/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மதிக்காத நேர்முக உதவியாளர்!
/
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை மதிக்காத நேர்முக உதவியாளர்!
PUBLISHED ON : பிப் 20, 2025 12:00 AM

டீக்கு ஆர்டர் தந்தபடியே, ''இடவசதி இல்லாம அல்லாடுதாங்க வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை பீச் ரோட்டுல இருக்கிற டி.ஜி.பி., அலுவலகத்தில், எஸ்.பி.சி.ஐ.டி., எனப்படும் உளவுத்துறை அலுவலகம் இருக்கு... இங்க, 'கால் சென்டர்' மாதிரி, 'செட்டப்' பண்ணி வச்சிருக்காவ வே...
''மாவட்ட வாரியா சேகரிக்கப்படும் உளவுத் தகவல்களை, உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கிற பணியை, இங்க வேலை செய்ற அதிகாரிகள் செய்யுதாவ... ஆனா, இங்க போதிய இடவசதி இல்ல வே...
''நெருக்கமா சீட்களை போட்டு வச்சிருக்கிறதால, உளவுத் தகவல்களை சேகரிக்கிறதுல ரகசியம் காக்க முடியாம அதிகாரிகள் சிரமப்படுதாவ... இடவசதி, இருக்கைகள் கிடைக்காம, சில நேரங்கள்ல, அலுவலகத்துக்கு வெளியில அதிகாரிகள் காத்துக் கிடக்கிற சூழலும் ஏற்படுது... இதனால, தங்களுக்கு விசாலமான இடத்தை ஒதுக்கிக் குடுக்கணும்னு அவங்க கேட்காவ வே...''என்றார், அண்ணாச்சி.
''முதல் ஆளா ஆஜராகிட்டா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''தி.மு.க.,வில், சமீபத்துல சில மாவட்ட அமைப்புகளை மாத்தி அமைச்சாளோல்லியோ... இதுல, மதுரை மாநகர செயலரான தளபதியிடம் இருந்த மேற்கு சட்டசபை தொகுதியை, அமைச்சர் மூர்த்திக்கு கைமாத்தி விட்டுட்டா ஓய்...
''மாவட்டச் செயலர் என்ற முறையில், தளபதி எந்த நிகழ்ச்சிக்கும் பந்தாவா கிளம்பினார்னா, மேற்கு தொகுதி நிர்வாகிகள் தான் வாகனங்கள் புடைசூழ போவா... இப்ப, மேற்கு தொகுதி கைநழுவிட்டதால அவாள்லாம், 'அப்செட்' ஆகிட்டா ஓய்...
''தலைமையிடம் பேசி, 'மேற்கு தொகுதியைமறுபடியும் தளபதி வசமே தாங்க'ன்னு கேட்டும், கிடைக்கல... இதனால, மேற்கு தொகுதியில இருக்கற சில நிர்வாகிகள், தளபதி வசம் இருக்கற மத்திய தொகுதிக்கு தங்களது வீடுகளை மாத்திண்டு இருக்கா ஓய்...
''இதுக்கு மத்தியில, மேற்கு தொகுதி நிர்வாகிகளை எல்லாம் சந்திக்கணும்னு அமைச்சர் மூர்த்தி அழைப்பு விடுத்திருக்கார்... இதுல என்ன, 'டுவிஸ்ட்'னா, தளபதிக்கு ரைட்டும், லெப்டுமா யார், யாரெல்லாம் வலம் வந்தாளோ, அவாள்லாம் மூர்த்தி முன்னாடி முதல் ஆட்களா, 'அட்டெண்டன்ஸ்' போட்டு, அவரது விசுவாசிகளா மாறிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''நேர்முக உதவியாளர் எல்லை மீறி போறாரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''யாருங்க அது...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''துணை முதல்வர் உதயநிதியின் நேர்முகஉதவியாளரா, டி.ஆர்.ஓ., அந்தஸ்துல ஒரு அதிகாரி இருக்கார்... துணை முதல்வருக்கு இவர் நெருக்கமா இருக்கிறதால, மற்ற அதிகாரிகள் யாரையும் மதிக்க மாட்டேங்கிறாரு பா...
''உதயநிதியின் நிகழ்ச்சிகள் குறித்து, அவரது செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கூட தகவல் தர மாட்டேங்கிறாரு... 'ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளா இருந்தாலும், அவங்கதான் என்கிட்ட வந்து கேட்கணும்... நான் போய், அவங்களிடம் எந்த தகவலையும் சொல்ல மாட்டேன்'னு எடுத்தெறிஞ்சும் பேசுறாரு பா...
''இவரை தாண்டி, உதயநிதியை யாரும் நெருங்க முடியாதாம்... இதனால, இவர் மேல உயர் அதிகாரிகள் எல்லாம் கடும் கோபத்துல இருக்காங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
பெரியவர்கள் அரட்டை முடிய, பெஞ்ச் கலைந்தது.