PUBLISHED ON : மே 01, 2026 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, ''திருட்டு கும்பலை கட்சியில சேர்த்துட்டதா வருத்தப்படுறாங்க...'' என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லும் ஓய்...'' என கேட்டார், குப்பண்ணா.
''விருதுநகர் மாவட்டம், சாத்துார் தொகுதி தி.மு.க., வேட்பாளர் கடற்கரை ராஜ் வீட்டில், 122 சவரன் நகைகளை திருடிட்டதா, அவரது மருமகள் அபிநயா, அவரது தோழி பவானி, பவானியின் கணவர் சுரேஷ்குமார்னு மூணு பேரை, போலீசார் கைது பண்ணியிருக்காங்களே...
''இந்த மூணு பேரும், சாத்துார் பா.ஜ., வேட்பாளரும், அந்த கட்சியின் மாநில தலைவருமான நயினார் நாகேந்திரனை, தேர்தலுக்கு முன்னாடி பார்த்து, தங்களை பா.ஜ.,வில் சேர்த்துக்கும்படி கேட்டிருக்காங்க... இவங்களை பத்தி விசாரிச்சு தெரிஞ்சுக்கிட்ட நயினார், அவங்களை கட்சியில சேர்க்க மறுத்துட்டாருங்க...
''தங்களுக்கு அரசியல் பாதுகாப்பு வேணும்னு நினைச்ச மூணு பேரும், அ.தி.மு.க., மாவட்ட செயலர் ரவிச்சந்திரனை பார்த்து, அந்த கட்சியில சேர்ந்துட்டாங்க... 'இவங்களை ஏன்டா சேர்த்தோம்'னு அ.தி.மு.க.,வினர் நொந்து போயிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கோடிக்கணக்கான பணத்தை சுருட்டிட்டாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, சேப்பாக்கத்தில் அரசு விருந்தினர் மாளிகை இருக்கே... இதன் பராமரிப்பு பணிக்கு, 2 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தாங்க... ஆனா, 'டெண்டர்' எதுவும் விடாம, வேலைகளை செஞ்சதா சொல்லி, 1.50 கோடி ரூபாயை எலக்ட்ரிக்கல் பிரிவு அதிகாரிகள் எடுத்துட்டாங்க பா...
''அதே மாதிரி, எம்.ஜி.ஆர்., நினைவிடம், கோட்டூர்புரம் அண்ணா நுாலகத்துலயும் எந்த வேலைகளையும் செய்யாம, தனியார் நிறுவனம் பெயர்ல, 2.50 கோடி ரூபாய்க்கு பில் போட்டு தொகையை எடுத்திருக்காங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''த.வெ.க.,வுக்கு வேலை பார்த்திருக்காரு வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதியில், காங்., வேட்பாளரா மாங்குடி என்பவரே மறுபடியும் போட்டியிட்டாரு... இந்த தொகுதியில் போட்டியிட, அந்த கட்சியின், 'மாஜி' எம்.எல்.ஏ., ஒருத்தர் முயற்சி செஞ்சாரு வே...
''ஆனா, முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் சிபாரிசுல, மாங்குடியே மறுபடியும் சீட்டை வாங்கிட்டாரு... அதேநேரம், மாஜியின் மகனுக்கு, பக்கத்து தொகுதியில, மறுபடியும் சீட் குடுத்துட்டாவ வே...
''இருந்தாலும், தனக்கு சீட் கிடைக்காத கோபத்துல இருந்த மாஜி, தன் சமூக ஓட்டுகளை, தன் உறவினரான த.வெ.க., வேட்பாளருக்கு திருப்ப, தீயா வேலை பார்த்திருக்காரு... இதை கேள்விப்பட்டு, தி.மு.க., நிர்வாகிகள் அதிர்ச்சியாகிட்டாவ வே...
''மாஜியை கூப்பிட்டு, 'இங்க நீங்க உள்ளடி வேலை பார்த்தா, பக்கத்து தொகுதியில உங்க மகனை தோற்கடிச்சிடுவோம்'னு மிரட்டியிருக்காவ... அப்புறம் தான், 'மாஜி' பம்மியிருக்காரு... ஆனாலும், 'மாங்குடிக்கு அவரால பாதிப்புதான்'னு காங்கிரசார் புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''ராமசாமி, இப்படி உட்காருங்க... நாங்க கிளம்புறோம்...'' என்றபடி அந்தோணிசாமி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.
