/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு!
/
அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கிய தீபாவளி பரிசு!
PUBLISHED ON : அக் 24, 2024 12:00 AM

''இலவச திருமண விழாவை, அமைச்சரும்,கலெக்டரும் புறக்கணிச்சுட்டாவ வே...'' என்றபடியே, கருப்பட்டி காபியை உறிஞ்சினார் பெரியசாமி அண்ணாச்சி.
''எந்த ஊருலங்க...'' எனகேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகம் முழுக்க அறநிலையத் துறை சார்புல, போன 21ம் தேதிஇலவச திருமணங்களைநடத்தி வச்சாங்கல்லா... சென்னையில நடந்த திருமண விழாவுல, முதல்வர் ஸ்டாலினே கலந்துக்கிட்டாரு வே...
''சிவகங்கை மாவட்டம்,கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மன் கோவில்ல, 21 ஜோடிகளுக்கு இலவச திருமணங்கள் நடந்துச்சு...இதுல, மாவட்ட அமைச்சர்பெரியகருப்பன், கலெக்டர் உள்ளிட்டோர் கலந்துக்கிட்டு, திருமணத்தை நடத்தி வைப்பாங்கன்னு ஜோடிகள் எதிர்பார்த்துட்டு இருந்தாவ வே...
''ஆனா, இந்த கோவில்அறங்காவலர் குழுவுக்குதலைவர், ஐந்து உறுப்பினர்களை நியமிக்கணும்... அதுல, மூணு உறுப்பினர்களை மட்டுமே நியமிச்சிருக்காவவே...
''எஸ்.சி., சமுதாயத்துக்குஉறுப்பினர் பதவி வழங்காததைக் கண்டிச்சு,கொல்லங்குடி முழுக்கவேஅன்னைக்கு போஸ்டர்ஒட்டியிருந்தாவ... இதைகேள்விப்பட்டு அமைச்சரும், கலெக்டர்ஆஷா அஜித்தும் திருமணவிழாவை புறக்கணிச்சுட்டாவ... அறநிலையத் துறை அதிகாரிகள் மட்டும் வந்து, திருமணங்களை நடத்தி வச்சாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''புது அமைச்சராவது வயித்துல பால் வார்ப்பாரான்னு காத்துண்டு இருக்கா ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார் குப்பண்ணா.
''ஆவின் விவகாரமா பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஆமா... அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு, 50 சதவீதமா இருந்த அகவிலைப்படியை, 53 சதவீதமா உயர்த்தியிருக்கால்லியோ... இதை, கடந்த ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு, நிலுவைத்தொகையுடன் வழங்க முதல்வர் ஸ்டாலின், கடந்த 18ம் தேதி உத்தரவு போட்டார் ஓய்...
''இந்த உத்தரவை, ஆவின் ஊழியர்களுக்கும்சேர்த்து அமல்படுத்த, புதுசா வந்திருக்கற அமைச்சர் ராஜகண்ணப்பன் உத்தரவு போடணுமாம்...'தீபாவளி நேரத்துல, நாலு மாச நிலுவைத் தொகையோட அகவிலைப்படி உயர்வு கிடைச்சா, எங்களுக்கு ரொம்பவே ஒத்தாசையா இருக்கும்'னு ஆவின் ஊழியர்கள் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எல்லாருக்கும்அட்வான்சா தீபாவளி பரிசு வழங்கிட்டாருங்க...''என, கடைசி தகவலுக்குவந்தார் அந்தோணிசாமி.
''யாரை சொல்றீர் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''பள்ளிக்கல்வித் துறைஅமைச்சர் மகேஷை தான்சொல்றேன்... கடந்த ஞாயிற்றுக்கிழமை, சொந்த ஊரான திருச்சிக்கு அமைச்சர் வந்திருந்தாருங்க...
''மாவட்டத்துல இருக்கிற அனைத்து கல்வித்துறை அதிகாரிகளையும், அமைச்சர்வீட்டுக்கு வரும்படி உதவியாளர்கள் அழைப்புவிடுத்தாங்க... என்னமோ, ஏதோன்னு எல்லாரும் பயந்துட்டே ஆஜராகியிருக்காங்க...
''எல்லா அதிகாரிகளையும் தனித்தனியா அழைச்ச அமைச்சர், தலா ஒரு டேபிள் பேன்,பட்டாசு மற்றும் ஸ்வீட் பாக்ஸ்னு தீபாவளி பரிசுகுடுத்து, வாழ்த்தும் சொல்லி அனுப்பியிருக்காருங்க... இதே மாதிரி, இந்த மாவட்ட சீனியர் அமைச்சரும், தன் துறை ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு வழங்குவாரான்னு, அவரது துறை அதிகாரிகளும், ஊழியர்களும் காத்துட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் மேலும் சிலர்அமர, பெரியவர்கள் கிளம்பினர்.