/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தலைமை உத்தரவை மீறி பதவி வழங்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
/
தலைமை உத்தரவை மீறி பதவி வழங்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
தலைமை உத்தரவை மீறி பதவி வழங்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
தலைமை உத்தரவை மீறி பதவி வழங்கும் தி.மு.க., - எம்.எல்.ஏ.,
PUBLISHED ON : டிச 17, 2025 03:19 AM

''அ திகாரியை பந்தாடிட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''எந்த துறையில பா...'' என, கேட்டார் அன்வர்பாய்.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு பஸ் டிப்போவுல, தி.மு.க.,வின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் வச்சது தான் சட்டமா இருக்கு... சங்கத்துக்கு நடந்த தேர்தல்ல, புதுசா தேர்வான நிர்வாகிகள், தங்களை எதிர்த்து போட்டியிட்டவங்களின் பணி நேரத்தை மாத்துறது, வார விடுமுறையை மாத்துறதுன்னு பழி வாங்குறாங்க...
''இதுக்கு இடையில, உடம்பு சரியில்லாம சிகிச்சை எடுத்துக்கிட்டு, பொள்ளாச்சிக்கு வந்த அதிகாரி, ஆளுங்கட்சி சங்கத்தினருக்கு ஒத்துழைப்பு கொடுக்கல... இதனால, போக்குவரத்து துறையின் மேலிடத்துக்கு ஆளுங்கட்சி சங்கத்தினர் அழுத்தம் குடுத்து, அதிகாரியை ஒரே மாசத்துல திருப்பூருக்கு துாக்கி அடிச்சிட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஜோதிமணி, இப்படி உட்காரும்...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''மரக்கடத்தல் அதிகமா நடக்கு வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.
''எங்க ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''நீலகிரி மாவட்டம், பந்தலுார், எருமாடு, போத்துக்கொல்லி பகுதிகள், தமிழக -- கேரள எல்லையில் இருக்கு... இந்த பகுதிகள்ல, சமீபகாலமா மரக்கடத்தல் கும்பல், மரங்களை வெட்டி கடத்திட்டு இருக்கு வே...
''மாநில எல்லையா இருக்கிறதால, மரங்களை வெட்டி, சோதனை சாவடிகள் இல்லாத சாலைகள் வழியா கேரளாவுக்கு சுலபமா கடத்திட்டு போயிடுதாவ... வெட்டிய மரங்களின் அடிப்பாகங்களை, மண்ணை போட்டு மூடி மறைச்சிடுதாவ... இது, வனத்துறை ஊழியர்களுக்கு தெரிஞ்சாலும், அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு போக மாட்டேங்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''எம்.எல்.ஏ., மீது கடும் அதிருப்தியில் இருக்காங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கிற, தி.மு.க., - எம்.எல்.ஏ., ஒருத்தரது உதவியாளர் ரொம்பவே ஆட்டம் போட்டாரு... அவரை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தே தலைமை நீக்கிடுச்சு பா...
''இதனால, கட்சியினர் நிம்மதியா இருந்தாங்க... ஆனா, எம்.எல்.ஏ., கூட இப்ப சேர்ந்திருக்கிறவர், பழைய உதவியாளரே பரவாயில்லைங்கிற மாதிரி செயல்படுறாரு பா...
''கடம்பத்துார் ஒன்றிய தி.மு.க.,வில் கிழக்கு, மேற்குன்னு ரெண்டு ஒன்றிய செயலர்கள் இருந்தாங்க... இதுல, கிழக்கு ஒன்றிய செயலர் சரியா செயல்படாம இருந்ததால, அவரை மாத்திட்டு வேற ஒருத்தரை நியமிக்கும்படி, தலைமை உத்தரவு போட்டுச்சு பா...
''ஆனா, அவரை மாத்த விரும்பாத எம்.எல்.ஏ.,வும், அவரது புதிய நண்பரும், கிழக்கு ஒன்றியத்தை ரெண்டா பிரிச்சு, பழைய ஒன்றிய செயலரை கிழக்கு ஒன்றியத்துல நீடிக்க விட்டுட்டு, புதுசா உருவாக்கிய மத்திய ஒன்றியத்துக்கு பொறுப்பாளரா, புரட்சி பாரதம் கட்சியில் இருந்து வந்தவரை நியமிச்சிட்டாங்க பா...
''இப்படி, எம்.எல்.ஏ., தனக்கு வேண்டியவங்களா பார்த்து கட்சி பதவிகள் தர்றதால, அவர் மீது கட்சியினர் எல்லாம் அதிருப்தியில இருக்காங்க... இது சம்பந்தமா, தலைமைக்கும் புகார் அனுப்பி இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''ராஜேந்திரன், உம்ம சேக்காளிகள் ஹரி, ஞானஒளியை எங்க வே காணோம்...'' என நண்பரிடம் அண்ணாச்சி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.

