தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ சி.எம்.டி.ஏ.,விடம் ரூ.1 லட்சம் வாடகை கேட்ட நிறுவனம்!

 சி.எம்.டி.ஏ.,விடம் ரூ.1 லட்சம் வாடகை கேட்ட நிறுவனம்!

 சி.எம்.டி.ஏ.,விடம் ரூ.1 லட்சம் வாடகை கேட்ட நிறுவனம்!


PUBLISHED ON : ஜன 07, 2026 03:04 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 07, 2026 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மெது வடையை கடித்தபடியே, ''கட்சி நிதி கேட்டு மிரட்டறா ஓய்...'' என, பேச்சை ஆரம்பித்தார் குப்பண்ணா.

''ஆளுங்கட்சிக்காரங்க தானே பா...'' என, பட்டென கேட்டார், அன்வர்பாய்.

''ஆமா... சேலம் மாவட்டம், சந்தியூரில், சுரங்கம் மற்றும் புவியியல் துறையின், மண்டல இணை இயக்குநர் ஆபீஸ் இருக்கு... போன வாரம் இங்க, கல் குவாரி உரிமையாளர்களை அதிகாரிகள் அழைச்சு ஆலோசனை நடத்தினா ஓய்...

''அப்ப, 'ஜல்லி, எம்.சாண்ட் ஏத்திண்டு போற வாகனங்களுக்கு, ஜி.பி.எஸ்., கருவி பொருத்தணும்'னு அறிவுறுத்தினா... அதிகாரிகள் கிளம்பியதும், கனிம வளத் துறை அமைச்சரின் ஆட்கள்னு சொல்லிண்டு வந்த ஆளுங்கட்சியினர் சிலர், குவாரி உரிமையாளர்களிடம் பேசியிருக்கா ஓய்...

''அப்ப, 'பாறை உடைக்க ஏலம் எடுத்த குவாரிகள் எல்லாம், ஏக்கருக்கு, 3 லட்சம் ரூபாய் கட்சிக்கு தேர்தல் நிதி தரணும்... இல்லாட்டி, 'ட்ரோன்' மூலம் சர்வே பண்ணி, அபராதம் விதிப்போம்'னு மிரட்டியிருக்கா ஓய்...

''சேலம் மாவட்டத்துல, 75 குவாரிகள் இருக்கு... சில குவாரிகள், 5 ஏக்கர்லகூட இருக்கு... ஏக்கருக்கு, 3 லட்சம்னா, 15 லட்சம் ரூபாய் வரைக்கும் தரணும் ஓய்...

''இதனால, 'ஏற்கனவே அரசுக்கு நிறைய வரிகள் கட்டறோம்... இப்ப, அதிகாரிகள் உதவியுடன் இப்படி மிரட்டினா எப்படி'ன்னு குவாரி உரிமையாளர்கள் புலம்பறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''சட்டுபுட்டுன்னு கூட்டணியை அறிவிக்கணும்னு கேட்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''தே.மு.தி.க., பொதுச்செயலர் பிரேமலதா, ஊர் ஊரா போய் பிரசாரம் பண்றாங்கல்ல... ஆனா, இன்னும் கூட்டணியை இறுதி பண்ணல... பிரேமலதா கூட்டங்களுக்கு செலவு செய்ய முடியாம, கட்சி நிர்வாகிகள் தவிக்கிறாங்க...

''இதனால அவங்க, 'விஜயகாந்த் மீதான பாசத்தால, கட்சிக்கு நிறைய செலவு பண்ணி கடனாளியா மாறிட்டோம்... அதனால, வர்ற 9ம் தேதி கடலுார்ல நடக்கிற கட்சி மாநாட்டுல, எந்த கூட்டணியில நாம சேரப் போறோம்னு பிரேமலதா தெளிவா அறிவிக்கணும்... இனியும் இழுத்தடிச்சா, கட்சிக்கு முழுக்கு போட்டுருவோம்'னு புலம்புறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''தினசரி, 1 லட்சம் ரூபாய் வாடகை கேட்டிருக்காவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.

''எந்த ஹோட்டல்ல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''முழுசா கேளும்... சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான, சி.எம்.டி.ஏ.,வுக்கு சொந்தமான, 'தாளமுத்து நடராஜன்' மாளிகை, எழும்பூர்ல இருக்குல்லா...

''இதுல இருந்த ஐந்தாவது தளத்தை, மத்திய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு கழகமான, 'ஹட்கோ' நிறுவனத்துக்கு ஏற்கனவே சி.எம்.டி.ஏ., வித்துட்டு... சில வருஷங்களுக்கு முன்னாடி இந்த தளத்தை, சி.எம்.டி.ஏ., வாடகைக்கு எடுத்து பயன்படுத்துச்சு வே...

''அப்ப, அந்த தளத்தை, 4.50 கோடி ரூபாய்ல புதுப்பிச்சாவ... இப்ப ஒப்பந்த காலம் முடிஞ்சி, அதை காலி செய்ய, ஹட்கோவிடம், சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் அவகாசம் கேட்டாவ வே. ..

''ஹட்கோ அதிகாரிகளோ, 'ஒப்பந்த காலம் முடிஞ்சிட்டதால, கூடுதலா நீங்க இருக்கிற ஒவ்வொரு நாளும், 1 லட்சம் ரூபாய் வாடகை தரணும்'னு கேட்டிருக்காவ... அதிர்ச்சியான, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், அந்த தளத்துல அவங்க செஞ்சிருந்த உள் அலங்காரங்களை எல்லாம் இடிச்சி எடுத்துட்டு இருக்காவ...

''இதை பார்த்துட்டு, 'சி.எம்.டி.ஏ.,வுல உறுப்பினர் செயலரா அன்சுல் மிஸ்ரா இருந்தப்ப எடுத்த தவறான முடிவுகள் தான், இந்த குளறுபடிகளுக்கு காரணம்'னு அதன் ஊழியர்கள் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.

பேச்சு முடிய, பெஞ்ச் அமைதியானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us