PUBLISHED ON : ஜன 16, 2024 12:00 AM
எம்.ஜி.ஆர்., சிவாஜியை வார்த்தெடுத்தது யார்?
ஏ.எஸ்.ஆதித்யா, அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: திரைத்துறையினர் நடத்திய, 'கலைஞர் 100' விழா படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் ஒரு துணி கடை திறப்பு விழாவில், சினிமா நடிகை பங்கேற்றால் கூட, அது துணை நடிகையாக இருந்தாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் அளவிற்கு பொதுமக்கள் திரண்டு விடுவர்.
ஆனால், தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றும், உலக நாயகன் என்றும் தங்களை அடையாளப்படுத்தி வரும் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் பங்கேற்ற நிகழ்ச்சியில், காலி சேர்கள் அணிவகுத்து நின்ற காட்சியை பார்க்கையில் மிக பரிதாபமாக இருந்தது.
திரையுலகில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள ரஜினியும், ஒரே ஒரு எம்.பி., சீட்டுக்காக கமலும் தி.மு.க.,வின் ஜால்ராவாக மாறி இருப்பது, அப்பட்டமாகத் தெரிகிறது. இவர்கள், 'கருணாநிதி இல்லையெனில், தமிழ் சினிமாவே இல்லை;
எம்.ஜி.ஆரும், சிவாஜியும் உச்சம் தொட கருணாநிதி தான் காரணமே' என்பது போன்ற ஒரு பொய்யான பிம்பத்தை கட்டமைக்கப் பார்க்கின்றனர்.
எம்.ஜி.ஆர்., நடித்த படங்கள், 130; சிவாஜி நடித்த படங்கள், 288. இதில், கருணாநிதி கதை, வசனத்தில் இவர்கள் நடித்த படங்களின் எண்ணிக்கை, 10க்கும் குறைவு.
மேலும், அவர்கள் தங்களது திறமையாலும், உழைப்பாலும், மக்கள் ஆதரவாலும் தான் பேரும், புகழும் பெற்றனரே தவிர, கருணாநிதியின் பங்களிப்பு இதில் எங்கு இருக்கிறது?
தமிழ் திரையுலகின் ஜாம்பவான்களான, பி.ஆர்.பந்துலு, ஏ.சி.திருலோகசந்தர், ப.நீலகண்டன், கே.சங்கர், ஸ்ரீதர், கே.எஸ். கோபாலகிருஷ்ணன், பீம் சிங், ஏ.பி.நாகராஜன் ஆகியோர் தான் எம்.ஜி.ஆர்.,
சிவாஜியை வார்த்தெடுத்த சிற்பிகள்!இந்த இயக்குனர்களின் பெயரை
இருட்டடிப்பு செய்து, காலாவதியான பராசக்தி வசனத்தையே பல்லவி பாடி, கருணாநிதியை முன்னிறுத்துகின்றனர். கமல்ஹாசனுக்கும், ரஜினிகாந்திற்கும் தாங்கள் சார்ந்திருக்கும் திரைத்துறை மீது உண்மையிலேயே விசுவாசம் இருந்தால், இது போன்ற பழம்பெரும் இயக்குனர்களின் பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.
உங்கள் சுயநலத்திற்காக தி.மு.க.,வுக்கு ஜால்ரா அடிப்பதால், நடந்து முடிந்த கருணாநிதி நுாற்றாண்டு விழாவில், உங்களது ரசிகர்கள் கூட உங்கள் தரிசனத்திற்காக வரவில்லை பார்த்தீர்களா?
தங்களது அபிமான நடிகர்களின் கட் -அவுட்களுக்கு பாலாபிஷேகம் நடத்தி, படத்தின் வெற்றிக்காக மண் சோறு தின்னும் பைத்தியக்கார ரசிகர்கள் நிறைந்த தமிழகத்தில், இரு மாபெரும் நடிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி, அவர்களது ரசிகர்களாலேயே புறக்கணிக்கப்பட்டிருப்பது
வரவேற்கத்தக்கது.
கும்பாபிஷேகத்தைஅனைவரும்கொண்டாடுவோம்!
கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ராம ஜென்மபூமி மீட்பு போராட்டம், 500 ஆண்டுகளுக்கும் மேலாக தொடரும் பிரச்னை என்று சொல்லி, சாதாரணமாக கடந்து போக முடியாது. 1528ல் கோவிலை இடித்து விட்டு, பாபர் மசூதியை கட்டினரோ, அன்றே துவங்கி விட்டது
போராட்டம்.அந்த காலத்தில் நடந்த மூர்க்கத்தனமான போர்கள், பிரிட்டிஷ் ஆட்சியில் துவங்கிய சட்ட போராட்டங்கள், முலாயம் சிங் ஆட்சியில் நடந்த துப்பாக்கி சூடுகள், உயிர் பலிகள் என்று எதையும் மறக்கவில்லை மக்கள். அயோத்தி ராம ஜென்ம பூமி இயக்கம், இந்திய அரசியலில் ஒரு திருப்பு
முனையை ஏற்படுத்தியது என்பது உண்மை.அயோத்தி வழக்கு கடந்து வந்த பாதையை சற்று பின்னோக்கி பார்த்தால், ஆச்சரியமூட்டும் சில செய்திகள் தெரியவரும்...
கடந்த 1986, பிப்., 1ல் தன் தீர்ப்பின் வாயிலாக, அயோத்தி கோவிலின் பூட்டை திறக்கச் செய்தவர், அன்றைய பைசாபாத் மாவட்ட நீதிபதி, கே.எம்.பாண்டே. இவர் எழுதிய, 'வாய்ஸ் ஆப் கான்ஸ்ஷியன்ஸ்' என்ற புத்தகத்தில் அவர் கூறும் விஷயம்
ஆச்சரியமளிக்கிறது...'நான் தீர்ப்பு வாசிக்கும் தினத்தன்று, கரிய நிறத்தில் குரங்கு ஒன்று, நீதிமன்றத்தில் கொடி கம்பத்தை பிடித்தபடியே, காலை முதல் மாலை வரை இருந்தது. மக்கள் கொடுத்த எந்த உணவையும் அது சாப்பிடவில்லை. அந்த குரங்கு என் வீட்டு முற்றத்திற்கு வந்து, பின் சென்று விட்டது. ஒரு தெய்வீக சக்தி எனக்கு உதவியது' என்று அவர் சொல்வது மெய்சிலிர்க்கும் வகையில் உள்ளது.
ஹிந்துக்களுக்கு ஆதரவாக கே.எம்.பாண்டே தீர்ப்பு கூறியதால், முலாயம் சிங் ஆட்சியில், உயர்நீதிமன்ற நீதிபதியாக பாண்டேவுக்கு பதவி உயர்வு மறுக்கப்பட்டது.
'அரசியல்வாதிகள், குறிப்பாக, காங்கிரஸ்மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள், அயோத்தி வழக்கு விசாரணையில் தலையிட்டு, இந்த வழக்கு விரைவில் முடியக்கூடாது என்பதற்காக பாடுபட்டனர்' என்று உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி
ரஞ்சன் கோகோய், 'ஜஸ்டிஸ் பார் தி ஜட்ஜ்' என்ற தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார். 'அயோத்தி குறித்து, ஹிந்துக்களுக்கு ஆதரவான தொல்பொருள் ஆராய்ச்சி துறையின் அறிக்கை வெளிவரக் கூடாது என்று கம்யூனிஸ்ட்கள் பெரும் முயற்சி செய்தனர்' என்று அதன் முன்னாள் இணை இயக்குனர் கே.கே.
முஹமதும் பல முறை கூறியிருக்கிறார்.
இவ்வளவு தடைகளையும் கடந்து, ஒரு நீண்ட நெடிய சட்ட போராட்டத்திற்கு பின், ராமர் கோவில் ஹிந்துக்களுக்கு மீண்டும் கிடைத்திருக்கிறது. இதை அனைவரும் கொண்டாட வேண்டும்.
கட்சி வேறுபாடுகளை மறந்து, அனைத்து தலைவர்களும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள வேண்டும்.
ஜெயம் கிடைப்பதைதடுக்கும் ஜெயகுமார்!
கண்ணன் தமிழ்ச்செல்வன்,உடுமலைப்பேட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இனி, தமிழகத்தில் பா.ஜ., உடன் ஒட்டும் இல்லை; உறவும் இல்லை' என்று முதலில் முழங்கியவர் அ.தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தான். இது போதாதென்று, தற்போது ரஜினியையும் வம்புக்கு இழுத்து உள்ளார்.
'கருணாநிதி நுாற்றாண்டு விழாவில் பேசிய ரஜினி, கருணாநிதியால் தான், சினிமாவில் எம்.ஜி.ஆர்., சாதிக்க முடிந்தது என்பது போல பேசியுள்ளார்.
'ஆனால், எம்.ஜி.ஆர்., தன் திறமை, மக்கள் செல்வாக்கால் வளர்ந்தார். அவரால் தான், கருணாநிதியே முதல்வர் பதவிக்கு வந்தார். ரஜினி வரலாற்றை திரிக்கக் கூடாது' என, திரியை பற்ற வைத்துள்ளார் ஜெயகுமார்.
சினிமா கலைஞர்கள் நடத்திய கருணாநிதி நுாற்றாண்டு விழா, மக்கள் மத்தியில் பெரிய அளவில் சென்று சேரவில்லை; அன்று ஒரு நாளோடு, அது முடிந்து போயிருக்கும். ஆனால், ஜெயகுமார் அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தி விட்டார்.
இதன் வாயிலாக, ரஜினி ரசிகர்கள் ஓட்டுகளும், அ.தி.மு.க.,வுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதை அணை போட்டு தடுத்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். ஜெயகுமார் போன்ற, 'மைக் மேனியா' தலைவர்கள் இருக்கும் வரை, அ.தி.மு.க.,வுக்கு ஜெயம் கிடைக்குமா என்பது
சந்தேகமே!