/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆசிரியர் பணி நிரவலில் நடந்த தில்லாலங்கடி!
/
ஆசிரியர் பணி நிரவலில் நடந்த தில்லாலங்கடி!
PUBLISHED ON : ஆக 11, 2024 12:00 AM

''கேஸ் போட்டாலும், போடாம விட்டாலும் போலீசார் காட்டுல மழை தானுங்க...'' என்றபடியே, பெஞ்சில் இடம் பிடித்தார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில இருக்கிற அரசு துவக்கப் பள்ளியில, பெண் சமையலருக்கும், தலைமை ஆசிரியருக்கும் தவறான தொடர்பு இருக்கிறதா அந்த பெண்ணின் கணவருக்கு சந்தேகம்...''விவகாரம் முத்தி போய், சமீபத்துல பள்ளிக்குள்ள புகுந்த கணவர், தலைமை ஆசிரியரை பின்னி எடுத்துட்டாருங்க... முகத்துல வாங்கிய கும்மாங்குத்துல, 'தலைமை'க்கு மூணு தையல் போட்டாங்க...
''விவகாரத்தை கேள்விப்பட்டு கொங்கணாபுரம் போலீசார் வரவே, 'கேஸ் வேண்டாம்'னு தலைமை மறுத்திருக்காருங்க... போலீசாரோ, 'இப்படி முகத்தை அடிச்சு உடைச்சிருக்காரு... கேஸ் வேண்டாம்னா என்ன சார் அர்த்தம்'னு இழுத்திருக்காங்க...''கற்பூரம் மாதிரி புரிஞ்சுக்கிட்ட தலைமை, 'கவனிப்பை' கச்சிதமாபண்ணிடவே, போலீசாரும் வழக்கு எதுவும் போடாம, 'அபவுட்டர்ன்' அடிச்சு திரும்பிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாக்காளர்களையும் சேர்த்து வளைக்குறாங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''அடுத்து நடக்க இருக்கிற ஊரக உள்ளாட்சி தேர்தல்ல, தி.மு.க., கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறணும்னு, கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு தலைமை உத்தரவு போட்டிருக்குது... அதுக்காக, 'மாற்று கட்சிகள்ல இருந்து நிர்வாகிகள் மட்டுமில்லாம, வாக்காளர்களையும் கொத்து கொத்தா அள்ளிட்டு வாங்க'ன்னும் உத்தரவு போட்டிருக்குது பா...
''துாத்துக்குடி மாவட்டத்துல முதல் கட்டமா, கடம்பூர் பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க., ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர் மட்டுமில்லாம, அதே ஊரைச் சேர்ந்த 1,500 வாக்காளர்களை அமைச்சரும், மாவட்ட செயலருமான கீதா ஜீவன் முன்னி லையில் தி.மு.க.,வுல சேர்த்திருக்காங்க...''அடுத்த கட்டமா, கோவில்பட்டி, விளாத்திகுளம் தொகுதிகள்ல இருக்கிற அ.தி.மு.க.,வைச் சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகளையும், வாக்காளர்களையும் வளைக்குற முயற்சிகள் நடந்துட்டு இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''ஆசிரியர்கள் பணி நிரவல்ல ஏகப்பட்ட தில்லுமுல்லுகள்நடந்திருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த ஊருல வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியா இருக்கிற ஆசிரியர்களை, தேவை இருக்கிற பள்ளிகளுக்குமாற்றி பணிநிரவல் செய்யும்படி, கல்வித்துறை உத்தரவுபோட்டது... இதுல, மதுரையில நிறையதில்லாலங்கடி வேலைகள் நடந்திருக்கு ஓய்...
''அதாவது, அதிகமா உபரி ஆசிரியர்கள் இருந்த பள்ளிகளை அதிகாரிகள் கண்டுக்கல... அதே நேரம், ஒண்ணு, ரெண்டு உபரி ஆசிரியர்கள் இருந்த பள்ளிகளின் ஆசிரியர்களை பணிநிரவல்னு சொல்லி பல கி.மீ., தள்ளி துாக்கி அடிச்சுட்டா ஓய்...
''இதுல, குறிப்பிட்ட 10க்கும் மேற்பட்ட பள்ளி நிர்வாகங்களுக்கு கல்வி அதிகாரிகள் சலுகை காட்டி, உபரி ஆசிரியர்களை மறைச்சுட்டா... இதனால, சொற்பமான உபரி ஆசிரியர்களை பறி
கொடுத்த பள்ளி நிர்வாகிகள், கல்வித்துறை உயர் அதிகாரிகளுக்கும், முதல்வரின் தனிப்பிரிவுக்கும் புகார்கள் அனுப்பியிருக்கா...
சீக்கிரமே இது சம்பந்தமா மதுரையில விசாரணை நடக்கும்னு பேசிக்கறா ஓய்...''
என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் அரட்டை முடிய, பெஞ்ச் காலியானது.