/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
சட்டவிரோத மின் இணைப்புகளால் கோடிக்கணக்கில் இழப்பு!
/
சட்டவிரோத மின் இணைப்புகளால் கோடிக்கணக்கில் இழப்பு!
சட்டவிரோத மின் இணைப்புகளால் கோடிக்கணக்கில் இழப்பு!
சட்டவிரோத மின் இணைப்புகளால் கோடிக்கணக்கில் இழப்பு!
PUBLISHED ON : செப் 05, 2025 12:00 AM

''எ திர் அணி புள்ளிகளுடன் ரகசிய மீட்டிங் நடத்தியிருக்காரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளின் நடவடிக் கையை கண்காணிக்க, சேலத்தைச் சேர்ந்த, 'மாஜி' எம்.எல்.ஏ., ஒருத்தரை, உளவாளி மாதிரி பழனிசாமி நியமிச்சிருக்காரு... சமீபத்துல, சென்னை ஆலந்துார்ல வசிக்கும் பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முக்கிய புள்ளி ஒருத்தர், அ.தி.மு.க.,வுல சேர்ந்தாரு வே...
''இந்த புள்ளியுடன், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., செயலரும், தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருத்தரும் கூட்டு சேர்ந்து நிறைய காரியங்களை முடிச்சு, கைநிறைய காசை அள்ளியிருக்காவ... இது சம்பந்தமா, மூணு பேரும் ஒரு நட்சத்திர ஹோட்டல்ல அடிக்கடி கூடி மீட்டிங்கும் போட்டிருக்காவ வே...
''இதை எல்லாம், சேலம் புள்ளி ஆதாரங்களுடன் பழனிசாமிக்கு அனுப்பிட்டாரு... இதை கேள்விப்பட்டு, அ.தி.மு.க., மாவட்ட புள்ளி அதிர்ச்சியில இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''கந்தன், இப்படி உட்காருங்க...'' என, நண்பருக்கு இடம் தந்த அன்வர்பாயே, ''வழக்கு இருந்தும், குவாரிகள்ல நடக்கிற வசூல் மட்டும் குறையல பா...'' என்றார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''புதுக்கோட்டையைச் சேர்ந்த மணல் தொழிலதிபரின் ஆதரவாளர்கள், குவாரி நடத்துறவங்களிடம் பட்டா நிலத்துல மண் எடுத்தால், 40 சதவீதமும், அரசு புறம்போக்கு நிலத்துக்கு, 70 சதவீதமும், 'ராயல்டி' தொகை வசூலிக்கிறாங்க... இது சம்பந்தமா, தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் சார்புல, தமிழக அரசின் சுரங்கத் துறை இயக்குநருக்கு புகார் அனுப்பி இருக்காங்க பா...
''அதுல, 'குவாரிகள் ராயல்டி விவகாரம் தொடர்பா, சென்னை ஐகோர்ட்ல வழக்கு நடக்குது... அப்படி இருக்கிறப்ப சட்டத்துக்கு புறம்பா, சிலர் ராயல்டி தொகையை மிரட்டி வசூலிக்கிறாங்க... இந்த வசூல் புள்ளிகள் பலரும் பெரும்பாலும் மாவட்ட சுரங்கத்துறை அலுவலகத்துல புரோக்கர்களா சுத்திட்டு இருக்கிறவங்க தான்... அவங்க மீது நடவடிக்கை எடுக்கணும்'னு கேட்டிருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மின் வாரியத்துக்கு கோடிக்கணக்குல இழப்பு ஏற்படறது ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில், 150-க்கும் மேற்பட்ட கட்டடங்களை மாநகராட்சி அனுமதி இல்லாம கட்டி யிருக்கா... இதனால, இந்த கட்டடங்களுக்கு மாநகராட்சியிடம் பணி நிறைவு சான்றிதழ்களை வாங்க முடியாது ஓய்...
''ஆனா, அந்த சான்றிதழ் இல்லாமலே, இந்த கட்டடங்களுக்கு மின் இணைப்பு குடுத்துடறா... இது தொடர்பா, சமூக ஆர்வலர்கள் தந்த புகாரின் அடிப்படையில, சில கட்டடங்களின் மின் இணைப்புகளை மட்டுமே, 'கட்' பண்ணினா ஓய்...
''இதுல வேடிக்கை என்னன்னா, திருநெல்வேலி மாவட்ட மின் வாரிய தலைமை அலுவலகம் இருக்கற தியாகராஜ நகர் ரோட்டுலயே, மூணு கட்டடங்களுக்கு பணி நிறைவு சான்றிதழ் இல்லாம, மின் இணைப்பு குடுத்திருக்கா... இது சம்பந்தமா மின் வாரிய அதிகாரிகளுக்கு புகார்கள் போயும், நடவடிக்கை இல்ல... இப்படி முறைகேடா தரப்படும் மின் இணைப்புகளால, மின் வாரியத்துக்கு கோடிக்கணக்குல வருவாய் இழப்பு ஏற்படறது ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.