PUBLISHED ON : நவ 02, 2025 12:00 AM
பீதியை கிளப்பிய ஆட்டோ ஓட்டுநர்
பெரம்பூர்: பெரம்பூர், பேடன்பவுல் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பஜாஜ் ஆட்டோவில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் சிலர் நாட்டு வெடிகுண்டுகளை வெடித்ததாக காவல்துறை கட்டுப்பாட்டறைக்கு ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சோதனை மேற்கொண்டதில், பட்டாசு வெடித்திருப்பதை அறிந்து சற்று நிம்மதியடைந்தனர். புகார் அளித்த பெரியகுப்பத்தைச் சேர்ந்த ராஜ்குமாரை தேடி வருகின்றனர்.
வீடு புகுந்து திருடியோர் கைது
புளியந்தோப்பு: புளியந்தோப்பு, கே.பி.பார்க் குடியிருப்பைச் சேர்ந்தவர் ஆனந்த்ராஜ், 30. தாம்பரத்தில் உள்ள அண்ணன் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, 2 செட் வெள்ளி கொலுசு, தங்க கம்மல் திருடப்பட்டிருந்தது. புகாரின்படி நேற்று காலை விசாரித்த பேசின்பாலம் போலீசார், திருட்டில் ஈடுபட்ட அதே குடியிருப்பைச் சேர்ந்த ஆகாஷ், 23, விக்னேஷ், 19, ஆகியோரை கைது செய்தனர்.
1,000 கிலோ குட்கா பறிமுதல்
ஆவடி: திருமுல்லைவாயில், பாலாஜி நகரில் குட்கா பதுக்கி விற்பனையில் ஈடுபட்ட கொடுங்கையூர், முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் ஜோசப், 48, என்பவரை திருமுல்லைவாயில் போலீசார் கைது செய்து, 1,000 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 3 லட்சம் ரூபாய்.
போதை பொருளுடன் இருவர் கைது
புளியந்தோப்பு: போதை பொருள் பதுக்கி விற்ற, பட்டாளம் பகுதியைச் சேர்ந்த பெரோஸ்கான், 29, மற்றும் அவரது கூட்டாளியான புரசைவாக்கத்தைச் சேர்ந்த அழகு கலை நிபுணர் ஜெயந்தி, 33, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 8 கிராம் 'மெத் ஆம்பெட்டமைன்' பறிமுதல் செய்யப்பட்டது. ஒரு கிராம் 2,000 ரூபாய்க்கு பெங்களூரில் இருந்து வாங்கி வந்து விற்பனை செய்துள்ளனர்.
வழிப்பறி திருடர்கள் மூவர் கைது
சென்னை: அகரம் பகுதியில் பெட்டி கடை நடத்தி வருபவர் குமார், 58. இவரிடம் பணம் கேட்டு மிரட்டிய பெரவள்ளூரைச் சேர்ந்த விமல்ராஜ், 20, என்பவர் உட்பட வழிப்பறி திருடர்களான மணிகண்டன், 30, மதன்ராஜ், 38, ஆகிய மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
'ஓசி' கத்தி கேட்டு தாக்கிய ரவுடி கைது
வியாசர்பாடி: திருவாலாங்காடு, சின்னம்மாபேட்டையைச் சேர்ந்தவர் காதர்பாஷா, 21; 'கத்தி சாணை' பிடித்தல் தொழில் செய்கிறார். நேற்று காலை, வியாசர்பாடி, கூட்ஸ் சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மர்மநபர் ஒருவர் 'ஓசி'யில் கத்தி கேட்டு தகராறு செய்துள்ளார். காதர்பாஷா மறுக்கவே, மர்ம நபர் தலையில் பலமாக தாக்கி தப்பினார். விசாரித்த வியாசர்பாடி போலீசார், தாக்குதலில் ஈடுபட்ட பிரவீன்குமார், 25, என்பவரை கைது செய்தனர்.
1,000 கிலோ கஞ்சா அழிப்பு
மறைமலை நகர்: சென்னை மாநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட காவல் நிலைய எல்லையில், 197 வழக்குகளில் 1,022 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. அவற்றை, சிங்கபெருமாள் கோவில் அடுத்த தென்மேல்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவ கழிவுகள் எரிக்கும் நிறுவனத்தில், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் நேற்று தீயிலிட்டு அழிக்கப்பட்டன.

