தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ உட்கட்சி எதிரியை முடக்க நடிகரை துாண்டி விடும் 'மாஜி' அமைச்சர்!

 உட்கட்சி எதிரியை முடக்க நடிகரை துாண்டி விடும் 'மாஜி' அமைச்சர்!

 உட்கட்சி எதிரியை முடக்க நடிகரை துாண்டி விடும் 'மாஜி' அமைச்சர்!


PUBLISHED ON : பிப் 22, 2026 03:15 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 22, 2026 03:15 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெ ஞ்சில் அமர்ந்ததுமே, ''வசமா மாட்டிக்கிட்டாரு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.

''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.

''திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் எதிர்ல, 'டாஸ்மாக் பார்' இருக்கு... இதை, அவிநாசி ஒன்றிய ஆளுங்கட்சி புள்ளி நடத்திட்டு இருந்தாரு வே...

''பார் இடத்துக்கான ஒப்பந்தம் முடிஞ்சிட்டதால, இடத்தின் உரிமையாளர், காலி பண்ண சொல்லியிருக்காரு... ஒன்றிய புள்ளியோ, 'ஒப்பந்தம் முடிய இன்னும் நாலு மாசம் இருக்கு'ன்னு சொல்லி, போலீஸ்ல புகார் குடுத்துட்டாரு வே...

''ரெண்டு தரப்பையும் போலீசார் விசாரணைக்கு கூப்பிட்டாவ... அப்ப, உரிமையாளர் சந்தேகப்பட்டு, ஒப்பந்த நகலை வாங்கி பார்த்தப்ப, நாலு மாசம் தள்ளி ஒப்பந்தம் முடியுறதா எழுதி, அதுல உரிமையாளர் கையெழுத்தை தி.மு.க., புள்ளியே போட்டது தெரிஞ்சிட்டு... இதை பார்த்து, 'டென்ஷன்' ஆன போலீஸ் அதிகாரிகள், ஒன்றிய புள்ளிக்கு, 'டோஸ்' விட்டு, விரட்டாத குறையா அனுப்பிட்டாங்க வே...'' என்றார், அண்ணாச்சி.

''சிவபிரகாஷ், இப்படி உட்காரும்...'' என்ற குப்பண்ணாவே, ''வேலைக்கே வராத பெண்மணிக்கு பதவி உயர்வு தந்திருக்கா ஓய்...'' என்றார்.

''எந்த ஊருல பா...'' என கேட்டார், அன்வர்பாய்.

''திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்துார் ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சி துவக்க பள்ளியில் சமையலரா இருந்த பெண்மணி, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஓய்வு பெற்றாங்க... அந்த இடத்துக்கு, ஒரு பெண் உதவியாளரை நியமிச்சா ஓய்...

''ஆனா, அந்தம்மா ரெண்டு வருஷமா வேலைக்கே வரல... இதனால, சத்துணவு ஊழியர் சங்க ஒன்றிய பெண் நிர்வாகி, அந்த உதவியாளரின் சம்பளத்தை, தானே வாங்கி, கமிஷன் எடுத்துண்டு, ஓய்வு பெற்ற சமையலருக்கு மிச்சத்தை குடுத்து, சமையல் வேலைகளை செய்ய வச்சிருக்கா ஓய்...

''இந்த முறைகேட்டுக்கு, ஒன்றிய பெண் அதிகாரியும் உடந்தை... இந்த சூழல்ல, வேலைக்கே வராத உதவியாளருக்கு, சமீபத்தில் சமையலர் பதவி உயர்வும் குடுத்துட்டா...

''இது பத்தி உள்ளூர் மக்கள் கேள்வி எழுப்பவே, ஓய்வு பெற்ற பெண்மணியை நிறுத்திட்டு, புதுசா ஒரு உதவியாளரை நியமிச்சு, சமையல் வேலைகளை செய்றா ஓய்...'' என்ற குப்பண்ணாவே, ஒலித்த மொபைல் போனை எடுத்து, ''சொல்லுங்கோ நர்மதா மேடம்... கவுரி, ஒத்தாசையா இருக்கால்லியோ...'' என, பேசிவிட்டு வைத்தார்.

''எதிரியை முடக்க நினைக்கிறாருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''விருதுநகர் மாவட்டத்தில், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சிவகாசியில் போட்டியிட ஆர்வமா இருக்காரு... முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், விருதுநகர்ல சீட் கேட்கிறாருங்க...

''இவர் ஜெயிச்சிட்டா, தன் அமைச்சர் கனவுக்கு வேட்டு வரும்னு ராஜேந்திர பாலாஜி பயப்படுறாரு... அதேபோல, ராஜபாளையத்தை நடிகை கவுதமி கேட்கிறாங்க... இவங்களுக்கு சீட் கிடைக்கிறதையும் ராஜேந்திர பாலாஜி விரும்பலைங்க...

''இதனால, கூட்டணியில் இருக்கும் பா.ஜ.,வுக்கு ராஜபாளையம், விருதுநகரை தள்ளிவிட பார்க்கிறாரு... ராஜபாளையத்தில், முன்னாள் எம்.எல்.ஏ., கோபால்சாமி, விருதுநகர்ல நடிகர் சரத்குமாரை போட்டியிடும்படி துாண்டி விடுறாருங்க... விருதுநகர், பாண்டியராஜனுக்கு போயிடக் கூடாதுங்கிறதுல ராஜேந்திர பாலாஜி குறியா இருக்காருங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.

அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us