PUBLISHED ON : மே 16, 2026 12:00 AM

செய்யூர்: செய்யூர் தாசில்தார் அலுவலக நுழைவாயில் பகுதியில் 3 ஆண்டுகளுக்கு பின், புதிய இரும்பு கேட் அமைக்கப்பட்டது.
செய்யூர் பஜார் வீதியில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்தல், ஆதார் அட்டை விண்ணப்பித்தல், சொத்து மதிப்பு சான்று, நில அளவைக்கு பதிவு செய்தல் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை பெற வந்து செல்கின்றனர்.
மேலும் வட்டாட்சியர் அலுவலகத்தின் பின்புறம் சார்நிலை கருவூலம் உள்ளது. இங்கு 3 ஆண்டுகளுக்கு முன் செய்யூர் - மேல்மருவத்துார் மாநில நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காக சாலை ஓரத்தில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கப்பட்டது.
தாசில்தார் அலுவலகம் எதிரே மழைநீர் வடிகால்வாய், நுழைவாயில் மட்டத்தை விட உயர்த்தி அமைக்கப்பட்டதால், இருசக்கர வாகனங்களில் வருவோர் சறுக்கி விழுந்து அடிக்கடி விபத்தில் சிக்கினர்; இதனால் நுழைவாயில், பகுதியில் இருந்த இரும்பு கேட் அகற்றப்பட்டது. இரவு நேரத்தில் கால்நடைகள் உலா வந்தன.
மேலும் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் கருவூலத்திற்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவி வந்தது. இதையடுத்து 3 ஆண்டுகளுக்கு பின், பொதுப்பணித்துறை சார்பில் செய்யூர் தாசில்தார் அலுவலக நுழைவாயில், பகுதியில் புதிய கேட்டுகள் அமைக்கப்பட்டு உள்ளது.
