தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ 'பட்டுவாடா' பணக்கட்டில் 'உருவிய' தி.மு.க., நிர்வாகிகள்!

 'பட்டுவாடா' பணக்கட்டில் 'உருவிய' தி.மு.க., நிர்வாகிகள்!

 'பட்டுவாடா' பணக்கட்டில் 'உருவிய' தி.மு.க., நிர்வாகிகள்!

5


PUBLISHED ON : ஏப் 28, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 28, 2026 12:00 AM

5


5
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

''காங்கிரஸ் நிர்வாகி மீது கார்கே வரைக்கும் புகார் போயிட்டுல்லா...'' என்றபடியே, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''விளக்கமா சொல்லும் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.

''மதுரை மாநகரத்தில் மதுரை தெற்கு, வடக்கு, மத்தி, மேற்குன்னு நாலு சட்டசபை தொகுதிகள் இருக்கு... இங்கே போட்டியிட்ட தி.மு.க., வேட்பாளர்கள், பிரசார செலவுக்காக, மாநகர காங்., நிர்வாகி ஒருத்தரிடம், பெரும் தொகையை குடுத்திருக்காவ வே...

''அவர், தன் கட்சியின் கீழ்மட்ட நிர்வாகிகளுக்கு அதை பிரிச்சு குடுத்து, தேர்தல் பணிகளை முடுக்கி விடாம, தன் பாக்கெட்டுல போட்டுக்கிட்டாரு... இது சம்பந்தமா, மாநகர காங்., பொருளாளரான வெங்கட்ராமன், கட்சித் தலைவர் கார்கேவுக்கு, 'இ - மெயில்'ல புகாரே அனுப்பிட்டாரு...

''அதுல, 'நான் உட்பட எந்த நிர்வாகிகளையும் தேர்தல் பணிக்கு கூப்பிடாம, மாவட்ட புள்ளி தன்னிச்சையா செயல்பட்டிருக்கார்'னு சொல்லியிருக்காரு... இந்த புகார், உள்ளூர் சமூக வலைதளங்கள்ல வேகமா பரவிட்டு வே...

''இது, தேர்தல் செலவின பார்வையாளர்கள் கவனத்துக்கும் போயிட்டு... அவங்க, வேட்பாளர்களிடம், 'எவ்வளவு தொகையை யார்கிட்ட குடுத்தீங்க... அதுக்கான கணக்கெல்லாம் இருக்கா'ன்னு தோண்டி துருவிட்டு இருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.

''நல்லமணி, தள்ளி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''பண பட்டுவாடா சம்பந்தமா, இன்னும் பல இடங்கள்ல சர்ச்சைகள் நடக்குதுங்க...'' என்றார்.

''சீக்கிரம் சொல்லுங்க பா...'' என்றார்,அன்வர்பாய்.

''சிவகங்கை தொகுதியில், தி.மு.க., சின்னத்தில் போட்டியிட்ட நடிகர் கருணாசுக்கு ஆதரவா, ஓட்டுக்கு, 1,000 ரூபாய் தரும்படி தலைமையில் இருந்து உத்தரவு போட்டிருக்காங்க... இதுக்கான தொகையை, அந்தந்த ஒன்றிய செயலர்களிடமும் குடுத்துட்டாங்க...

''ஓட்டுக்கு சரியா பணம் போய் சேர்ந்திருக்கான்னு, முதல்வரின் மருமகன் நடத்தும், 'பென்' நிறுவன குழுவினர், விசாரணை நடத்தியிருக்காங்க... இதுல சில ஒன்றிய செயலர்கள், நாலஞ்சு ஓட்டுகள் இருக்கிற வீடுகளுக்கு மொத்தமா, 1,000 ரூபாயை மட்டும் குடுத்துட்டு, பல லட்சம் ரூபாயை சுருட்டிட்டாங்களாம்... மே 4ம் தேதிக்கு பிறகு, அந்த ஒன்றிய செயலர்களுக்கு, 'கல்தா' குடுக்க முடிவு பண்ணியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.

''அங்க அப்படின்னா, சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதியில் நடந்த கூத்தை கேளுங்கோ ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

''வீரபாண்டி தொகுதியில், அ.தி.மு.க., - தி.மு.க.,ன்னு ரெண்டு கட்சியினருமே, ஓட்டுக்கு தலா 1,000 ரூபாய் குடுத்தா... கடைசி நேரத்தில், தி.மு.க., தரப்பில் கூடுதலா, 500 ரூபாய் வழங்க முடிவு பண்ணினா ஓய்...

''இதுக்கான தொகையை, அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகளிடம், 500 ரூபாய் கட்டுகளா குடுத்திருக்கா... எண்ணி பார்த்தப்ப, எல்லா கட்டுகள்லயும் ஐந்து முதல் 10 நோட்டுகள் கம்மியா இருந்திருக்கு ஓய்...

''இவாளிடம் பணத்தை கொடுத்த மேல்மட்ட நிர்வாகிகள், கட்டுக்கு அஞ்சு முதல் 10 நோட்டுகளை உருவிட்டாளாம்... 'இந்த கொடுமையை எங்க போய் சொல்றது'ன்னு அவாள்லாம் புலம்பிண்டு இருக்கா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.

''வாழ்க ஜனநாயகம்...'' என்றபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us