PUBLISHED ON : நவ 17, 2025 12:00 AM

தமிழக, காங்., முன்னாள் தலைவர் அழகிரி: ராட்சத பலத்துடன், பா.ஜ., உள்ளது. நம்மிடம் கொள்கை பலம் உள்ளது. காங்கிரஸ் அல்லாத முதல்வர்களில் ஸ்டாலின் மட்டுமே கொள்கையுடன் செயல்படுகிறார். ஸ்டாலின் நினைத்திருந்தால், பா.ஜ.,வை அரவணைத்து சென்றிருக்கலாம்... ஆனாலும், ராகுலுக்கு துணையாக நிற்கிறார். ராகுல் போல அரசியல் வரலாறு கொண்டவர், இந்தியாவிலேயே வேறு யாரும் இல்லை. கொள்கை தான் அவரது கோட்பாடு. இந்தியாவை ராகுல், வழி நடத்தும் வரை, காங்., கட்சியினருக்கு துாக்கம் வரக்கூடாது.
டவுட் தனபாலு: பீஹார் என்ற ஒரு மாநிலத்திலேயே, தங்களது கூட்டணி கட்சியை ஆட்சியில் அமர்த்த உங்க ராகுலால முடியலையே... இதுல எங்கிருந்து நாட்டை வழி நடத்தப் போறார்... அவர் வழி நடத்தும் வரை, உங்க கட்சியினர் துாங்கவே கூடாதுன்னா, ஆயுசுக்கும் அவங்களால துாங்க முடியுமா என்பது, 'டவுட்' தான்!
பொள்ளாச்சி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன்: தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, '2026 சட்டசபை தேர்தலுக்கு பின், அ.தி.மு.க., இருக்கவே இருக்காது' என, கூறியுள்ளார். நேற்று பெய்த மழைக்கு, இன்று முளைத்த காளான் அவர். அ.தி.மு.க.,வில் இருந்து கொள்ளையடித்து சென்றவர், தற்போது, அ.தி.மு.க., இருக்காது என்கிறார். கருணாநிதியால் கூட, அ.தி.மு.க.,வை அசைக்க முடியவில்லை.
டவுட் தனபாலு: 'அ.தி.மு.க.,வில் இருந்து கொள்ளையடித்து சென்றவர்'னு சொல்றீங்களே... அப்படி அவர் கொள்ளை அடிக்கிற வரைக்கும், அதை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்காம, ஏன் வேடிக்கை பார்த்துட்டு இருந்தீங்க என்ற, 'டவுட்' வருதே!
பத்திரிகை செய்தி: அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், 'அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு'வை நடத்தி வருகிறார். அவருடனிருந்த முக்கிய நிர்வாகிகள், தி.மு.க.,வில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், 2026 சட்டசபை தேர்தல் தொடர்பாக, வரும், 24ம் தேதி, தன் அமைப்பின் மாவட்டச் செயலர்கள் மற்றும் நிர்வாகிகளுடன், சென்னையில் ஆலோசனை நடத்த உள்ளார்.
டவுட் தனபாலு: பன்னீர்செல்வத்துடன் இருந்த பலரும் கழன்று ஓடிட்டாங்க... மிஞ்சியிருப்பவர்களை தக்க வைக்கவும், 'நானும் அரசியல் களத்தில் இருக்கேன்'னு காட்டிக்கவும், இது போன்ற ஆலோசனை கூட்டத்தை நடத்துறாரோ என்ற, 'டவுட்' தான் வருது!

