/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பேராசிரியர்களிடம் கமிஷன் வசூலிக்கும் பெண் அதிகாரி!
/
பேராசிரியர்களிடம் கமிஷன் வசூலிக்கும் பெண் அதிகாரி!
பேராசிரியர்களிடம் கமிஷன் வசூலிக்கும் பெண் அதிகாரி!
பேராசிரியர்களிடம் கமிஷன் வசூலிக்கும் பெண் அதிகாரி!
PUBLISHED ON : நவ 04, 2024 12:00 AM

''தானம் குடுத்த மாட்டை பல்லை பிடிச்சு பார்க்கலாமா வே...'' என கேட்டபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''தப்புதான்... என்னன்னு விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்துள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி கோவில், ஹிந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுல இருக்கு... தேசிய நெடுஞ்சாலையில் இருந்து இந்த கோவிலுக்கு வர்ற வழி, மண் சாலையா இருக்கிறதால, பக்தர்கள் ரொம்பவே சிரமப்படுதாவ வே...
''இதை, தார் சாலையா மாற்றித் தரலாம்னு சில உபயதாரர்கள் முன்வந்தாவ... உடனே, அறநிலையத் துறை அதிகாரி கள், 'சாலை அமைக்க திட்ட மதிப்பீடு, வரைபடம் தயாரிச்சு தாங்க'ன்னு ஏகப்பட்ட நிபந்தனைகளை விதிச்சிருக்காவ வே...
''இதைக் கேட்ட உபயதாரர்கள், 'ஆள விடுங்க சாமி'ன்னு ஓடியே போயிட்டாவ... 'கோவிலுக்கு மனமுவந்து செய்ய வர்றவங்களிடம் இப்படி கறார் காட்டினா எப்படி'ன்னு பக்தர்கள் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''மாவட்டச் செயலர் பதவியை கைப்பற்ற காய் நகர்த்திண்டு இருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரத்திடம் இருந்து, கன்னியாகுமரி கிழக்கு மாவட்டச் செயலர் பதவியை பழனிசாமி பறிச்சுட்டா ரோல்லியோ... தற்காலிக ஏற்பாடா, மேற்கு மாவட்டச் செயலர் ஜான் ஜேக்கப்பிடமே, கிழக்கு மாவட்டத்தையும் ஒப்படைச்சிருக்கார் ஓய்...
''ஆனா, அவரால ரெண்டு மாவட்ட கட்சி பணிகளையும் சரியா கவனிக்க முடியல... இதனால, 'தளவாய்க்கு மறுபடியும் பதவி தரணும் அல்லது வேற ஒருத்தரை நியமிக்கணும்'னு மாவட்ட நிர்வாகிகள் சொல்றா ஓய்...
''இந்த பதவியை பிடிக்க, 'டாஸ்மாக்' அண்ணா தொழிற்சங்க மாவட்ட நிர்வாகி ஒருத்தர், தீவிரமா களம் இறங்கியிருக்கார்... இதுக்காக, தொழிற்சங்க மாநில நிர்வாகிகள் மற்றும் பழனிசாமியிடம் நெருக்கம் காட்ட ஆரம்பிச்சிருக்கார்... 'அனேகமா, அவரையே மாவட்டச் செயலரா நியமிக்க வாய்ப்புகள் அதிகம்'னு கட்சிக்காரா சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மணிகண்டன், இப்படி உட்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''தலா, 25,000 ரூபாய் கேட்கிறாங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''கோவை மண்டலத்துல, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் பணிபுரியும் உதவி மற்றும் இணைப் பேராசிரியர்களுக்கு நாலு அல்லது அஞ்சு வருஷத்துக்கு ஒருமுறை, 'கேரியர் அட்வான்ஸ் ஸ்கீம்' வாயிலா சம்பள உயர்வு தருவாங்க... இதுக்கான பட்டியலை தயார் பண்ணி, கோவையில இருக்கிற கல்லுாரிக் கல்வி இணை இயக்குனர் அலுவலகத்துல குடுப்பாங்க...
''அங்க இருந்து ஒப்புதல் தந்துட்டா, உதவி மற்றும் இணைப் பேராசிரியரின் மாத சம்பளத்தில், 5,000 ரூபாய் வரை உயரும்... ஆனா, அங்க இருக்கிற பெண் அதிகாரி, 'தலா, 25,000 ரூபாய் வெட்டுங்க'ன்னு கேட்கிறாங்க... பணம் குடுக்கிறவங்களுக்கு மட்டுமே, 'சேங்ஷன் ஆர்டர்' தர்றாங்க...
''மத்தவங்க பெயர்களை பெண்டிங்குல வச்சுடுறாங்க... இதனால, பெண் அதிகாரி மீது பேராசிரியர் கள் கடும் அதிருப்தியில இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெஞ்ச் கலைந்தது.