தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ஆசிரியர்கள் இல்லாததால் பாதிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்!

ஆசிரியர்கள் இல்லாததால் பாதிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்!

ஆசிரியர்கள் இல்லாததால் பாதிக்கப்படும் அரசு பள்ளி மாணவர்கள்!

3


PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 30, 2026 12:00 AM

3


3
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“அ மைச்சரையே பார்க்க மாட்டேங்காரு வே...” என்ற பரபரப்பான தகவலுடன், பெஞ்சுக்கு வந்தார் பெரியசாமி அண்ணாச்சி.

“யாருங்க அது...” என கேட்டார் அந்தோணிசாமி.

“தமிழகத்துல, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டுல அரசு இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகள் செயல்படுது... கல்லுாரி பேராசிரியர்கள் உட்பட துறை சார்ந்த யாரும், தொழில்நுட்ப கல்வி இயக்கக உயர் அதிகாரியை சந்திக்க போனா, யாரையும் பார்க்க மாட்டேங்காரு வே...

“இதனால, நொந்து போனவங்க உயர் கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதனை பார்த்து, குறை சொல்லியிருக்காவ... அமைச்சர் தரப்புல இருந்து, ‘இது சம்பந்தமா பேசணும்... வாங்க’ன்னு கூப்பிட்டும், அதிகாரி போக மாட்டேங்காரு வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“ரத்தினசாமி, தள்ளி உட்காருங்க...” என்ற அந்தோணிசாமியே, “ஆத்துக்கு நடுவுல பொருட்காட்சி போடலாமாங்க...” என கேட்டபடியே அடுத்த மேட்டரை தொடர்ந்தார்...

“பெரம்பலுார் மாவட்டம், லப்பைக்குடிகாடு கிராமத்தை ஒட்டி ஓடுற வெள்ளாற்றின் நடுவுல, தண்ணீர் இல்லாம வறண்டு மணலா கிடந்துச்சு... சேலம் மாவட்டம், ஆத்துாரைச் சேர்ந்த வெங்கடேசன் என்பவர், போன வாரம் இந்த மணல் பரப்பில், ‘ரோபோடிக் வீட்டு உபயோக பொருள் கண்காட்சி’யை அஞ்சு நாள் நடத்தினாருங்க...

“இதுக்காக, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை மற்றும் பேரூராட்சி அதிகாரிகளை, ‘கவனிச்சு’ அனுமதி வாங்கியிருந்தாரு... பொருட்காட்சி முடிஞ்சு, போன 25ம் தேதி, அங்கிருந்த பொருட்களை எல்லாம் ஊழியர்கள் அகற்றிட்டு இருந்தாங்க...

“அப்ப, கடலுார் மாவட்டம், தொழுதுார் அணையில் திறந்த தண்ணீரால வெள்ளாற்றுல வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, பொருட்காட்சி பொருட்கள் எல்லாத்தையும் அடிச்சிட்டு போயிடுச்சு...

“பொருட்களை எடுத்துட்டு இருந்த ஒன்பது ஊழியர்கள் வெள்ளத்துல சிக்கிட்டாங்க... உள்ளூர்காரங்க மற்றும் தீயணைப்பு வீரர்கள் கஷ்டப்பட்டு அவங்களை காப்பாத்தினாங்க...

“இப்ப, ‘ஆத்துக்கு நடுவுல பொருட்காட்சி நடத்த அனுமதி கொடுத்த அதிபுத்திசாலி அதிகாரிகள் யார்’னு விசாரணை நடந்துட்டு இருக்குதுங்க...” என்றார் அந்தோணிசாமி.

“மாணவர்கள் படிப்பு பாதிக்கப்படுது பா...” என்றார் அன்வர்பாய்.

“எந்த ஊர்ல ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“தமிழகத்தில், அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள்ல இருக்கும் உபரி ஆசிரியர்களை, ஆசிரியர்கள் இல்லாத பள்ளிகளுக்கு பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணியா மாற்றும்படி, ஆக., 31ல் தொடக்ககல்வி துறை இயக்குநர் உத்தரவு போட்டாரு பா...

“இதுல, திருச்சி தவிர மற்ற 37 மாவட்டங்கள்லயும் பணி நிரவல் மற்றும் மாற்றுப் பணியிடம் வழங்கிட்டாங்க... திருச்சியில 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு பணி நிரவல், மாற்றுப்பணி போடணும் பா...

“ஆனா, இப்ப வேலையே இல்லாம சொகுசா இருக்கிற ஆசிரியர்கள் பலர், வேற இடங்களுக்கு போக விரும்பல... அவங்களிடம் கல்வி அதிகாரிகள் லட்சக்கணக்குல பணத்தை வாங்கிட்டு, பணி நிரவல் பண்ணாம கமுக்கமா இருக்காங்க பா...

“இத்தனைக்கும், தொடக்க கல்வி இயக்குநரின் சொந்த மாவட்டமே திருச்சி தான்... தன் மாவட்டத்துலயே பணி நிரவல், மாற்றுப் பணியிடங்கள் போடாம இருக்கிறதை அவரும் கண்டுக்கல... இதனால, ஆசிரியர்கள் இல்லாம பல பள்ளிகள்ல மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டிருக்குது பா...” என முடித்தார் அன்வர்பாய்.

“நரேஷ், இங்கன உட்காரும்...” என்றபடியே பெரியசாமி அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us