PUBLISHED ON : ஜூன் 12, 2026 12:07 AM

மெதுவடையை கடித்தபடியே, “அதிகாரிகளை மிரட்டி வச்சிருக்கா ஓய்...” என, பெஞ்ச் தகவலை பேச ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த ஊர் விவகாரம் பா...” என கேட்டார் அன்வர்பாய்.
“தஞ்சாவூர் பெரிய கோவில்ல நிறைய சிவாச்சாரியார்கள் இருக்கால்லியோ... இவாள்ல சிலர், 'ஆரத்தி தட்டில் பக்தர்கள் போடற காணிக்கையில, எங்களுக்கும் பங்கு கொடுங்கோ'ன்னு புதுசா புறப்பட்டு வந்திருக்கா ஓய்...
“அதுவும் இல்லாம, கோவில்ல எந்த விசேஷம், விழா நடந்தாலும், இவாளுக்கும் ஒரு தொகை வெட்டணுமாம்... இந்த விவகாரம், அரண்மனை தேவஸ்தானம், அறநிலையத்துறை அதிகாரிகள் வரைக்கும் போயும் எந்த நடவடிக்கையும் இல்ல ஓய்...
“ஏன்னா, மிரட்டல் கும்பல், 'எங்களுக்கு பங்கு தரலன்னா, கோவில்ல நடக்கற தில்லுமுல்லுகள், ஊழல்களை வெளியில பகிரங்கப்படுத்திடுவோம்'னு அதிகாரிகளை மிரட்டி வச்சிருக்கா... அவாளும், திருடனுக்கு தேள் கொட்டிய மாதிரி, 'கப்சிப்'னு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.
உடனே, “அரசுக்கு செலவை குறைக்க சொல்லியிருக்காங்க...” என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
“எந்த துறையில வே...” என விசாரித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
“கடந்த தி.மு.க., ஆட்சியில் வீடு வீடா போய் குப்பை கழிவுகளை சேகரிக்க, இரும்பால் செய்த பேட்டரி வாகனங்களை வாங்கி, உள்ளாட்சி அமைப்புகளுக்கு குடுத்திருந்தாங்க... இப்படி வாங்கிய வாகனங்கள்ல பாதிக்கும் மேற்பட்டவை, இப்ப துரு பிடிச்சு, பயன்பாடு இல்லாம போயிடுச்சுங்க...
“தமிழக வெற்றிக் கழக அரசு வந்ததும், சென்னை மாநகராட்சிக்கு நிறைய குப்பை வாகனங்களை வாங்கியிருக்காங்க... நீண்டகாலம் துரு பிடிக்காமலும், எடை குறைவாகவும் இருக்கும் அலுமினிய வாகனங்களா பார்த்து வாங்கியிருக்காங்க...
“இதுக்கான செலவுகளும் குறைவா இருக்குது... 'இதே நடைமுறையை தமிழகம் முழுக்க இருக்கிற உள்ளாட்சி அமைப்புகளும் பின்பற்றி, அலுமினிய குப்பை வாகனங்களை வாங்கி, அரசுக்கு செலவை குறைக்கணும்'னு அதிகாரிகள் உத்தரவு போட்டிருக்காங்க...” என்றார் அந்தோணிசாமி.
“ஆட்சி மாறியும் அதிகாரிகள் சிலர், 'மாமூல்' வாழ்க்கையை மாத்திக்கல பா...” என்ற அன்வர்பாயே தொடர்ந்தார்...
“தமிழக அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை ஆணையர் அலுவலகம், சென்னை சேப்பாக்கம், எழிலகம் கட்டடத்தில் இருக்குது... மதுபான தயாரிப்பு ஆலைகளுக்கு உரிமம் நீட்டிப்பு வழங்குறது, மனமகிழ் மன்றங்களில் மது விற்க அனுமதி தர்றது உள்ளிட்ட பணிகள் இங்கு நடக்குது பா...
“இங்க இருக்கிற உதவி பெண் அதிகாரி, உதவியாளர், ஒப்பந்த பணியாளரான, 'கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்'னு மூணு பேரும் வழக்கம்போல, 'கட்டிங்' வசூல்ல ஈடுபடுறாங்க...
''இது சம்பந்தமா, பழைய ஆணையருக்கு நிறைய புகார்கள் போயும், அவர் எதையும் கண்டுக்கல... 'புதுசா வந்திருக்கிறவராவது, இவங்க மேல நடவடிக்கை எடுக்கணும்'னு இந்த துறையில் இருக்கிற நேர்மையான ஊழியர்கள் சொல்றாங்க பா...” என முடித்தார் அன்வர்பாய்.
அரட்டை முடியவும், எதிரில் வந்தவர்களை நிறுத்திய அண்ணாச்சி, “வாங்க, கார்த்திக், கோபி... ஊருக்கு போயிட்டு எப்ப வந்தீய... ஊர்ல லதா அக்கா சவுக்கியமாவ வே...” என விசாரிக்க, மற்றவர்கள் நடையை கட்டினர்.
