/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு மல்லுக்கட்டும் தி.மு.க.,வினர்!
/
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு மல்லுக்கட்டும் தி.மு.க.,வினர்!
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு மல்லுக்கட்டும் தி.மு.க.,வினர்!
ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு மல்லுக்கட்டும் தி.மு.க.,வினர்!
PUBLISHED ON : அக் 29, 2025 12:00 AM

கு டையை மடித்தபடியே பெஞ்சில் அமர்ந்த பெரியசாமி அண்ணாச்சி, ''ஏ.பி.ஆர்.ஓ., பணிக்கு வசூல் வேட்டை நடக்கு வே...'' என, அரட்டையை ஆரம்பித்தார்.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''தமிழக அரசின் செய்தி துறையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் எனும் ஏ.பி.ஆர்.ஓ., பணியில், 10 இடங்கள் காலியா கிடக்கு... இதுக்கு, 'ஆன்லைன்' தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலமா அலுவலர்களை தேர்வு செய்ய முதல்வர் அனுமதி குடுத்துட்டாரு வே...
''இந்த பணியிடங்களை நிரப்பியதும், விளம்பர பிரிவுக்கு, 50 ஏ.பி.ஆர்.ஓ.,க்களை தேர்வு செய்யணும்... இப்பதவிகளை பிடிக்க, லட்சக்கணக்கில் பேரம் நடக்கு வே...
''ஆளுங்கட்சி புள்ளிகள் மற்றும் முக்கிய அதிகாரிகள், லட்சக்கணக்குல வசூல் வேட்டை நடத்துதாவ... அதே நேரம், 'இப்ப செய்தி துறையில் பணியில இருக்கிற, 20 பேருக்கு பதவி உயர்வு மூலமா, ஏ.பி.ஆர்.ஓ., பணி வழங்கணும்... அதை செய்யாம, ஆட்சி முடியும் நேரத்தில் கல்லா கட்டணும்னு இப்படி குறுக்கு வழியில ஆட்களை நியமிக்காவ'ன்னு கோட்டை வட்டாரங்கள்ல புலம்புதாவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''இன்னும் பணம் தராம இழுத்தடிக்கறா ஓய்...'' என்ற குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''துணை ஜனாதிபதி தேர்தலில், 'இண்டியா' கூட்டணி சார்பில், உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்ஷன் ரெட்டி போட்டியிட்டாரோல்லியோ... இவர், தி.மு.க., கூட்டணி கட்சிகளிடம் ஆதரவு திரட்டறதுக்காக, ஆக., 24ல் சென்னை க்கு வந்தார் ஓய்...
''தி.நகர்ல இருக்கும ் தி.மு.க., - எம்.பி., ஜெகத்ரட் சகனுக்கு சொந்தமான நட்சத்திர ஹோட்டல்ல, கூட்டணி கட்சிகளின் கூட்டம் நடந்துது... முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் எல்லா ம் கலந்துண்டா ஓய்...
''கூட்டத்தில் மைக், ஜெனரேட்டர், மின் விளக்கு அலங்காரம் செய்தவருக்கு, 2.50 லட்சம் ரூபாய் தரணும்... ஆனா, இன்னிக்கு வரைக்கும் இந்த தொகையை தராம எம்.பி.,யின் உதவியாளர், 'இன்று போய் நாளை வா' கதையா இழுத்தடிக்கறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்கு கடும் போட்டி நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எந்த கட்சியில பா...'' என கேட்டார், அன்வர்பாய்.
''துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதியின் காங்., - எம்.எல்.ஏ., அமிர்தராஜ், பெரும்பாலும் சென்னையில இருக்கிறதால, தொகுதிக்குள்ள இவரை பார்க்கவே முடியல... தொகுதி மக்கள், இவரது மொபைல் போனுக்கு கூப்பிட்டாலும், எடுக்கவும் மாட்டாருங்க.. .
''அதுவும் இல்லாம, தடுப்பணைகள், வாழைப்பழ குளிர்பதன கிடங்கு, முருங்கை ஏற்றுமதி மண்டலம்னு அமிர்தராஜ் தந்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவும் இல்ல... இதனால, 'மறுபடியும் காங்., வசம் தொகுதியை கொடுத்தா தோல்வி உறுதி'ன்னு சொல்ற தி.மு.க.,வினர், 'நாமே இங்க போட்டியிடணும்'னு தலைமையிடம் வலியுறுத்திட்டு இருக்காங்க...
''தி.மு.க., இளைஞர் அணி மாநில நிர்வாகியான வக்கீல் ஜோயல், பொதுக்குழு உறுப்பினர் சொர்ணகுமார்னு ரெண்டு பேர் தொகுதியை பிடிக்க காய் நகர்த்துறாங்க... ரெண்டு பேருமே கிறிஸ்துவ நாடார் சமுதாயம் என்பதால, 'யாருக்கு சீட் கிடைக்கும்'னு தொகுதியில பட்டிமன்றமே நடக்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
பேச்சு முடிய, பெரியவர்கள் கிளம்பினர்.

