/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக விளையாட்டு திடலை அழிப்பதா? அன்புமணி கண்டனம்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக விளையாட்டு திடலை அழிப்பதா? அன்புமணி கண்டனம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக விளையாட்டு திடலை அழிப்பதா? அன்புமணி கண்டனம்
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்காக விளையாட்டு திடலை அழிப்பதா? அன்புமணி கண்டனம்
PUBLISHED ON : மே 27, 2025 12:00 AM
சென்னை, திருவேற்காடு, கோலடி பகுதியில் விளையாட்டு திடலை அழித்து, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதா என, பா.ம.க., தலைவர் அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட கோலடி கிராமத்தில், 13 ஏக்கரில் உள்ள விளையாட்டுத் திடலை சீரழித்து, அதில் 8.48 ஏக்கரில் பாதாள சாக்கடை, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க, நகராட்சி முடிவு செய்துள்ளது. மக்களின் எதிர்ப்பையும் மீறி, இதை செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் பிடிவாதம் காட்டுவது கண்டிக்கத்தக்கது.
விளையாட்டு திடல் அருகில் 169 ஏக்கரில் கோலடி ஏரி உள்ளது. திருவேற்காடு நகரத்தின் குடிநீர், நிலத்தடி நீர் ஆதாரமாக இந்த ஏரி திகழ்கிறது. அதன் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், ஏரி மாசு படுவதுடன், நிலத்தடி நீரின் தரமும் பாதிக்கப்படும். அருகில் உள்ள, காலை உணவு வழங்குவதற்கான தொகுப்பு சமையல் கூடம், குடியிருப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.
திருவேற்காடு மின் வாரிய அலுவலகத்திற்கு அருகில், கூவம் நதிக்கரையோரம் அரசுக்கு சொந்தமான ஏழு ஏக்கரில் இத்திட்டத்தை செயல்படுத்தலாம். ஆனால், ஊருக்கு நடுவில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க, நகராட்சி துடிப்பது ஏன்?
ஒருபுறம் தொகுதிக்கு ஓர் விளையாட்டுத் திடல் அமைக்க, கோடிக்கணக்கில் செலவழிக்கும் தமிழக அரசு, மறுபுறம் விளையாட்டுத் திடல்கள் அழிக்கப்படுவதை வேடிக்கைப் பார்ப்பது நகைமுரண்.
எனவே, தமிழக அரசு உடனடியாகத் தலையிட்டு, விளையாட்டுத் திடலில் கழிவுநீர் சுத்திகரிக்கும் நிலையம் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.