியை பயன்படுத்தி, கச்சபேஸ்வரர் கோவில், கங்கை கொண்டான் மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் புதை வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
விசாலமான பகுதிகளில் திறந்தவெளி மின் வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது. இனிமேல் ஒதுக்கீடு செய்யப்படும் நிதியை பயன்படுத்தி, எஞ்சி இருக்கும் பணிகள் நிறைவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

