/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
அனல் மின் நிலைய பராமரிப்பில் முறைகேடு!
/
அனல் மின் நிலைய பராமரிப்பில் முறைகேடு!
PUBLISHED ON : அக் 20, 2025 12:00 AM

ப டபடக்கும் பட்டாசு சத்தத்துக்கு மத்தியில், பெஞ்சில் ஆஜரான பெரியவர்கள், தீபாவளி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். பெரிய சாமி அண்ணாச்சி எடுத்து வந்திருந்த அதிரசத்தை ருசித்த படியே, ''பட்டியல் வெளியாயிடுத்து ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''என்ன பட்டியலுங்க...'' என கேட்டார், அந்தோணிசாமி.
''சென்னை, நந்தனத்துல இருக்கற கருவூல கணக்கு துறை இயக்குநர் அலுவலகத்துல, கூடுதல் இயக்குநர், இணை இயக்குநர் பதவி உயர்வு பட்டியலை வெளியிடாம பதுக்கி வச்சிருக்கான்னு பேசியிருந்தோமோல்லியோ... மறுநாளே, தலைமை செயலகத்தில் இருந்து, முதல்வருக்கு நெருக்கமான மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கூப்பிட்டு, 'டோஸ்' விட்டிருக்கார்...
''அதுக்கு, துறை ரீதியா சில காரணங் களை சொல்லி, அதிகாரிகள் பூசி மெழுகியிருக்கா... அதை ஏற்காத ஐ.ஏ.எஸ்., அதிகாரி, 'உங்க கடமையை ஒழுங்கா செய்யுங்கோ'ன்னு சொல்லிட்டார்... உடனே, 22 பேர் பதவி உயர்வு பட்டியலை வெளி யிட்டுட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''மூடி மறைச் சுட்டாங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...
''விருதுநகர் அரசு மருத்துவமனையில், தி.மு.க., நகராட்சி கவுன்சிலர் ஒருத்தரின் உறவினர் 'கேன்டீன்' நடத்துறாரு... இங்க, மின்வாரிய அதிகாரிகள் திடீர்னு ஆய்வு நடத்தினாங்க...
''அப்ப, மருத்துவமனை இணைப்புல இருந்து மின்சாரத்தை எடுத்து, விதிமீறல்ல ஈடுபட்டது தெரிஞ்சது... இதுக்காக அவருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிச்சாங்க...
''நகராட்சி கவுன்சிலர், மாவட்ட அமைச்சர் ஒருத்தருக்கு நெருக்கம் என்பதால, இந்த விவகாரம் வெளியில கசியாம மின்வாரியத்தினர் பார்த்துக்கிட்டாங்க... 1 லட்சம் ரூபாய் அபராதத்தை ஒரு வாரத்துல வசூல் பண்ணிட்டு, 'அப்படி எந்த ஆய்வும் நடக்கவே இல்ல'ன்னு மின்வாரியத்தினர் சாதிச்சுட்டாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''வாங்க, மதியழகன்... உங்க நண்பர் ராமச் சந்திரன் வரலையா பா...'' என, நண்பரை வரவேற்ற அன்வர்பாயே, ''பராமரிப்பு பணிகள்ல முறைகேடு பண்ணிட்டாங்க பா...'' என, கடைசி தகவலுக்கு மாறினார்.
''எந்த துறையில வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''துாத்துக்குடியில், தமிழக அரசுக்கு சொந்தமான அனல் மின் நிலையத்தில், 5 யூனிட்கள் இருக்கு... ஒவ்வொரு யூனிட்டிலும், ஆறு மாசத்துக்கு ஒருமுறை, 15 நாட்கள் பராமரிப்பு பணிகள் நடக்கும் பா...
''போன மார்ச் மாசம் இங்க நடந்த தீ விபத்தால, இரண்டு யூனிட்கள் இப்ப வரை இயங்கல... சமீபத்துல, 3வது யூனிட்ல வழக்கமான பராமரிப்பு பணிகள், 3.50 கோடி ரூபாய் செலவுல, 20 நாட்கள் நடந்துச்சு பா...
''பணிகள் முடிஞ்சு, மின் உற்பத்தியை துவங்க அதிகாரிகள் தயாரானப்ப, யூனிட் செயல்படல... மொத்தம், ஏழு வகையான பராமரிப்பு பணிகளை ஒப்பந்ததாரர்கள் சரியா செய்யாம ஒப்பேத்தி விட்டிருக்காங்க பா...
''இதை கண்டுக்காம இருக்க சில அதிகாரிகள், 'கட்டிங்' வாங்கிட்டு கமுக்கமா இருந்திருக்காங்க... அப்புறமா, மறுபடியும், 10 நாட்கள் பராமரிப்பு பணிகளை பார்த்து, மின் உற்பத்தியை துவங்கியிருக்காங்க பா...
''இது சம்பந்தமா, ஒப்பந்ததாரர்கள், அவங்க ஆதரவு அதிகாரிகள் மீது சென்னைக்கு புகார்கள் போயிடுச்சு... சீக்கிரமே இது சம்பந்தமா விசாரணை நடக்கும்னு சொல்றாங்க பா...'' என முடித்தார், அன்வர்பாய்.
''மதியம் வீட்டுல விருந்து இருக்கு... எல்லாரும் வந்துருங்க வே...'' என, நண்பர்களுக்கு அழைப்பு விடுத்தபடியே அண்ணாச்சி எழ, மற்றவர்களும் கிளம்பினர்.