/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சாய்பாபா கோவில் அருகில், 'சரக்கு' விற்கலாமா?
/
சாய்பாபா கோவில் அருகில், 'சரக்கு' விற்கலாமா?
PUBLISHED ON : நவ 25, 2024 12:00 AM

“எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க...” என்றபடியே, இஞ்சி டீயை உறிஞ்சினார் அந்தோணிசாமி.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“தமிழகத்துல, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் செய்ய, சட்டசபை தொகுதிகள் வாரியா, சிறப்பு திருத்த முகாம் நடக்குதுங்க...
“சத்துணவு அமைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் இந்த பணியில ஈடுபடுறாங்க... இவங்களுக்கு, முக்கிய கட்சிகளின் பூத் ஏஜன்ட்களும் உதவுறாங்க...
“இவங்க, இறந்தவங்க பெயர்களை வாக்காளர் பட்டியல்ல இருந்து நீக்க முட்டுக்கட்டை போடுறாங்களாம்... அதாவது, தேர்தலப்ப ஓட்டுக்கு கட்சிகள் பணம் தர்றது இப்ப வாடிக்கையாகிடுச்சே...
“அதனால, இறந்தவங்க பெயர்கள்லயும் ஓட்டுக்கான பணத்தை வாங்கி, தங்களது பாக்கெட்டுல போட்டுக்கலாம் என்ற, 'தொலைநோக்கு' பார்வையோட தான், இறந்தவங்க பெயர்களை நீக்க, பூத் ஏஜன்ட்கள் தடை போடுறாங்க...” என்றார், அந்தோணிசாமி.
“பேட்டரி வாகனங்களால, அவதிப்படுறாங்க பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“தமிழகம் முழுக்க பல கிராம ஊராட்சிகளுக்கு, துாய்மை பணிக்காக பேட்டரி வாகனங்கள் வழங்கியிருக்காங்க... இதுல, பல வாகனங்கள் பழுதாகிடுச்சு பா...
“பெரும்பாலும் பேட்டரிகள் தான், 'அவுட்' ஆயிடுது... பேட்டரியை மாத்த, 30,000 ரூபாய் வரை தேவைப்படுது... ஆனா, பல ஊராட்சிகள்ல இதுக்கான நிதி ஒதுக்கீடு இல்ல பா...
“வாகனங்களை சப்ளை செய்த நிறுவனத்தினரை தொடர்பு கொண்டு, பழுது நீக்கி தரும்படி கேட்டாலும், அவங்க கண்டுக்க மாட்டேங்கிறாங்க... தொடர் புகார்களால, அடுத்து பேட்டரி வாகனங்கள் வாங்க, 'டெண்டர்'கள் வந்தா, அவற்றை நிராகரிக்க, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் முடிவு பண்ணியிருக்காங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“மதுபான கூடத்தின் விளம்பர பலகையை ராத்திரியோட ராத்திரியா துாக்கிட்டாவ வே...” என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“சென்னை, ஈஞ்சம்பாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து போகும் சாய்பாபா மற்றும் மடபுரத்து கோவில்கள் இருக்கு... இதுக்கு பக்கத்துல, 'டூரிஸம் சொசைட்டி' என்ற பெயரில் தனியார் மதுபான கூடம் ஒண்ணு இருக்கு வே...
“இளைஞர்களை கவரும் விதமா நிறைய சலுகைகளை அறிவிச்சு, அது தொடர்பான விளம்பர பலகையை வெளியில வச்சிருந்தாவ...
“வழிபாட்டு தலங்கள் பக்கத்துல மது கடைகள் இருக்க கூடாதுன்னு விதிமுறை இருக்கிறதால, இந்த மதுபான கூடத்தை அகற்றணும்னு போலீஸ் அதிகாரிகளுக்கும், 'டாஸ்மாக்' நிர்வாகத்துக்கும் இந்த பகுதி மக்கள் பலமுறை மனுக்கள் குடுத்தும், நடவடிக்கை இல்ல வே...
“பொறுத்து பொறுத்து பார்த்து வெறுத்து போன மக்கள், விளம்பர பலகை மற்றும் மதுபான கூடத்தை அகற்ற கோரி, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் கமிஷனரிடம் மனு குடுத்திருக்காவ...
“ஆர்ப்பாட்டம் நடந்தா, அரசுக்கு கெட்ட பெயர் வரும்கிறதால, ராத்திரியோட ராத்திரியா, அந்த மதுபான கூடத்தின் விளம்பர பலகையை போலீசார் அகற்றிட்டாவ... 'மதுபான கூடத்தை அகற்றவும் சட்டரீதியா நடவடிக்கை எடுக்கிறோம்'னு சொல்லி, தற்போதைக்கு ஆர்ப்பாட்டத்தை ரத்து பண்ண வச்சிருக்காவ வே...” என முடித்தார், அண்ணாச்சி.
பேச்சு முடிய, பெஞ்ச் காலியானது.