/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
ரூ.51 லட்சம் தந்து 'சீட்'டுக்கு அச்சாரம் போட்ட எம்.எல்.ஏ.,!
/
ரூ.51 லட்சம் தந்து 'சீட்'டுக்கு அச்சாரம் போட்ட எம்.எல்.ஏ.,!
ரூ.51 லட்சம் தந்து 'சீட்'டுக்கு அச்சாரம் போட்ட எம்.எல்.ஏ.,!
ரூ.51 லட்சம் தந்து 'சீட்'டுக்கு அச்சாரம் போட்ட எம்.எல்.ஏ.,!
PUBLISHED ON : நவ 25, 2025 12:00 AM

''வே ட்பாளர் நான்தான்னு சொல்லி, 'அட்வான்ஸ்' வாங்கிட்டு இருக்காரு வே...'' என்றபடியே, பெஞ்ச் தகவலை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருப்பா அது...'' என கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவில் அறங்காவலர் குழு உறுப்பினரா, தி.மு.க., பிரமுகர் ஒருத்தர் இருந்தாரு... இவரது பதவிக்காலம் முடிஞ்சிட்டு வே...
''ஆனாலும், 'நான் தான் மறுபடியும் அறங்காவலர் குழு உறுப்பினர்... தலைவர் எல்லாம் சும்மா பேருக்கு தான்... ஒட்டுமொத்த கோவில் நிர்வாகமும் என் கையில் தான் வர போகுது'ன்னு ஊர் முழுக்க சொல்லிட்டு திரியுதாரு வே...
''அது மட்டுமில்ல... 'தி.மு.க., மாவட்ட செயலரின் வலது கரமான எனக்கு தான், வர்ற சட்டசபை தேர்தல்ல பொள்ளாச்சி சீட்'னும் சொல்லுதாரு... இப்படி சொல்லியே, கோவிலுக்கு பூஜை பொருட்கள் சப்ளை பண்றவங்க மற்றும் நேர்த்திக்கடனா வர்ற சேலைகளை வாங்குற வர்த்தகர்களிடம், தேர்தல் செலவுக்கு அட்வான்ஸ் வாங்கிட்டு இருக்காரு வே...'' என்றார், அண்ணாச்சி.
''திருமுருகன் தம்பி, இந்த பேப்பரை அங்க வைங்க...'' என்ற அந்தோணிசாமியே, ''நம் ஓட்டு, நம் உரிமைன்னு பிரசாரம் பண்ணிட்டு இருக்காருங்க...'' என்றபடியே தொடர்ந்தார்...
''தேர்தல் நேரத்துல ஆட்டோவுல மைக் கட்டி, பிரசாரம் செய்வாங்கல்ல... அந்த மாதிரி, 'மாஜி' எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணன் ஏற்பாட்டுல, மதுரை வடக்கு சட்டசபை தொகுதியில், வாக்காளர் பட்டியல் திருத்த பணி சம்பந்தமா ஆட்டோவில் பிரசாரம் பண்றாங்க. ..
''வாக்காளர்கள், விண்ணப்பத்தை எப்படி பூர்த்தி செய்து தரணும்னு விலாவாரியா விளக்குறாங்க... அரசு பள்ளிகள்ல நடக்கிற வாக்காளர் பட்டியல் திருத்த முகாம்களுக்கு சரவணனும், அவரது ஆதரவாளர்களும் போய், மக்களுக்கு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய உதவி பண்றாங்க...
''அதோட, மதுரை நரிமேடுல இருக்கிற தன்னோட சரவணா மருத்துவமனையிலும் சிறப்பு முகாம் நடத்தி, வாக்காளர்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் தந்துட்டு இருக்காருங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''மொத்தமா, 51 லட்சம் ரூபாயை குடுத்து, 'சீட்'டுக்கு அச்சாரம் போட்டிருக்கார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எம்.எல்.ஏ., சீட்டுக்கா வே...'' என கேட்டார், அண்ணாச்சி.
''ஆமா... திருச்சி, ஸ்ரீரங்கம் எம்.எல்.ஏ.,வா இருக்கறவர் தி.மு.க.,வின் பழனியாண்டி... மாவட்ட அமைச்சர் நேருவின் தீவிர ஆதரவாளரா இருந்தவர், ஒருகட்டத்துல அவரை பகைச்சுண்டார் ஓய்...
''இதனால, 'வர்ற தேர்தல்ல அவருக்கு சீட் கிடைக்கறது கஷ்டம்தான்'னு கட்சிக்காரா பேசிக்கறா... இந்த சூழல்ல, தன் மகன் திருமணத்தை தடபுடலா நடத்திய பழனியாண்டி, அதுக்கு முதல்வர் ஸ்டாலினையும் வர வழைச்சிருந்தார் ஓய்...
''அப்ப, தான் சார்ந்த முத்தரையர் சமுதாய தலைவர்கள் பலரையும், முதல்வர் அருகே உட்கார வச்சு, தன் செல்வாக்கை காட்டியிருக்கார்... அதுவும் இல்லாம, தேர்தல் நிதியா கட்சிக்கு, 51 லட்சம் ரூபாயை குடுத்து, முதல்வரை அசத்திட்டார் ஓய்...
''இதை எல்லாம் நேரு எதிர்பார்க்கவே இல்ல... இதனால, 'ஸ்ரீரங்கம் மீண்டும் பழனியாண்டிக்கு தான்'னு, அவரது ஆதரவாளர்கள் உற்சாகமா சொல்றா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

