/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
லாட்டரி தொழிலில் தினமும் புழங்கும் லட்சங்கள்!
/
லாட்டரி தொழிலில் தினமும் புழங்கும் லட்சங்கள்!
PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

சுக்கு காபியை பருகிய படியே, “இரட்டை குழல் துப்பாக்கியா வளம் கொழிக்கிறாங்க பா...” என, முதல் தகவலை பேச ஆரம்பித்தார் அன்வர்பாய்.
“யாருங்க அவங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே நல்லான் பிள்ளை பெற்றான் ஊராட்சியில், ஒரு ஊழியர் பல வருஷமா இருக்காரு... வீட்டுவரி, நிலவரி, குடிநீர் இணைப்பு, மின் இணைப்பு, 100 நாள் வேலை திட்டம், பசுமை இல்லம், கலைஞர் இல்லம், பிரதம மந்திரி குடியிருப்பு போன்ற பல திட்டங்களுக்கு, இவர் தான் பயனாளிகளுக்கு சான்றுகள் தரணும் பா...
“ஆனா, 'அன்பளிப்பு' குடுத்தா தான் இவரிடம் காரியம் நடக்கும்... 100 நாள் வேலையில், ஒரு அடையாள அட்டைக்கு இவ்வளவுன்னு கட்டணம் நிர்ணயிச்சு வசூலிக்கிறாரு பா...
“இன்னொரு பக்கம், அதே ஊராட்சி அதிகாரி ஒருத்தர் பட்டா, சிட்டா, அடங்கல் வழங்கறதுல தனியா, 'கலெக் ஷன்' பண்ணிட்டு இருக்காரு... குடுக்க வேண்டியதை குடுத்துட்டா, கை, கால் திடமா இருக்கிறவங்களுக்கும், மாற்றுத்திறனாளி சான்றிதழ் வாங்கி குடுத்துடுவாரு... 'இந்த வசூல் இரட்டையர்களை மாத்தணும்'னு கிராம மக்கள் புலம்புறாங்க பா...” என்றார், அன்வர்பாய்.
“பா.ஜ.,வினர், 'பல்பு' வாங்கிய கதையை கேளுங்க வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“துாத்துக்குடி மாவட்டத்தில் போன வருஷம் பெஞ்ச மழையால, திருச்செந்துார் சாலையில் இருக்கிற, ஆத்துார் - முக்காணி உயர்மட்ட மேம்பாலம் சேதமாயிட்டு... ஒரு வருஷமாகியும், சீரமைப்பு பணிகள் நடக்கல வே...
“சமீபத்துல, பா.ஜ., மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அக்கட்சியினர், 'பாலத்துக்கு அஞ்சலி செலுத்தி போராட்டம் நடத்த போறோம்'னு, மலர் வளையங்களோட அங்கன திரண்டாவ... அவங்களை போலீசார் கைது பண்ணி, கல்யாண மண்டபத்துக்கு கூட்டிட்டு போனாவ வே...
“அங்க போனதும், 'இந்த பாலம், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறை வசம் இருக்கு... மத்திய அரசு நிதி ஒதுக்குனா தானே, மாநில அரசு சீரமைக்க முடியும்... இதுவரை மத்திய அரசு நிதி ஒதுக்கல... இது கூட உங்களுக்கு தெரியலையா'ன்னு போலீசார் குத்தலா கேட்டிருக்காவ... இதனால, பா.ஜ.,வினர் நொந்து போயிட்டாவ வே...” என்றார், அண்ணாச்சி.
“லாட்டரி விற்பனை அமோகமா நடக்கறது ஓய்...” என்றார், குப்பண்ணா.
“எந்த ஊருல பா...” என கேட்டார், அன்வர்பாய்.
“திருப்பூர் மாவட்டம் உடுமலையில், சட்ட விரோத மது விற்பனை, கஞ்சா விற்பனை ஏற்கனவே ஜோரா நடக்கு... இப்ப, லாட்டரி விற்பனையும் சேர்ந்துடுத்து ஓய்...
“மற்ற மாநிலங்கள்ல இருக்கற லாட்டரி சீட்டு மாதிரி, வெள்ளை பேப்பர்ல ஒரு நம்பர், இரு நம்பர், ஆறு நம்பர்னு எழுதி குடுக்கறா... போலீஸ் ஸ்டேஷன் பின்புறம், தாராபுரம் ரோடு உட்பட தொழிலாளர்கள் அதிகம் கூடும் பகுதிகள்ல இந்த லாட்டரிகளை விற்க, தனியா ஆபீஸ்களும் திறந்திருக்கா ஓய்...
“உடுமலை மட்டுமல்லாம, மடத்துக்குளம் தாலுகாவுலயும் பெரும்பாலான இடங்கள்ல ஆபீஸ் போட்டிருக்கா... இதுல, தினமும் பல லட்சம் ரூபாய் புழங்கறது ஓய்...
“உடுமலை சப் - டிவிஷன் அதிகாரி உள்ளிட்ட போலீசார் மற்றும் உள்ளூர் ஆளுங்கட்சியினரையும் லாட்டரி கும்பல் கவனிச்சுடறதால, தொழில் அமோகமா நடக்கறது... அப்பாவி தொழிலாளிகள் தான் பாவம், பணத்தை இழந்துண்டு இருக்கா ஓய்...” என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

