/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண் அதிகாரி, ' டார்ச்சரால் ' ஊழியர்கள் போர்க்கொடி!
/
பெண் அதிகாரி, ' டார்ச்சரால் ' ஊழியர்கள் போர்க்கொடி!
பெண் அதிகாரி, ' டார்ச்சரால் ' ஊழியர்கள் போர்க்கொடி!
பெண் அதிகாரி, ' டார்ச்சரால் ' ஊழியர்கள் போர்க்கொடி!
PUBLISHED ON : டிச 16, 2024 12:00 AM

படித்து கொண்டிருந்த நாளிதழை மடித்தபடியே, “சத்தமில்லாம மலைகளை கரைச்சுட்டு இருக்காவ வே...” என, அரட்டை கச்சேரியை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“நீலகிரி மாவட்டம், கோத்தகிரி பகுதியில், ரியல் எஸ்டேட் தொழில் செய்றவங்க மூலமா, தேயிலை தோட்டம் உள்ளிட்ட விவசாய நிலங்கள் விற்பனை நடக்கு... இந்த நிலங்களை வாங்குறவங்க, அதுல காட்டேஜ்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளுக்காக, பொக்லைன் இயந்திரங்களை வச்சு, நிலங்களை சமன் செய்யுதாவ வே...
“இதுக்கு, முறைப்படி எந்த அனுமதியும் வாங்குறது இல்ல... சில இடங்கள்ல, உள்ளூர் அதிகாரிகள் ஆதரவுடன், ராத்திரியோட ராத்திரியா மலைகளை கரைச்சிடுதாவ... 'இதனால, பேரிடர் பாதிப்புகள் ஏற்படும் அபாயம் இருக்கு'ன்னு முதல்வரின் தனிப்பிரிவுக்கு, உள்ளூர் பழங்குடியின மக்கள் புகார் அனுப்பிட்டு இருக்காவ வே...” என்றார், அண்ணாச்சி.
“வாகனத்துக்கு, 200 ரூபாய்னு வம்படியா வசூலிக்கறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“ஏதாவது சுங்க கட்டண விவகாரமா பா...” என கேட்டார், அன்வர்பாய்.
''இல்ல... காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள்ல இருந்து ஆந்திராவுக்கு போற, 'டூரிஸ்ட்' வாகனங்கள், முறைப்படி ஆன்லைனில், 'பர்மிட்' வாங்கிட்டு தான் போறது ஓய்...
“ஆனாலும், திருவள்ளூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களின் எல்லை சோதனை சாவடிகள்ல இருக்கற நம்ம ஊர் போலீசார், 'வாகனத்துக்கு, 200 ரூபாய் தரணும்'னு கட்டாய வசூல்ல ஈடுபடறா... அதுக்கு, 'பர்மிட் வாங்கிட்டு தான் சார் போறோம்'னு டிரைவர்கள் சொன்னா, 'வேற ஏதாவது வழக்கு போட்டு, அபராதம் போடுவோம்'னு மிரட்டியே பணத்தை கறந்துடறா ஓய்...” என்றார், குப்பண்ணா.
“பெண் அதிகாரியின், 'டார்ச்சரால' ஊழியர்கள் போர்க்கொடி துாக்கியிருக்காங்க பா...” என, கடைசி தகவலுக்கு வந்தார் அன்வர்பாய்.
“எந்த துறையில ஓய்...” என கேட்டார், குப்பண்ணா.
“தமிழகம் முழுக்க, 600க்கும் மேற்பட்ட கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்கள் இருக்கு... இந்த சங்கங்களுக்கு கடன் ஏற்பாடு செய்து தர்றதுக்காக, கூட்டுறவு வீட்டு வசதி இணையம் இருக்குது பா...
“சென்னையில் தான் இணையத்தின் தலைமை அலுவலகம் இருக்கு... இங்க இருக்கிற ஒரு பெண் அதிகாரி, தன் துறைக்கு சம்பந்தம் இல்லாத ஒருத்தரை, தன் காருக்கு டிரைவரா நியமிச்சிருக்காங்க பா...
“அந்த டிரைவர், அலுவலகத்துல இருக்கிற பெண் ஊழியர்களிடம் அத்துமீறி ஏடாகூடமா நடந்துக்கிட்டதா, போலீஸ் வரைக்கும் புகார்கள் போயிடுச்சு... தன் டிரைவர் மேலயே புகார் குடுத்துட்டதால, பெண் அதிகாரி கோபமாகிட்டாங்க பா...
“டிரைவர் மீது புகார் குடுத்த பெண் ஊழியர்கள் மட்டுமல்லாம, அலுவலகத்துல இருக்கிற எல்லா ஊழியர்களையும், 'அது சரியில்ல, இது சரியில்ல'ன்னு குற்றம் கண்டுபிடிச்சு, 'டார்ச்சர்' பண்ண துவங்கிட்டாங்க... பெண் அதிகாரியால பாதிக்கப்பட்ட ஊழியர்கள், துறையின் உயர் அதிகாரிகளிடம் புகார் குடுக்க தயாராகிட்டு இருக்காங்க பா...” என முடித்தார், அன்வர்பாய்.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

