/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
நிதி நிறுவன மோசடியால் அதிகரிக்கும் தற்கொலைகள்!
/
நிதி நிறுவன மோசடியால் அதிகரிக்கும் தற்கொலைகள்!
PUBLISHED ON : பிப் 04, 2024 12:00 AM

''தேர்தல் பணிகளில் பம்பரமா சுத்தறா ஓய்...'' என்றபடியே, தட்டில் மெதுவடையுடன் வந்தமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த கட்சியிலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''எல்லாம் ஆளுங்கட்சியில தான் ஓய்... லோக்சபா தேர்தல் வேலைகளில் தி.மு.க., பயங்கர, 'ஸ்பீடா' களம் இறங்கிடுத்து... போன வருஷம், அக்டோபர் மாசமே பூத் கமிட்டி அமைச்சுட்டா ஓய்...
''பூத்துக்கு ஒரு தலைவரையும், 100 வாக்காளர்களுக்கு ஒரு பொறுப்பாளரையும் நியமிச்சுட்டா... ஒவ்வொரு வார்டிலும், ஓ.எம்.ஆர்., சீட்டில் குடும்ப உறுப்பினர்கள், அவர்கள் பயன்பெறும் நலத்திட்டங்கள், அவாளுக்கு தேவையான நலத்திட்டங்களை பூத் கமிட்டி தலைவர்கள் கண்கெடுத்து இருக்கா ஓய்...
''தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைகளின் போது, பொறுப்பாளர்களுக்கு 1,000 ரூபாயும், பூத் கமிட்டி தலைவருக்கு 2,000 ரூபாயும் கொடுத்திருக்கா... இதுக்கு மட்டும் பல கோடிகளை அள்ளி விட்டுருக்கா ஓய்...
''தேர்தல் தேதி அறிவிப்புக்கு முன் இன்னொரு, 'ரவுண்ட்' நிதி ஒதுக்கப் போறதா சொல்லியிருக்கா... பூத் கமிட்டி நிர்வாகிகள், 'டபுள்' உற்சாகத்தோட வேலை பார்த்துண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நகராட்சியில முறைகேடு நடக்குது பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சியில டி.பி.சி., எனப்படும் டெங்கு உற்பத்தி கன்ட்ரோலர் ஒப்பந்த பணியாளர்கள் இருக்குறாங்க... இவர்களின் தினசரி வருகை பதிவேட்டுல முறைகேடு நடக்குது பா...
''இந்த பணியாளர்களுக்கு, கலெக்டரால் நிர்ணயம் செய்யப்பட்ட சம்பளம் நாள் ஒன்றுக்கு 492 ரூபாயாம்... ஆனா, ஒப்பந்ததாரர்கள், 200 ரூபாய் மட்டும் கொடுத்துட்டு மீதியை முழுங்கிடுறாங்க...
''இந்த பணியாளர்களின் ஒப்பந்தத்தை ரத்து செய்துட்டு, முறைகேடு குறித்து உரிய விசாரணை நடத்த சொல்லி, நகராட்சி கமிஷனருக்கு ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் ரெண்டு பேர் புகார் அனுப்பி இருக்குறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
நிறுவன மோசடிகளால் மூணு மாவட்டத்துல கடத்தல், தற்கொலைகள் அதிகரிச்சுட்டு வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''அதிக வட்டி தர்றதா ஆசைகாட்டி, ஆருத்ரா, ரபேல், ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட நிதி நிறுவனங்கள், மக்கள் பணத்தை சுருட்டிட்டு கம்பி நீட்டிட்டுல்லா...
''இந்த மோசடியில, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள்ல ஏராளமான அப்பாவிகள் பணத்தை இழந்து நிக்காவ... பணத்தை இழந்தவங்க, சென்னை பொருளாதார குற்றப்பிரிவுல புகார் கொடுத்து ஒரு வருஷம் ஆகியும், எந்த நடவடிக்கையும் இல்ல வே...
''உள்ளூர் ஆட்களையே ஏஜன்டுகளா நியமிச்சதால, அவங்களை நம்பி ஜனங்க பணத்தை போட்டுட்டு, இப்ப அந்த ஏஜன்டுகளுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பிச்சிருக்காவ...
''ஏமாந்த சிலர், ஏஜன்டுகளை கடத்திட்டு போயும் மிரட்டுதாவ... இதுக்கு பயந்து பல ஏஜன்டுகள் தலைமறைவாகிட்டாவ... பணத்தை இழந்த, 10க்கும் மேற்பட்டவங்க தற்கொலை பண்ணிட்டாவ வே...
''அப்பாவி ஜனங்களை தெருவுக்கு கொண்டு வந்த நிதி நிறுவன முதலாளிகள், வெளிநாட்டுல பதுங்கிட்டாவ... அவங்களுக்கு மேலிட ஆசி இருக்குறதால, போலீஸ் நடவடிக்கை வெறும் கண்துடைப்பு தான்னு சொல்லுதாவ வே...'' என்றார், பெரியசாமி அண்ணாச்சி.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.