அரசு மருத்துவமனை ‘கேன்டீனை’ மூடிய ஆளுங்கட்சி புள்ளி!
அரசு மருத்துவமனை ‘கேன்டீனை’ மூடிய ஆளுங்கட்சி புள்ளி!
PUBLISHED ON : நவ 25, 2026 12:00 AM

இஞ்சி டீயை உறிஞ்சியபடியே, “மறுபடியும் களத்துக்கு வந்துட்டாருங்க...” என, அரட்டையை ஆரம்பித்தார் அந்தோணிசாமி.
“யாரை சொல்றீர் ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.
“தி.மு.க., ஆட்சியில், போக்குவரத்து துறை அமைச்சரா இருந்தவர் சிவசங்கர்... இப்ப, குன்னம் எம்.எல்.ஏ., மற்றும் அரியலுார் மாவட்ட தி.மு.க., செயலரா இருக்காருங்க...
“போன செப்டம்பர்ல, சென்னை தனியார் மருத்துவமனையில் இதய, ‘ஆப்பரேஷன்’ பண்ணிக்கிட்டாரு... கட்சி தலைவர் ஸ்டாலினும், உதயநிதியும் ரெண்டு முறை நேர்ல பார்த்து நலம் விசாரிச்சாங்க...
“வேற யாரும் அவரை பார்க்க போகல... ஆப்பரேஷன் முடிஞ்சு ஓய்வுல இருந்தவர், சட்டசபை கூட்டம், பட்ஜெட் தொடர்னு எதுலயும் கலந்துக்காம இருந்தாரு... கிட்டத்தட்ட மூணு மாச ஓய்வுக்கு பிறகு, இப்ப கட்சியினர் வீட்டு நிகழ்ச்சிகள்ல தலைகாட்ட துவங்கியிருக்காருங்க...” என்றார் அந்தோணிசாமி.
“மறுபடியும் சர்ச்சையை கிளப்பிட்டாவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“என்ன விஷயம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலுார்ல மாவட்ட தலைமை மருத்துவமனையை சமீபத்துல திறந்திருக்காவ... இந்த தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் முன்னாள் அமைச்சரா இருந்தவர், தி.மு.க.,வின் பொன்முடி...
“இவரது ஏற்பாட்டுல தான் மருத்துவமனையை கட்டியிருக்காவ... இதனால, பொன்முடியின் ஆதரவாளர்கள், ‘திருக்கோவிலுாருக்கு மாவட்ட தலைமை மருத்துவமனை அமைத்து கொடுத்த மனித கடவுள்... வாழும் ஈ.வெ.ரா., பேராசிரியர் பொன்முடிக்கு திருக்கோவிலுார் பொதுமக்கள் சார்பில் நன்றி’ன்னு, சமூக வலைதளங்கள்ல புகழாரம் சூட்டியிருக்காவ வே...
“இதை பார்த்த பக்தர்கள் பலர், ‘பொன்முடி ஏற்கனவே ஹிந்து சமயம் பத்தி ஏடாகூடமா பேசி, அமைச்சர் பதவியையே பறிகொடுத்தாரு... இப்ப, அவரை மனித கடவுள்னு புகழ் பாடுறது சரியா’ன்னு, பதிலடி பதிவுகளை போட்டுட்டு இருக்காவ வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.
“திறந்த கேன்டீனை, 22 நாட்கள்லயே மூடிட்டா ஓய்...” என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
“கடந்த தி.மு.க., ஆட்சியில் அரசு மருத்துவமனைகள்ல, ‘கேன்டீன்’ நடத்த, ‘டெண்டர்’ விட்டா... ஈரோடு அரசு மருத்துவமனையில் கேன்டீன் நடத்த டெண்டர் எடுத்திருந்த மணிகண்டன், ஆகாஷ் ஆகியோர் போன மாசம் 25ம் தேதி கேன்டீனை திறந்தா ஓய்...
“ஆனா, தி.மு.க., ஆட்சியில் எடுத்த டெண்டர் என்பதால, ஈரோடு மாநகராட்சி தி.மு.க., கவுன்சிலரான பழனியப்பா செந்தில்குமார், தன்னையும் கேன்டீன்ல பங்குதாரரா சேர்த்துக்கும்படி குடைச்சல் குடுத்திருக்கார்... இது, மாவட்டத்தின் ஆளுங்கட்சி முக்கிய புள்ளி காதுக்கு போயிருக்கு ஓய்...
“முக்கிய புள்ளியின் தம்பி, கேன்டீன் நடத்தியவாளை தொடர்பு கொண்டு, ‘கட்டிங்’ கேட்டதும் இல்லாம, மாசா மாசம், ‘பார்ட்டி பண்ட்’டும் கேட்டிருக்கார்... கேன்டீன் நடத்தியவங்க மறுத்துட்டதால, ‘தி.மு.க., ஆட்சியில் டெண்டர் எடுத்தவங்க எப்படி கேன்டீன் நடத்தலாம்?’னு மருத்துவமனை அதிகாரிகளுக்கு முக்கிய புள்ளி நெருக்கடி தரவே, சமீபத்துல கேன்டீனை இழுத்து மூடிட்டா... இந்த கேன்டீன் பஞ்சாயத்து, த.வெ.க., தலைமைக்கும் போயிருக்கு ஓய்...” என முடித்தார் குப்பண்ணா.
“விஜய் பாலாஜி, உம்ம தம்பி பிரபு ஊருக்கு போயிட்டாரா வே...” என நண்பரிடம் பெரியசாமி அண்ணாச்சி விசாரிக்க, மற்றவர்கள் கிளம்பினர்.
