தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ கோவில் தரிசனத்தில் 'கல்லா' கட்டும் பெண் அதிகாரிகள்!

 கோவில் தரிசனத்தில் 'கல்லா' கட்டும் பெண் அதிகாரிகள்!

 கோவில் தரிசனத்தில் 'கல்லா' கட்டும் பெண் அதிகாரிகள்!

2


PUBLISHED ON : ஆக 11, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“தலைவர் தடுத்தும் கேட்காம, வழியனுப்பி வச்சிருக்காரு பா...” என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அன்வர்பாய்.

“தி.மு.க., தலைமை நிலைய செயலரா இருக்கிறவர், பூச்சி முருகன்... அந்தக் கட்சி தலைமை அலுவலகமான அறிவாலயத்துக்கு, ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்னு யார் வந்தாலும், வாசல்ல நின்னு இவர் தான் வரவேற்பாரு பா...

“அதே மாதிரி ஸ்டாலின் கிளம்புறப்ப, கார் வரை வந்து வழியனுப்புவாரு... போன மாசக் கடைசியில் கொடைக்கானல் போயிருந்த முருகனுக்கு, மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டு, 'சீரியஸ்' ஆகிட்டாரு பா...

“அவரை, சென்னை அப்பல்லோ மருத்துவமனை, ஐ.சி.யு., வார்டுல அனுமதிச்சாங்க... 'அவரை எப்படியும் காப்பாத்தியே ஆகணும்'னு, ஸ்டாலின், உதயநிதி, கனிமொழி எல்லாம் அடுத்தடுத்து டாக்டர்களிடம் பேசியிருக்காங்க பா...

“தொடர் சிகிச்சையில் உடல்நலம் தேறிய முருகனை, சமீபத்தில் மருத்துவமனைக்கு போய் ஸ்டாலின் பார்த்து பேசியிருக்காரு... ரொம்பவே உருகிப் போன முருகன், ஸ்டாலின் எவ்வளவோ மறுத்தும், 'லிப்ட்' வரை போய் அவரை வழியனுப்பியிருக்காரு பா...” என்றார் அன்வர்பாய்.

“போலீசார் கட்டுப்பாட்டுல தான் கோவில் இருக்கு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“எந்த ஊருலங்க...” என கேட்டார் அந்தோணிசாமி.

“சென்னை, குன்றத்துார்ல பிரபல முருகன் கோவில் இருக்குல்லா... இங்க, ஆடிக் கிருத்திகை உள்ளிட்ட விசேஷ நாட்கள்ல பக்தர்கள் கூட்டம் அலைமோதும்... கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் பணிகளை, குன்றத்துார் போலீசார் தான் கவனிக்காவ வே...

“பண்டிகை நாட்கள்ல அதிக கூட்டம் இருக்கிற சமயங்கள்ல, அங்கிருக்கும் போலீசார், தங்களது நண்பர்கள், உறவினர்கள்னு பலரை குறுக்கு வழியில் தரிசனத்துக்கு அனுப்பிடுதாவ... இதனால, வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள் அவதிப்படுதாவ வே...

“எந்த பக்தராவது தட்டிக்கேட்டா, அவங்களை போலீசார் மிரட்டுதாவ... இவங்களை, கோவில் நிர்வாகிகளும் கண்டுக்காம இருக்காவ வே...” என்றார் பெரியசாமிஅண்ணாச்சி.

“என்கிட்டயும் ஒரு கோவில் மேட்டர் இருக்கு ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...

“தமிழக கோவில்கள்ல புரோக்கர்கள் ஆதிக்கத்தை ஒழிக்க, அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் தீவிரமா முயற்சிகள் எடுத்துண்டு இருக்காரோல்லியோ... திருச்சி, சமயபுரம் கோவில்ல இன்னும் வசூல் வேட்டை நடக்கறது ஓய்...

“அதாவது, வெளியூர்கள்ல இருந்து வர்ற உயர் போலீஸ் அதிகாரிகளை, கோவிலுக்கு அழைச்சிட்டு போற உள்ளூர் பெண் எஸ்.ஐ.,யும், கோவில் பெண் அதிகாரியும் கூட்டணி போட்டிருக்காங்க... இதுல, எஸ்.ஐ.,யின் கணவர், 'டிராவல்ஸ்' நிறுவனம் நடத்தறார் ஓய்...

“இவரது நிறுவனம் மூலமா வெளிநாட்டில் இருந்து சுற்றுலா வர்ற பக்தர்களிடம், ஆயிரக்கணக்குல பணம் வாங்கிட்டு, அவாளை, 'போலீஸ் அதிகாரிகளின் கெஸ்ட்'னு சொல்லி, தரிசனத்துக்கு அழைச்சுண்டு போறாங்க... இதுக்கு, கோவில் பெண் அதிகாரியும் உடந்தையா இருக்காங்க ஓய்...

“இந்த வகையில மட்டும், ரெண்டு பேரும் சேர்ந்து, தினமும் பல ஆயிரம் ரூபாயை அள்ளிடறாங்க... 'அமைச்சர் ரமேஷ் இந்தப் பக்கமும் கொஞ்சம் பார்வையை திருப்பணும்'னு, உள்ளூர் பக்தர்கள் சொல்றா ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.

ஒலித்த மொபைல் போனை எடுத்த அந்தோணிசாமி, “நித்யாவா... பிரியா வீட்டுக்கு போயிட்டீங்களா... நானும் அங்க தான் வந்துட்டு இருக்கேன்...” என பேசியபடியே நடக்க, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us