/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
' டெண்டருக்கு ' விண்ணப்பித்ததுமே கமிஷன் பேரம்!
/
' டெண்டருக்கு ' விண்ணப்பித்ததுமே கமிஷன் பேரம்!
PUBLISHED ON : ஏப் 21, 2025 12:00 AM

பில்டர் காபியை பருகியபடியே, ''யாருக்கு பதவி கிடைக்கும்னு தெரியல ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எந்த கட்சியில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''பா.ஜ.,வுல, நாடு முழுக்கவே உட்கட்சி தேர்தல் நடத்தி, மாநில தலைவர்களை தேர்வு பண்ணிண்டு இருக்கால்லியோ... தேசிய தலைவர் பதவிக்கு இன்னும் சரியான ஆளை, 'செலக்ட்' பண்ண முடியாம தவிக்கறா ஓய்...
''ஏன்னா, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா பரிந்துரைக்கிறவரை, ஆர்.எஸ்.எஸ்., ஏத்துக்க மாட்டேங்கறது... ஆர்.எஸ்.எஸ்., சிபாரிசை, இவா ரெண்டு பேரும் ஏத்துக்க மாட்டேங்கறா... இதனால, மூணு மாசமா தேசிய தலைவர் தேர்வு, இழுபறியா இருக்கு ஓய்...
''தேசிய தலைவர் தேர்வான பின், தேசிய துணைத் தலைவர், பொதுச்செயலர்கள், செயலர்கள், அணிகளின் தேசியத் தலைவர்கள் நியமிக்கப்பட இருக்கா... இந்த பதவிகளுக்கு கடும் போட்டி நடக்கறது ஓய்...
''தமிழகத்துல, முன்னாள் கவர்னர் தமிழிசை, மகளிரணி தேசிய தலைவர் வானதி ஆகியோரில் ஒருத்தருக்கு தேசிய பொதுச்செயலர் பதவி கிடைக்கும்னு சொல்றா... இப்ப, அண்ணாமலையும் இந்த போட்டியில் சேர்ந்துட்டதால, 'மூணு பேர்ல யாருக்கு அதிர்ஷ்டம் அடிக்கப் போறது'ன்னு கமலாலய வட்டாரத்துல பட்டிமன்றமே நடக்கறது ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''பொருட்காட்சி நடத்த பணம் வாங்கியவர் கதையை கேளுங்க பா...'' என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
''துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, பொருட்காட்சி நடந்துச்சு... இதுல, அனுமதியில்லாம ராட்சத ராட்டினங்களை இயக்கினாங்க பா...
''இது சம்பந்தமா, அமைச்சர் சேகர்பாபுவுக்கு சமூக ஆர்வலர்கள் சிலர் புகார் அனுப்பிட்டாங்க... அவரும், மாவட்ட நிர்வாகத்திடம் பேசி, ராட்டினங்களை இயக்க தடை விதிக்க சொல்லிட்டாரு பா...
''இது சம்பந்தமா, மாவட்ட அதிகாரி ஒருத்தரை, பொருட்காட்சி நடத்திய நிர்வாகி தொடர்பு கொண்டு பேசியிருக்காரு... அப்ப, 'மூணு வருஷமா எந்த அனுமதியும் இல்லாம, உங்களுக்கு பணம் தந்து தானே பொருட்காட்சி நடத்தினோம்... இந்த வருஷம் மட்டும் ஏன் பிரச்னை பண்றாங்க... ஆனா, யார் கேட்டாலும் உங்களை காட்டிக் குடுக்க மாட்டோம்'னு சொல்லி யிருக்காரு...
''இந்த ஆடியோ இப்ப பரவி, அதிகாரி துாக்கத்தைக் கெடுத்திருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.
''வாங்க பாண்டியன்...'' என, நண்பரை வரவேற்ற பெரியசாமி அண்ணாச்சியே, ''விண்ணப்பிச்சதுமே கமிஷன் கேட்காவ வே...'' என்றார்.
''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை மூலம், சிறுபாசன புத்துயிரூட்டுதல் திட்டத்தில், 32.04 கோடி ரூபாய் மதிப்பீட்டுல, 400 கண்மாய்களை துார்வார டெண்டர் விட்டாவ... இதுக்கு, கான்ட்ராக்டர்கள் ஆன்லைன்ல விண்ணப்பிச்சிருக்காவ வே...
''இப்படி விண்ணப்பிச்சவங்களிடம், ஆளுங்கட்சியினர், 30 முதல், 40 சதவீதம் வரைக்கும் கமிஷன் கேட்டிருக்காவ... நொந்து போன கான்ட்ராக்டர்கள் சிலர், எதிர்க்கட்சி தலைமைக்கு இந்த கமிஷன் பேரத்தை, 'பாஸ்' பண்ணிட்டாவ வே...
''விவகாரம் விஸ்வரூபம் ஆகவே, டெண்டரை அதிகாரிகள் ஒத்திவச்சுட்டாவ... 'சிவகங்கை ஊரக வளர்ச்சி துறை ஆபீஸ்ல சீக்கிரமே அமலாக்கத்துறை சோதனை நடக்கும்'னு கான்ட்ராக்டர்கள் சொல்லுதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

