/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
13 வருடங்களாக பதவி உயர்வின்றி வாடும் ஊழியர்கள்!
/
13 வருடங்களாக பதவி உயர்வின்றி வாடும் ஊழியர்கள்!
PUBLISHED ON : செப் 23, 2025 12:00 AM

''ப ணிகளை இழுத்தடிக்கிறாங்க பா...'' என்றபடியே, ஏலக்காய் டீயை உறிஞ்சினார் அன்வர்பாய்.
''எந்த துறையில வே...'' என கேட்டார், பெரியசாமி அண்ணாச்சி.
''அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 'ஹைடெக் கம்ப்யூட்டர் லேப்'கள் அமைக்கும் பணியை தனியார் நிறுவனமான கெல்ட்ரானுக்கு குடுத்திருக்காங்க... 'ஸ்மார்ட் போர்டு, புரொஜக்டர், ஹெட்போன்'கள் மற்றும் 10 கம்ப்யூட்டர் உள்ளிட்ட உபகரணங்களை அமைக்க, 6 லட்சம் முதல், 12 லட்சம் ரூபாய் வரை செலவழிக்கிறாங்க பா...
''கோவையில், 291 பள்ளிகளில் இந்த பணிகளை துவங்குனாங்க... 155 பள்ளிகளில் பணிகள் முடிஞ்சு, லேப்கள் பயன்பாட்டுக்கு வந்துடுச்சு பா...
''மீதமுள்ள பள்ளிகளுக்கு, 'இன்டர்நெட் கனெக் ஷன்' வழங்குறதுல இழுபறி நிலவுது... 'நெட் இணைப்புக்கு எச்.டி.எல்.பி., என்ற கேபிள் சப்ளை தாமதம் ஆகுது'ன்னு, தனியார் நிறுவனத்தினர் சொல்றாங்க... 'லேப்களை அமைக்கிறதுக்குள்ள இந்த கல்வியாண்டில் பாதியே முடிஞ்சிடும்'னு மாணவர்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''இடம் தேர்வின் பின்னணி தெரியுமா ஓய்...'' என கேட்ட குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில், 2,000 ஏக்கரில் சர்வதேச நகரம் அமைக்க, தமிழக அரசு முடிவு பண்ணியிருக்கோல்லியோ... மதுராந்தகம் அடுத்த கருங்குழியில் இருந்து பூதலுார் செல்லும் சாலையில், இந்த நகரத்தை அமைக்க போறா ஓய்...
''அங்க, ஆளுங்கட்சியின் முக்கிய புள்ளிகள் மற்றும் அவாளுக்கு வேண்டிய கட்டுமான நிறுவனங்களுக்கு சொந்தமா பல நுாறு ஏக்கர் நிலங்கள் இருக்காம்... அதுவும் இல்லாம, அப்பகுதியில் இருக்கும் ஓ.எம்.ஆர்., சாலையை ஜி.எஸ்.டி., சாலையுடன் இணைக்கும் வகையில், 120 அடி அகலத்துக்கு புது சாலையும் அமைக்க போறா ஓய்...
''ஆனா, இந்த கட்டமைப்புகளை எல்லாம் முடிக்க, குறைஞ்சது, 10 வருஷத்துக்கு மேலாகும்... அது வரை ஆட்சி மாறாம இருந்தா தான், ஆளுங்கட்சியினரின் கனவு நிறைவேறும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கிட்டத்தட்ட, 13 வருஷமா ஊதிய உயர்வே இல்லைங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தமிழக வேளாண் துறையில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை என்ற, 'அட்மா' திட்டத்தின் கீழ், 2012ம் வருஷம், 1,300 பேரை வேலைக்கு எடுத்தாங்க... இவங்க, விவசாயிகளுக்கு புதிய தொழில்நுட்பங்களை அறிமுகம் பண்றது, விவசாயிகளை விவசாய டூர் அழைச்சிட்டு போறது, மத்திய அரசின் திட்டங்கள்ல விவசாயிகள் பெயர்களை பதிவேற்றம் பண்றதுன்னு பல பணிகளை முழு நேரமா செய்றாங்க...
''இவங்களுக்கு, 15,000 ரூபாய் மாத ஊதியமா தர்றாங்க... ஆனா, மத்திய அரசின் விதிப்படி குறைந்தபட்சம், 25,000 ரூபாய் சம்பளம் தரணுமாம்...
''இதுக்கு இடையில, ஒன்பது வருஷத்துக்கு முன்னாடி, பயிர் அறுவடை பரிசோதகர்கள்னு, 2,500 பேரை நியமிச்சு, அவங்களுக்கு தலா 19,500 ரூபாய் சம்பளம் தர்றாங்க... இவங்க, பயிர் அறுவடை நேரத்துல மட்டும் நிலத்துக்கு போய், 'சாம்பிள்' எடுத்துட்டு வந்துடுவாங்க... அப்புறமா, சும்மா தான் இருப்பாங்க...
''ஆனா, வருஷம் முழுக்க வேலை செய்யும் அட்மா திட்ட பணியாளர்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு இல்லாம, 13 வருஷமா சிரமப்படுறாங்க... 'சட்டசபை தேர்தல் வர்றதால, எங்க கோரிக்கைகளை நிறைவேற்றினா நல்லாயிருக்கும்'னு புலம்புறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.