/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
தனியாருக்காக நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்!
/
தனியாருக்காக நிறுத்தப்பட்ட அரசு பஸ்கள்!
PUBLISHED ON : பிப் 10, 2024 12:00 AM

''விவசாய சங்க நிர்வாகிகளுக்கு வலை வீச ஆரம்பிச்சுட்டா ஓய்...'' என்றபடியே, படித்துக் கொண்டிருந்த நாளிதழை மடித்து வைத்தார் குப்பண்ணா.
''விபரமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதி முதல்வரா இருக்கறச்சே, விவசாய சங்க தலைவர்களை அப்பப்ப அழைத்து பேசி, அவா மனநிலையை தெரிஞ்சுப்பார்...
''தற்போதைய தி.மு.க., ஆட்சியில், தங்களை கண்டுக்கவே மாட்டேங்கறா என்ற ஆதங்கம் விவசாய சங்கத்தினருக்கு இருக்கு ஓய்...
''ஏற்கனவே, தி.மு.க., வுக்கு ஆதரவா இருந்த உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்ல முத்து, போன சட்டசபை தேர்தல்ல அ.தி.மு.க., பக்கம் சாஞ்சுட்டார்...
''இப்ப, தி.மு.க.,வுக்கு ஆதரவா இருக்கற, காவிரி டெல்டா பாசன விவசாய சங்கங்களின் தலைவர் இளங்கீரனையும் அ.தி.மு.க., பக்கம் இழுக்க, 'மாஜி' எம்.பி., ஒருத்தர் துாது போயிருக்கார்...
''அவரோ, 'விவசாயிகளுக்கு துரோகம் செய்ய மாட்டேன்'னு சொல்லி, மாஜியை திருப்பி அனுப்பிட்டார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்கிட்ட ஒரு வசூல்மேட்டர் இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''சீக்கிரம் சொல்லும் வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''ஈரோடு மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள காய்கறி மார்க்கெட், வ.உ.சி., பூங்கா வளாகத்துல செயல்படுது... இங்க, 700க்கும் மேற்பட்ட கடைகள் இருக்குது பா...
''தி.மு.க.,வை சேர்ந்த அருண் என்பவர் ஏலம் எடுத்து, இந்த கடைகள்ல சுங்கம் வசூலிக்கிறாரு... அதே நேரம், அவர் டெண்டர் எடுக்காத சின்ன மார்க்கெட், சாலையோர கடைகள், கம்பங்கூழ் கடை, பழக்கடைகளையும் விட்டு வைக்காம, அடாவடி வசூல்ல ஈடுபடுறாரு பா...
''சாலையில நடந்து போய் பலுான், கொசு வலை விற்குறவங்க, ஐஸ் வண்டிக்காரங்களைக் கூட விடாம துரத்தி, துரத்தி வசூல் பண்ணுறாரு... 'இவரது அடாவடியை மாநகராட்சி அதிகாரிகளும் கண்டுக்கிறது இல்லை'ன்னு, கடைக்காரங்க எல்லாம் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''இப்படி செஞ்சா போக்குவரத்து துறை ஏன் நஷ்டத்துல போவாது...'' என்றபடியே, சூடாக வந்த டீயை குடித்தார் அண்ணாச்சி.
''அப்படி என்ன செஞ்சாங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''பெரம்பலுார் - திருச்சி, பெரம்பலுார் - கள்ளக்குறிச்சி, பெரம்பலுார் - வெள்ளுவாடி, பெரம்பலுார் - வீரகனுார் வழித்தடங்களில், அரசு பஸ் போக்குவரத்து குறைஞ்சிட்டு...
''டிரைவர் - கண்டக்டர்பற்றாக்குறையால பஸ்களை குறைச்சிட்டதா சொல்லுதாவ... பின்னணி என்னன்னா, திருச்சி முக்கிய புள்ளியின் உறவுக்காரர் ஒருத்தரு, இந்த வழித்தடங்களில் தனியார் பஸ்களை இயக்குதாரு வே...
''இவரும், இன்னும் சில தனியார் பஸ் ஓனருங்களும் சேர்ந்து கொடுத்த அழுத்தத்தால தான், அரசு பஸ் எண்ணிக்கையை குறைச்சிட்டாவளாம்... இதுக்காக, 'வெயிட்'டான கவனிப்பும் நடந்துருக்கு...
''அது மட்டுமில்லாம, பெரம்பலுார் டிப்போவுல வரவு - செலவு கணக்குலயும் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்குன்னும் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெஞ்சில் மேலும் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.