/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
விடுமுறை நாளில் இறுதி செய்யப்பட்ட, ' டெண்டர்! '
/
விடுமுறை நாளில் இறுதி செய்யப்பட்ட, ' டெண்டர்! '
PUBLISHED ON : அக் 14, 2024 12:00 AM

''காங்கிரஸ்னாலே காமெடின்னு ஆயிட்டு வே...'' என, சிரித்தபடியே பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''சொன்னா, நாங்களும் சிரிப்போமே பா...'' என்றார், அன்வர்பாய்.
''லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலுக்கு, பா.ஜ.,வினர் மிரட்டல் விடுக்கிறதா சொல்லி, அதை கண்டிச்சு தமிழகம் முழுக்க, காங்., சார்பில் பேரணி நடத்த முடிவு செஞ்சாங்கல்லா... அந்த வகையில, சமீபத்துல தென் சென்னை மாவட்ட காங்., நிர்வாகி துரை ஏற்பாட்டுல, மடிப்பாக்கம் பகுதியில, 3 கி.மீ.,க்கு பேரணி நடத்த முடிவு செஞ்சாவ வே...
''பேரணிக்கு சாயந்தரம் 4:00 - 6:00 மணி வரை போலீசார் அனுமதி தந்திருந்தாவ... ஆனா, சாயந்தரம், 4:30 ஆகியும், 10 பேர் கூட வரல... இதனால, துரை ஒவ்வொருத்தருக்கா போன் போட்டு, 'பேரணிக்கு வாங்க வாங்க'ன்னு கெஞ்சிட்டு இருந்தாரு வே...
''ஒருவழியா, போலீசார் ஒதுக்கிய நேரம் முடியுறப்ப, அதாவது, 5:50க்கு, 50 பேர் திரண்டாவ... போலீசாரிடமும் கெஞ்சி அனுமதி வாங்கி, பேரணியை துவக்குனாவ வே...
''ஆனா, 200 மீட்டர் நடந்துட்டு, பாதி பேர் கழன்றுக்கிட்டாவ... இதனால, பாதி துாரத்திலேயே பேரணி, 'ஆட்டோமேட்டிக்'கா முடிவுக்கு வந்துட்டு வே...'' என்றார், அண்ணாச்சி.
''செலவு செஞ்சது, 50,000 ரூபாய்தான்... ஆனா, கேக்கறது, 16 லட்சம் ரூபாய் ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறிய குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''பெரம்பலுார் மாவட்டம், இரூர் ஊராட்சியின் முக்கிய பதவியில, ஆளுங்கட்சி பெண் பிரமுகர் இருக்காங்க... வழக்கம் போல, இவங்க ஆத்துக்காரர் தான் நிர்வாகத்தை பார்த்துக்கறார் ஓய்...
''பதவிக்காலம் முடிய இன்னும் சில மாதமே இருக்கறதால, முடிஞ்ச அளவுக்கு வாரி சுருட்டறார்... 100 நாள் வேலை திட்டத்துல தன் குடும்பத்தினர், உறவினர்கள்னு நிறைய பேருக்கு அடையாள அட்டை வழங்கி இருக்கார் ஓய்...
''ஒரு நாளைக்கு, 40 முதல், 100 அட்டை வரை கூடுதலா கணக்கு காட்டி, சம்பளத்தை, 'ஆட்டைய' போடறார்... உள்ளூர் குவாரியில மாதாந்திர மாமூல் வசூலிக்கறார் ஓய்...
''சமீபத்துல, பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் பண்ண, 50,000 ரூபாய் மட்டுமே செலவு பண்ணிட்டு, 16 லட்சம் ரூபாய்க்கு போலி பில்களை தயார் பண்ணி, உயர் அதிகாரிக்கு அனுப்பி இருக்கார்... ஆனா, அது போலி பில்னு தெரிஞ்சுண்ட அதிகாரி, பணம் தராம, பில்லை திருப்பி அனுப்பிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விடுமுறை நாள்ல, டெண்டரை முடிவு பண்ணிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்
''எந்த ஊருலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''திருவள்ளூர் மாவட்டம், பூண்டி ஏரி இருக்கிற ஊர்ல சிமென்ட் சாலை போட, 33.75 லட்சம் ரூபாய் மதிப்புல, 'டெண்டர்' விட்டாங்க... இதுக்கு கடைசி தேதியா செப்டம்பர் 17 இருந்துச்சு... அன்னைக்கு மிலாடி நபி, அரசு விடுமுறைப்பா...
''டெண்டரை இறுதி செய்யணும்னா, அதுக்கு முன்னாடி, பின்னாடி ரெண்டு நாள், 'ஒர்க்கிங் டே'வா இருக்கணும்... ஆனா, அதை கணக்குல எடுத்துக்காம, 17ம் தேதியே டெண்டரை இறுதி பண்ணிட்டாங்க பா...
''இது சம்பந்தமா ஒன்றிய அதிகாரியிடம் கேட்டா, மவுனத்தையே பதிலா தர்றாரு... டெண்டர் கிடைக்காத கான்ட்ராக்டர் ஒருத்தர், இது சம்பந்தமா முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பிட்டாரு பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.