/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
110வது விதியின் கீழ் வருகிறது முக்கிய சலுகைகள்!
/
110வது விதியின் கீழ் வருகிறது முக்கிய சலுகைகள்!
PUBLISHED ON : மார் 18, 2025 12:00 AM

“வியாபாரிகள் தான் ஆதிக்கம் பண்ணுதாவ வே...” என்றபடியே, நண்பர்கள் மத்தியில் அமர்ந்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருப்பூர் மாவட்டம் உடுமலை உழவர் சந்தையில, ஊட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் சார்பில், டீத்துாள் விற்க ஒரு பெண்மணிக்கு அனுமதி குடுத்திருக்காவ... ஆனா, அவங்க டீத்துாள் விற்காம, உள்ளூர்ல விளையும் சின்ன வெங்காயத்தை கொள்முதல் செய்து, உழவர் சந்தையில் வித்துட்டு இருக்காங்க வே...
“உழவர் சந்தையில், விவசாயிகளை விட வியாபாரிகள் அதிகரிச்சிட்டாங்கன்னு விவசாயிகள் புகார் செஞ்சாவ... உழவர் சந்தை அதிகாரியும் உடனே ஆய்வு செய்து, ஊட்டி உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்துக்கு வழங்கிய கடையை ரத்து செஞ்சாரு வே...
“ஆனா, உயர் அதிகாரிகள் ஆசியுடன் அந்த பெண்மணி மறுபடியும் சந்தைக்குள்ள நுழைஞ்சிட்டாங்க... இதை கண்டிச்சு, விவசாயிகள் போராட்டம் நடத்தியும் தீர்வு கிடைக்கல வே...” என்றார், அண்ணாச்சி.
“சுந்தரவடிவேல், வெங்கடாசலம் இப்படி உட்காருங்க... ஊருல சபீனா சவுக்கியமா...” என, நலம் விசாரித்த அந்தோணிசாமியே, “கல்லா பெட்டியை நிரப்பிட்டு இருக்காருங்க...” என்றபடியே தொடர்ந்தார்...
“சென்னை மாநகராட்சி, எட்டாவது மண்டலத்துல ஒரு ஏ.இ., இருக்காரு... இவர், பிளாட்பார கடைகளை, 'ஏ, பி, சி'ன்னு தரம் பிரிச்சிருக்காரு... தரத்துக்கு ஏற்ப, கடைக்கு மாசம் 1,000 ரூபாயில் இருந்து, 10,000 ரூபாய் வரை மாமூல் கறந்துடுறாருங்க...
“இவரது மண்டலத்துல, யார், எந்த பில்டிங் கட்டுனாலும், முதல்ல இவருக்கு, 'கப்பம்' கட்டணும்... அதுவும் இல்லாம, கேபிள் புதைக்க சாலையை துண்டிக்கிறது, சட்டவிரோதமா பேனர்கள் வைக்கிறதுக்குன்னு தொட்டதுக்கு எல்லாம் காசை கறந்துடு றாருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“நந்தகோபால், நாளைக்கு பார்க்கலாம்...” என, நண்பரிடம் விடைபெற்றபடியே வந்த குப்பண்ணா, “முக்கிய அறிவிப்புகள் எல்லாம் 110வது விதியின் கீழ் வரும்கறா ஓய்...” என்றபடியே தொடர்ந்தார்...
“தமிழக அரசின் பட்ஜெட், பொதுமக்களை கவராம போயிடுச்சுன்னு முதல்வருக்கு நெருக்கமான ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சிலர் சொல்லியிருக்கா... அதோட, அடுத்த வருஷ சட்டசபை தேர்தலை மனசுல வச்சு, சட்டசபை கூட்டத்தொடர்ல, 110வது விதியின் கீழ் முக்கிய அறிவிப்புகளை வரிசையா வெளியிடவும் ஆலோசனை குடுத்திருக்கா ஓய்...
“இதனால, ஏப்ரல் இறுதி வரைக்கும் நடக்க போற சட்டசபை கூட்டத்தொடர்ல, 110வது விதியின் கீழ் பல கவர்ச்சிகர திட்டங்கள் வரும்னு சொல்றா... ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களும் இதை ஆவலுடன் எதிர்பார்த்துண்டு இருக்கா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
“அப்புறம், செங்கல்பட்டு அரசு விழாவுக்கு கூட்டம் திரட்ட சொன்ன அமைச்சர் அன்பரசன், நிர்வாகிகளுக்கு பணம் தரலன்னு பேசியிருந்தோமுல்லா... ஆனா, முதல்வர் கலந்துக்கிட்ட அரசு விழா என்பதால, பயனாளிகள் நிறைய பேர் வந்திருக்காவ வே...
“பொதுமக்கள் நிறைய பேர் கலந்துக்கணும்னு தான் அன்பரசன் சொல்லியிருக்காரு... மற்றபடி பணம் குடுத்து, ஆட்களை அழைச்சிட்டு வாங்கன்னு யார்கிட்டயும் சொல்லலையாம் வே...” என, அண்ணாச்சி விளக்கம் அளிக்க, பெரியவர்கள் தலையை ஆட்டியபடியே நடந்தனர்.