/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
வசூலில் கில்லியாக வலம் வரும் பெண் அதிகாரிகள்!
/
வசூலில் கில்லியாக வலம் வரும் பெண் அதிகாரிகள்!
PUBLISHED ON : ஜூலை 11, 2025 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சிய படியே, ''மாநில தலைவர் முன்னாடியே எகிறிட்டாருங்க...'' என, மேட்டரை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''எந்த கட்சி விவகாரம் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சமீபத்துல துாத்துக்குடியில் நடந்த கட்சி நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டாருங்க... அவரை வரவேற்க போன இடத்துல, கட்சியின் மாநகரச் செயலர் முரளிதரனும், மாநில பொதுச்செயலர் பெருமாள்சாமியும் ஒருத்தர் மேல ஒருத்தர் மாறி மாறி புகார் வாசிச்சாங்க...
''அப்புறமா, அவங்களை, தான் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கு செல்வப்பெருந்தகை கூப்பிட்டு பேசினாரு... அங்க, மாநில நிர்வாகிகள், எம்.எல்.ஏ.,க்கள் சிலரும் இருந்தாங்க...
''அப்ப, 'என்னை பகைச்சுக்கிட்டா எந்த கட்சி நிகழ்ச்சியையும் நடத்த முடியாது'ன்னு பெருமாள்சாமி குரலை உயர்த்தியிருக்காரு... அதிர்ச்சியான செல்வப்பெருந்தகை, 'மாநகர நிர்வாகிகளுடன் அனுசரிச்சு போக முடியலன்னா, கட்சியில் தொடர முடியாது'ன்னு அவரை கண்டிச்சாருங்க...
''உடனே துணிச்சலான மற்ற நிர்வாகிகளும், பெருமாள்சாமி மீது புகார் பட்டியலை வாசிக்க, வெறுத்து போன பெருமாள்சாமி பட்டுன்னு அங்க இருந்து எழுந்து போயிட்டாருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''பெண்களை புறக்கணிக்கிறாங்கன்னு புலம்புதாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''பெண்களுக்கு சொத்துல சம உரிமை என்ற சட்டத்தை கொண்டு வந்தது, உள்ளாட்சி அமைப்புகள்ல, 33 சதவீதம் இட ஒதுக்கீடு குடுத்தது எல்லாம் தி.மு.க., தான்னு அந்த கட்சியினர் பெருமை அடிச்சுக்கிடுவாவ... ஆனா, போலீஸ் துறையில இந்த சம உரிமை இல்ல வே...
''சென்னையை ஒட்டியுள்ள ஆவடி, தாம்பரம் கமிஷனர் அலுவலக கட்டுப்பாட்டுல வர்ற போலீஸ் நிலையங்களின் சட்டம் - ஒழுங்கு பிரிவுக்கு பெண் அதிகாரிகளையும், போலீசாரையும் போதிய அளவுல நியமிக்கல... 'மற்ற இரண்டாம் கட்ட நகரங்கள்ல கூட சட்டம் - ஒழுங்கு பிரிவுல பெண்களுக்கு முக்கியத்துவம் தந்திருக்காவ... ஆனா, சென்னை புறநகர்ல இருக்கிற இந்த மாநகரங்கள்ல மட்டும் தர மாட்டேங்காவ'ன்னு பெண் போலீசார் எல் லாம் புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''இங்க இப்படி... ஆனா, திருப்பூர்ல ரெண்டு பெண் அதிகாரி கள் வசூல் ராணியா வலம் வர்றாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''திருப்பூர் மாவட்டத்தில், விவசாயிகளுக்கு தமிழக அரசின் முழு மானியத்தில், சொட்டு நீர் பாசன உபகரணங்களை வழங்குறாங்க... இதுக்கு விண்ணப்பிக்கிற ஒவ்வொரு விவசாயிகிட்டயும் தலா, 1,000 ரூபாய் வசூல் செய்து தருமாறு, கீழ்மட்ட அலுவலர்களிடம் இரண்டு பெண் அதிகாரிகள் கேட்கிறாங்க பா...
''இது இல்லாம, ரசாயன மற்றும் ஆர்கானிக் உரங்கள் வினியோகிக்கும் நிறுவனங்களிடம் இருந்தும், கணிசமான தொகையை கமிஷனா வாங்கிடுறாங்க... 'ஆபீஸ் செலவு, டீசல் செலவுக்கு வேணும்'னு சொல்லி, ஒவ்வொரு வட்டார வேளாண் விரிவாக்க மைய அதிகாரிகளிடமும் மாசா மாசம் ஒரு தொகையை கறந்துடுறாங்க... ஆண் அதிகாரிகளே அசந்து போற அளவுக்கு, வசூல்ல கில்லியா வலம் வர்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
ஒலித்த மொபைல் போனை எடுத்த குப்பண்ணா, ''பாமா மேடம்... சீதாகிட்ட பேசிட்டேளா...'' என்றபடியே நடக்க, மற்றவர்களும் எழுந்தனர்.