/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஆளுங்கட்சி புள்ளிகளிடம் விலை போகும் உளவுத்துறை?
/
ஆளுங்கட்சி புள்ளிகளிடம் விலை போகும் உளவுத்துறை?
PUBLISHED ON : ஜூலை 06, 2025 12:00 AM

ஏலக்காய் டீயை பருகியபடியே, ''மக்கள் வரிப்பணம், 2.50 கோடி ரூபாய் முடங்கி கிடக்குது பா...'' என, பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
''எந்த துறையிலங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''உங்கள் தொகுதியில் முதல்வர் என்ற திட்டத்துல, சட்டசபை தொகுதி வாரியா, முக்கியமான, 10 பணிகளை பட்டியலிட்டு தருமாறு முதல்வர் கேட்டிருந்தாரே...
''இதுல, திருப்பூர் மாவட்டம், அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்கும்படி, தொகுதியின் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வும், முன்னாள் சபாநாயகருமான தனபால் பரிந்துரை செஞ்சிருந்தாரு பா...
''இதன்படி, 2.50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, பணியும் துவங்குச்சு... மேம்பாலத்துக்கான இரும்பு துாண்கள் நிறுவப்பட்ட நிலையில், அப்பகுதி கடைக்காரர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவிச்சு, கோர்ட்ல வழக்கு போட்டு, பணிக்கு தடை வாங்கிட்டாங்க பா...
''இப்ப, பணிகள் பாதியில நிற்குது... 'முதல்லயே அந்த பகுதி மக்களிடம் கருத்து கேட்டிருந்தா, இப்படி முட்டுக்கட்டை விழுந்திருக்காது... மக்கள் வரிப்பணம், 2.50 கோடி ரூபாய் முடங்கியிருக்காது'ன்னு அந்த பகுதி மக்கள் புலம்புறாங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சும்மா இருக்கிறவங்களை களையெடுக்க போறாவ வே...'' என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''ஈரோடு எஸ்.பி.,யா, கடந்த ஏப்ரல்ல சுஜாதா பொறுப்புக்கு வந்தாங்க... வந்த சில நாட்கள்லயே, டி.சி.ஆர்.பி., எனப்படும் மாவட்ட குற்ற ஆவணங்கள் பதிவேடு பிரிவின் செயல்பாடுகள் மந்தமா இருக்கிறதை கண்டுபிடிச்சாங்க வே...
''கொஞ்ச நாளைக்கு முன்னாடி, முதல்வர் ஈரோடு வந்து போனது சம்பந்தமான பாதுகாப்பு பணி தகவல்களை அனுப்பவே, டி.சி.ஆர்.பி., போலீசார், 'லேட்' பண்ணியிருக்காவ... இந்த அதிருப்தியை எஸ்.பி., வாக்கி டாக்கியிலயே பகிரங்கமா தெரிவிச்சாங்க வே...
''வேலை செய்யாம ஓய்வு எடுக்க நினைக்கிற போலீசார், இந்த மாதிரி துறைகளை தேர்வு செஞ்சு வந்துடுதாவ... இதனால, ஒட்டுமொத்தமா இந்த போலீசாரை இடமாற்றம் செய்ய ஏற்பாடுகள் நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.
''நல்லவா, வல்லவான்னு அறிக்கை குடுத்திருக்காங்க ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''யாருக்குங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சட்டசபை தேர்தல் பணிகள்ல, தி.மு.க., தீவிரமா இறங்கிடுத்தோல்லியோ... ஒன்றிய மற்றும் பகுதி செயலர்களின் செயல்பாடுகள் பத்தி உளவுத்துறையிடம் ஆட்சி மேலிடம் அறிக்கை கேட்டது ஓய்...
''இதுல, 'திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட ஆறு ஒன்றிய செயலர்களும், எந்த தவறும் செய்றது இல்லை... மிஸ்டர் கிளீனா இருக்கா'ன்னு அறிக்கை குடுத்திருக்கா...
''இதை கேள்விப்பட்ட மற்ற ஒன்றிய செயலர்கள், 'அடப்பாவமே... ஏகப்பட்ட வில்லங்கம் பண்றவாளை போய் நல்லவான்னு சர்டிபிகேட் குடுத்திருக்காளே... உளவுத்துறையினர் விலை போயிட்டாளா'ன்னு புலம்பறா ஓய்...
''அதாவது, ரயில்வே போலீஸ் ஏட்டு ஒருத்தர், தன்னை உளவுப்பிரிவு போலீஸ் மாதிரி காட்டிக்கறார்... இவர், சில ஒன்றிய செயலர்களிடம், 'கட்டிங்' வாங்கிட்டு, அவாளை பத்தி நல்லவா, வல்லவான்னு தனக்கு நெருங்கிய உளவுத்துறை பெண் அதிகாரிக்கு தெரிவிக்க, அவங்களும் அதையே ஆட்சி மேலிடத்துக்கு அனுப்பிட்டாங்க ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.