/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அரசு அலுவலகத்தில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்!
/
அரசு அலுவலகத்தில் தி.மு.க., ஆலோசனை கூட்டம்!
PUBLISHED ON : ஜூலை 10, 2025 12:00 AM

அதிகாலையே பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள் மத்தியில், ''அங்க கேளுங்க, இங்க கேளுங்கன்னு நழுவுறாங்க பா...'' என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார், அன்வர்பாய்.
''என்ன விவகாரமுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, ஜாதிப்பூசல் உள்ளிட்ட ஏதாவது விவகாரம் புகைய துவங்கினா, அது சம்பந்தமா விசாரிச்சு, அரசுக்கு முன்கூட்டியே தகவல் தர்றது, எஸ்.பி.சி.ஐ.டி., எனப்படும் உளவுத்துறை போலீசாரின் வேலை... இதுக்கு, உள்ளூர் ஸ்டேஷன் போலீசாரின் ஒத்துழைப்பும் தேவைப்படும் பா...
''ஆனா, மதுரை சிட்டிக்குள்ள இருக்கிற சில ஸ்டேஷன்கள்ல இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார், 'நாங்க ஏன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கணும்... எதுவா இருந்தாலும், கமிஷனரின் கீழ் இயங்குற, நுண்ணறிவு பிரிவான, ஐ.எஸ்.,கிட்ட கேளுங்க'ன்னு தட்டிக் கழிக்கிறாங்க பா...
''இதனால, 'எல்லாரும் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தானே பாடுபடுறோம்... இப்படி தகவல் தர மறுத்தா எப்படி'ன்னு உளவுத்துறை போலீசார் கேட்டாலும், 'எதுவா இருந்தாலும் ஐ.எஸ்.,கிட்ட கேளுங்க'ன்னு கையை காட்டிட்டு போயிடுறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''மாணவர்களுக்கு கட்டண சலுகை குடுக்க போறாங்க...'' என, அடுத்த தகவலை பேச ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''யாருவே அது...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பேரன் காமராஜ் கனகவேல்... இவர், சென்னை அண்ணாநகர்ல, 'காமராஜர் ஐ.ஏ.எஸ்., அகாடமி'யை நடத்திட்டு இருக்காருங்க... இங்க, வர்ற 15ம் தேதி காமராஜரின் 123வது பிறந்த நாளை கொண்டாடுறாங்க...
''ஐ.ஏ.எஸ்., படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, அன்னைக்கு அகாடமி சார்புல, 'ஸ்காலர்ஷிப்' தேர்வு நடத்துறாங்க... இதுல பங்கேற்று தேர்வு எழுதும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய, 123 மாணவர்களுக்கு பயிற்சி கட்டணத்துல, 50 சதவீதம் கட்டண சலுகை தரப்போறாங்க...
''அதுவும் இல்லாம, தமிழக காங்கிரஸ் அறக்கட்டளையிடம் கல்வி உதவித்தொகை வாங்கி படிச்ச மாணவ - மாணவி யருக்கு இலவச பயிற்சியும் வழங்க இருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''நல்ல விஷயம் தானே... பண்ணட்டும்...'' என்ற குப்பண்ணா, ''அரசு அலுவலகத்துல கட்சி கூட்டத்தை நடத்தியிருக்கா ஓய்...'' என்றார்.
''அப்படின்னா ஆளுங்கட்சியினரா தான் இருப்பாவ... எந்த ஊருல வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''காஞ்சிபுரம் மாவட்டம், படப்பை ஊராட்சி அலுவலகத்தில், சமீபத்துல அப்பகுதி தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடத்தியிருக்கா... மக்கள் பிரச்னைகள் சம்பந்தமான கூட்டமா இருந்தா கூட பரவாயில்ல ஓய்...
''ஓரணியில் தமிழ்நாடு என்ற தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை சம்பந்தமா தான் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தியிருக்கா... இது சம்பந்தமான படங்கள் வெளியாகவே, 'ஊராட்சி அலுவலகத்தில், கட்சி கூட்டம் நடத்தலாமா?'ன்னு அந்த பகுதி எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''தனியா ஒரு ஹாலை வாடகைக்கு எடுத்து, கூட்டம் நடத்தி வெட்டி செலவு பண்ண வேண்டாம்னு நினைச்சுட்டாங்களோ பா...'' என்றபடியே அன்வர்பாய் எழ, மற்றவர்களும் கிளம்பினர்.