/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அதிகாரி லீவ் எடுத்தால், மாயமாகும் சிறை காவலர்கள்!
/
அதிகாரி லீவ் எடுத்தால், மாயமாகும் சிறை காவலர்கள்!
PUBLISHED ON : பிப் 26, 2024 12:00 AM

''ரெட்டியார் சமூகத்தினர் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''அவங்களுக்கு என்னங்க குறை...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''அ.தி.மு.க.,வுல, பெரம்பலுார், அரியலுார், கரூர், திருச்சி ஆகிய மாவட்டங்கள்ல தேர்தல்ல சீட், கட்சியில முக்கிய பொறுப்புகள்ல, ரெட்டியார் சமூகத்துக்கு முக்கியத்துவம் தர்றதில்லைன்னு சொல்லுதாவ வே...
''கடந்த, 1984ல் எம்.ஜி.ஆர்., காலத்துல வீட்டு வசதி துறை அமைச்சராக இருந்த நல்லுசாமி, ஜெயலலிதா காலத்துல, 2002-ல, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்த பாப்பா சுந்தரம் ஆகியோருக்கு பின், ரெட்டியார் சமூகத்துக்கு சட்டசபை, லோக்சபா தேர்தல்ல சீட்டும் தரலை வே...
''இத்தனைக்கும், இந்த சமூகத்துல நிறைய பேர், அ.தி.மு.க.,வுல இருக்காவ... தேர்தல்ல செலவு பண்ணவும் நிறைய பணம் வச்சிருக்காவ வே... 'தி.மு.க.,வுல எங்க சமூகத்துக்கு கிடைக்கிற மரியாதை, அ.தி.மு.க.,வுல இல்ல... வர்ற தேர்தல்லயாவது எங்க சமூகத்தினருக்கு சீட் தரணும்'னு கேட்காவ வே... '' என்றார், அண்ணாச்சி.
''லேக்வியூ அடுக்கு மாடி குடியிருப்பு வாசிகள் எல்லாம், முதல்வருக்கு கடிதம் எழுதியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''விளக்கமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னை சோழிங்க நல்லுார்ல, தமிழக அரசின் வீட்டு வசதி வாரியத்தின் வாயிலா, 'லேக்வியூ' என்ற பெயர்ல, 904 வீடுகள், மூன்று பிரிவுகளாக, வெவ்வேறு இடங்கள்ல, அடுக்கு மாடிகளா கட்டப்பட்டிருக்குதுங்க...
''வீட்டு வசதி வாரியம், கழிவுநீர் இணைப்பை முறையா செய்யலை... மழை நீர் வடிகால், தெரு குடிநீர் குழாய்கள் அமைக்கலை... ரோடு வசதியும் செய்து தரலைங்க...
''சென்னை மாநகராட்சியில் முறையிட்டால், வீட்டு வசதி வாரியம், மாநகராட்சியிடம் முறையா ஒப்படைக்கலைன்னு காரணம் சொல்றாங்களாம்...
''மெட்ரோ குடிநீரை, கமர்ஷியல் பேசிஸ் அடிப்படையில் சப்ளை செஞ்சதால, குடிநீர் கட்டணம் பல மடங்கு அதிகமாகி, அதை கட்ட முடியாம குடியிருப்புவாசிகள் தவிக்கிறாங்க... நிலத்தடி நீரும் உப்பாக இருப்பதால் தோல் நோய் வருதுங்க...
''இதனால, 'இந்த குறைகளை எல்லாம் சரி செய்து தரணும்'னு குடியிருப்பு வாசிகள் எல்லாம், முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பியிருக்காங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிகாரி லீவ்ல போயிட்டா, அவங்களிடம் வேலை பார்க்கறவாளும் காணாம போயிடறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருச்சி மத்திய சிறையில இருக்கற பெண் அதிகாரியை தான் சொல்றேன்... இவங்களிடம், இரண்டு டிரைவர்கள், இரண்டு பாதுகாவலர்கள், வீட்டு வேலைக்கு ஒருத்தர்னு அஞ்சு சிறை காவலர்கள் பணியாற்றிட்டு வரா ஓய்...
''பெண் அதிகாரி லீவுல போயிட்டாங்கன்னா, இந்த அஞ்சு பேரும் டூட்டிக்கு வராம, ஆத்துக்கு போயிடறா... சமீபத்துல, பெண் அதிகாரி, 10 நாள் லீவுல போயிருக்காங்க... இதனால, அந்த அஞ்சு பேரும், அவா சொந்த ஊருக்கு போயிட்டா...
''இவா இப்படி அடிக்கடி காணாம போயிடறதால, மத்த காவலர்கள் லீவ் எடுக்க முடியாம தவிக்கறா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

