PUBLISHED ON : ஜூன் 02, 2025 12:00 AM

திருவாலங்காடு:தமிழகத்தில் சேவல் சண்டை போட்டிக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் மணவூர் கிராமத்தில் சேவல் சண்டை போட்டிக்கு சிறப்பு அனுமதி வழங்க வேண்டும் என, போட்டி ஏற்பாட்டாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அனுமதி பெற்றனர்.
இதையடுத்து மணலுார் கிராமத்தில் நேற்று முன்தினம் சேவல் சண்டை போட்டி துவங்கி இரண்டு நாட்கள் நடந்தது. இப்போட்டியில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா, கர்நாடக உட்பட அண்டை மாநிலங்களில் இருந்தும் சேவல் வளர்ப்போர் மணவூர் களத்தில் குவிந்தனர்.
150க்கும் மேற்பட்ட சேவல்கள் போட்டியில் பங்கேற்றது. வெற்றி பெற்ற சேவல்களின் உரிமையாளர்களுக்கு இறுதியில் பரிசு வழங்கப்பட்டது. பாதுகாப்பு பணியில் திருவாலங்காடு போலீசார் ஈடுபட்டனர்.