தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/தினம் தினம்/டீ கடை பெஞ்ச்/ அதிகாரிகளை மிரட்டும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்!

 அதிகாரிகளை மிரட்டும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்!

 அதிகாரிகளை மிரட்டும் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள்!

2


PUBLISHED ON : ஜூன் 26, 2026 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 26, 2026 12:00 AM

2


2
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

“வீடு தேடிண்டு இருக்கா ஓய்...” என்றபடியே பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.

“யாருக்கு பா...” என கேட்டார் அன்வர்பாய்.

“தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜை, திருப்பூர் மாவட்ட பொறுப்பு அமைச்சரா போட்டிருக்கால்லியோ... சமீபத்துல திருப்பூர் வந்த இவர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் ஆய்வு நடத்தினார் ஓய்...

“அப்புறமா கலெக்டர் ஆபீஸ்ல ஆய்வுக்கூட்டம் நடத்திய அமைச்சர், 'மருத்துவக் கல்லுாரிக்கும், கலெக்டர் ஆபீசுக்கும் எவ்வளவு துாரம்... எந்தெந்த வழிகள்ல வந்து போகலாம்'னு அதிகாரிகளிடம் விளக்கமா கேட்டிருக்கார் ஓய்...

“அருண்ராஜ், நாமக்கல்லைச் சேர்ந்தவர்... அடிக்கடி அங்கிருந்து வந்துட்டு போக முடியாதுங்கறதால, கலெக்டர் ஆபீஸ், அரசு மருத்துவமனைக்கு சீக்கிரம் வந்து போற மாதிரி, திருப்பூர் சிட்டிக்குள்ளயே வாடகைக்கு வீடு பார்க்கச் சொல்லியிருக்கார்... அவருக்காக த.வெ.க., நிர்வாகிகள் வீடு தேடிண்டு இருக்கா ஓய்...” என்றார் குப்பண்ணா.

“என்கிட்டயும் திருப்பூர் தகவல் ஒண்ணு இருக்குல்லா...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...

“திருப்பூர் மாவட்டத்தில் நிறைய தனியார் பள்ளிகள் இருக்கு... மூணு வருஷங்களுக்கு ஒருமுறை இதன் உரிமத்தை புதுப்பிக்கணும்... கல்வித் துறை அதிகாரிகள், பள்ளியில் ஆய்வு பண்ணிய பிறகு தான் உரிமத்தை புதுப்பிச்சு தருவாவ வே...

“ஆனா, பள்ளிகள்ல ஆய்வு நடத்தவே அதிகாரிகளுக்கு, 'கட்டிங்' வெட்டணும்... யாராவது பணம் தர மறுத்தா, ஆய்வுக்கே வராம இழுத்தடிக்காவ வே...

“தி.மு.க., ஆட்சியில இருந்த இந்த நிலை இப்ப மாறிட்டுன்னு சொன்னாலும், திருப்பூர்ல பழைய கதை தான் தொடருது... 'தனியார் பள்ளி நிர்வாகிகள் எந்த விஷயத்துக்கும் லஞ்சம் தர வேண்டாம்'னு துறையின் அமைச்சர் ராஜ்மோகன் சொல்லிட்டே இருந்தாலும், திருப்பூர்ல இருக்கிற அதிகாரிகள், அதை காதுலயே போட்டுக்கல வே...” என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

“எம்.எல்.ஏ., பெயர்ல மிரட்டுறாங்க...” என கடைசி மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.

“எந்த தொகுதியில ஓய்...” என கேட்டார் குப்பண்ணா.

“திருச்சி மாவட்டம், மணப்பாறை தொகுதி த.வெ.க., - எம்.எல்.ஏ.,வா இருக்கிறவர் கதிரவன்... இவர், சமீபத்துல மணப்பாறை பஸ் ஸ்டாண்ட்ல ஆய்வு செஞ்சாருங்க...

“அப்ப, பஸ் ஸ்டாண்ட்ல நடைபாதைகளை ஆக்கிரமிச்சு கடை வச்சிருந்தவங்களை பத்தி பயணியர் புகார் சொன்னாங்க... இதனால, ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி எம்.எல்.ஏ., உத்தரவு போட்டாருங்க...

“இதன்படி, நகராட்சி அதிகாரிகளும் ஆக்கிரமிப்பை அகற்றினாங்க... ஆனா, எல்லாம் ரெண்டே நாள் தான்... மறுபடியும் நடைபாதையை ஆக்கிரமிச்சு கடைகளை போட்டுட்டாங்க...

“இதனால நடக்க முடியாம பாதிக்கப்பட்ட சிலர், 'எம்.எல்.ஏ.,விடம் புகார் செய்வோம்'னு சொன்னதுக்கு, 'தாராளமா போய் சொல்லுங்க... எம்.எல்.ஏ., தரப்பை கவனிச்சிட்டு தான் கடை போட்டிருக்கோம்'னு பொதுமக்களை வியாபாரிகள் மிரட்டியிருக்காங்க...

“இதுக்கு இடையில எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் சிலரும், நகராட்சி அதிகாரிகளுக்கு போன் போட்டு, 'யாரை கேட்டு பஸ் ஸ்டாண்ட்ல இருந்த ஆக்கிரமிப்பு கடைகளை எடுத்தீங்க'ன்னு மிரட்டுறாங்க... இதனால, நகராட்சி அதிகாரிகள் நொந்து போயிருக்காங்க...” என முடித்தார் அந்தோணிசாமி.

பெஞ்சில் புதியவர்கள் சிலர் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us