/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆசிரியர்கள் நியமனத்தில் ' அள்ளும் ' பெண் அதிகாரி!
/
ஆசிரியர்கள் நியமனத்தில் ' அள்ளும் ' பெண் அதிகாரி!
PUBLISHED ON : அக் 31, 2025 12:00 AM

ஏ லக்காய் டீயை உறிஞ்சியபடியே, ''கட்டிங் தொகையை ஏத்திக்கிட்டே போறாரு பா...'' என, பெஞ்ச் விவாதத்தை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை தணிக்கை பிரிவில் இருக்கிற அதிகாரி, ரெண்டு வருஷமா அதே இடத்துல இருந்து, வசூல் வேட்டை நடத்துறாரு... வழக்கமா பஞ்சாயத்துக்கு ஆய்வுக்கு போனா, 10,000 ரூபாய் தான் கமிஷன் வாங்குவாரு பா...
''பஞ்., தலைவர்கள் பதவிக்காலம் முடிஞ்சு, செயல் அலுவலர்கள் கட்டுப்பாட்டுல நிர்வாகம் வந்ததும், 'விலைவாசி எல்லாம் ஏறிடுச்சு'ன்னு சொல்லி, 30,000 ரூபாயா கமிஷனை ஏத்திட்டாரு... இந்த சூழல்ல, இந்த மாசம் ஆய்வுக்கு போன இடங்கள்ல, 'தீபாவளிக்கு உயர் அதிகாரிகளுக்கு தரணும்'னு சொல்லி, தலா, 40,000 ரூபாய் வசூல் பண்ணியிருக்காரு பா...
''இவர் கட்டுப்பாட்டுல மொத்தம், 265 பஞ்சாயத்துகள் இருக்கு... அப்படின்னா, எவ்வளவு வசூல் வந்திருக்கும்னு கணக்கு போட்டுக்குங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''பாலசுப்ரமணியம், தள்ளி உட்காரும்...'' என்றபடி வந்த பெரியசாமி அண்ணாச்சி, ''எம்.பி., மீது கடும் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார்.
''எந்த தொகுதியில ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''ஈரோடு தி.மு.க.,- - எம்.பி., பிரகாஷை தான் சொல்றேன்... தி.மு.க., இளைஞரணி மாநில துணை செயலரா இருக்கும் இவர், சொந்தமா தொழில் பண்ணுதாரு வே...
''வசதி வாய்ப்புக்கும் குறைச்சல் இல்ல... எப்பவும், பொதுமக்கள் மற்றும் கட்சியினரிடம் இருந்து விலகியே இருக் காரு... இவரது எம்.பி., தொகுதிக்குள்ள வர்ற ஆறு சட்டசபை தொகுதி நிர்வாகிகளுக்கும், போன தீபாவளிக்கும் பெருசா எந்த பரிசும் தரல வே...
''சீக்கிரம் தேர்தல் வர்றதால, இந்த வருஷமாவது தீபாவளி பரிசு தருவார்னு நிர்வாகிகள் எதிர்பார்த்திருக்காவ... ஆனா, விரல் விட்டு எண்ணக்கூடிய சில நிர்வாகிகளுக்கு மட்டும் பேருக்கு பரிசு குடுத்துட்டு, கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறதையே தவிர்த்துட்டாரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆசிரியர்கள் நியமனத்துல அள்ளி குவிக்கிறாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''தேனி மாவட்டத்தில் இருக்கிற அரசு உதவி பெறும் துவக்க, நடுநிலை பள்ளிகள்ல, விதிகளை மீறி ஆசிரியர்கள் நியமனம் நடக்குதுங்க... மாணவர்கள் குறைவா இருக்கிற பள்ளிகள்ல, போலியா சில மாணவர்கள் பெயர்ல, 'எமிஸ்' நம்பர்களை உருவாக்கி, ஆசிரியர் பணியிடத்தை நிரப்பியிருக்காங்க...
''இதுக்கு, மாவட்ட பெண் கல்வி அதிகாரியின் முழு ஒத்துழைப்பும் இருக்கு... இந்த பணி நியமனங்கள்ல, பெண் அதிகாரிக்கு லட்சங்கள்ல, 'கவனிப்பு' நடக்குதுங்க...
''தனது கொடுக்கல், வாங்கல் விவகாரங்களை கவனிக்க, ஓய்வு பெற்ற கல்வி அலுவலர்களை பயன்படுத்திக்கிறாங்க... இப்படி ஓய்வு பெற்ற அலுவலர்கள், கல்வி அலுவலகத்துல நடமாடுறதை சிலர் வீடியோ எடுத்து, உயர் அதிகாரிகளுக்கு அனுப்பிட்டாங்க...
''ஆனா, 'சென்னை வரை எனக்கு செல்வாக்கு இருக்கிறதால, யாரும் எதுவும் பண்ண முடியாது'ன்னு பெண் அதிகாரி சவால் விடுறாங்க...'' என, முடித்தார் அந்தோணிசாமி.
அவ்வழியே சென்ற சிறுமியை நிறுத்திய அண்ணாச்சி, ''நாகலட்சுமி... உங்கப்பா ஊருல இருந்து வந்துட்டாரா தாயி...'' என கேட்க, அவளும், 'ஆம்' என தலையை அசைத்தபடியே சென்றாள். நண்பர்களும் கிளம்பினர்.

