PUBLISHED ON : மே 02, 2021 12:00 AM

களைகட்டும் தேர்தல் பந்தயம்!
ஞாயிறு ஊரடங்கு காரணமாக நண்பர்கள், 'கான்பரன்ஸ் கால்' வழியே இணைந்தனர்.
''டிரான்ஸ்பர் ஆனாலும், பழைய கோப்புல கையெழுத்து போட்டு வசூல் பார்க்காரு வே...'' என, முதல் தகவலுக்கு வந்தார், அண்ணாச்சி.
''யாரு, எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''செங்கல்பட்டு மாவட்டத்துல, மிருக காட்சி சாலை இருக்குற ஊர்ல தாசில்தாரா இருந்தவர், சில மாசத்துக்கு முன்னாடி, வேறு துறைக்கு, 'டிரான்ஸ்பர்' ஆகிட்டார் வே...
''ஆனாலும், முன்னாடி வேலை பார்த்த துறையில கையெழுத்து ஆகாம இருக்குற முக்கியமான, 'பைல்' எல்லாம், அந்த தாசில்தார் வீட்டுக்கு இப்பவும் போகுதாம் வே...
''அதுல, பழைய தேதியில கையெழுத்து போட்டு, வாங்க வேண்டியதை வாங்கிடுதாரு... இதுக்கு, 'டெபுடி' தாசில்தார் முழு ஒத்துழைப்பாம் வே...
''தாழம்பூர்ல, தனியாருக்கு முறைகேடா கொடுத்த அரசு நிலம், 500 ஏக்கர் மீட்பு விவகாரத்துல, 137 ஏக்கர் தான் மீட்டுருக்காங்க... மிச்சமுள்ள இடத்தை அரசு மீட்காம இருக்க, தனியாருக்கு, 'ஸ்கெட்ச்' போட்டு கொடுக்குறதும், இவரோட வேலை தானாம் வே...
''இந்த மோசடிக்கெல்லாம் முடிவே இல்லையான்னு, அந்த துறையில இருக்கிறவங்க, புலம்புதாவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''செந்திலுக்கும், ஏழுமலைக்கும் உடம்பு எப்படி இருக்காம் ஓய்...'' என, நலம் விசாரித்தார், குப்பண்ணா.
''அமைச்சர் பதவி ஏற்க, சொத்து குவிப்பு வழக்கு பிரச்னையா இருக்குமோன்னு பயப்படறார் ஓய்...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், குப்பண்ணா.''யாருங்க அது...'' எனக் கேட்டார், அந்தோணிசாமி.
''கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., செயலரும், 'மாஜி' அமைச்சருமான சுரேஷ்ராஜன், அமைச்சர் கனவுல இருக்கார்... ஆனா, அவர் மீது, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, இரண்டு வழக்குகள், நாகர்கோவில் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்துல நிலுவையில இருக்கு ஓய்...
''இந்த வழக்குகளின் முடிவு, பாதகமா வந்தால் என்ன செய்யறதுன்னு, கட்சி தலைமை யோசிக்கறது... அதனால, தி.மு.க., ஜெயிச்சாலும், அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்கறது கஷ்டம்னு பேசிக்கறா ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
''தேர்தல் பந்தயம் களைகட்டுதுங்க...'' என்ற அந்தோணிசாமி தொடர்ந்தார்...
''தமிழக சட்டசபை தேர்தல் முடிவு எப்படி இருக்கும்னு, சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி, இளம்பிள்ளை சுற்றுவட்டாரத்துல, ரியல் எஸ்டேட், கந்துவட்டி தொழில் செய்வோர் மட்டுமின்றி, கூலித் தொழிலாளர் உள்ளிட்ட பலரும், பந்தயம் கட்டியிருக்காங்க..
.
''அதுவும் இன்னைக்கு காலையில இருந்து, பந்தய தொகை அதிகரிக்கும்னு பேசிக்கிறாங்க... இரு பிரதான கட்சிகள் எவ்வளவு சீட்டுகளை பெறும், தொகுதி வாரியாக வெற்றி பெறும் கட்சி எதுன்னு, 3 லட்சம் முதல், 5 லட்சம் ரூபாய் வரையும் பந்தயம் கட்டியிருக்காங்க... இந்த சூதாட்டத்தை பற்றி தெரிஞ்சும், போலீசார் நடவடிக்கை எடுக்கலைன்னு, மக்கள் பேசிக்கிறாங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.தேர்தல் முடிவுகளை பார்ப்பதற்காக, மொபைல் போன் இணைப்பை, நண்பர்கள் துண்டித்தனர்.
எட்டு சூதாட்ட கிளப்கள் இயங்குவது யாரால்?
''தங்களுக்கு கிடைச்சது அசலா, போலியான்னு தெரியாம, தவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என, அந்தோணிசாமி வீட்டு மொட்டை மாடியில், விவாதத்தை ஆரம்பித்தார், குப்பண்ணா.
''என்ன விவகாரம் பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''திருப்பூர் மாவட்டம், அவிநாசி ஒன்றியத்துல இருக்கற பல ஊராட்சிகள்ல, வீட்டு மனை வாங்கிய பலரும், அதுக்கு 'அப்ரூவல்' வாங்க, ஆயிரக்கணக்குல பணம் கட்டியிருக்கா...
''இதுல, ஊராட்சி செயலர்களை கைக்குள்ள போட்டுண்ட ஒன்றிய அதிகாரிகள் சிலர், போலியான அப்ரூவல் கடிதங்களை குடுத்திருக்கா ஓய்...
''இப்ப, பிரச்னை விஸ்வரூபம் எடுத்துட்ட தால, 'இந்த உத்தரவுக்கும் ஒன்றிய அலுவலகத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை... அதிகாரிகள், போலி கையெழுத்தை யாரோ மோசடியா போட்டுருக்கா'ன்னு அதிகாரிகள் நழுவறா...
''இதனால, ரெண்டு வருஷமா, அப்ரூவலுக்கு பணம் கட்டிய பலரும், தங்களுக்கு கிடைச்ச உத்தரவு அசலா, 'டூப்ளிகேட்'டான்னு தெரியாம தவிச்சுண்டு இருக்கா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அமைச்சர் பதவிக்கு, ஒரே ஜாதியில உள்ள உட்பிரிவுக்கும் 'கோட்டா' வேணும்னு, கோரிக்கை வச்சிருக்காவ வே...'' என, அடுத்த தகவலுக்கு மாறினார், அண்ணாச்சி.
''விளக்கமா சொல்லுங்க...'' என்றார் அந்தோணிசாமி.
''தி.மு.க., ஆட்சிக்கு வந்தா, நாயுடு சமுதாயத்துல இருக்கிற மற்ற உட்பிரிவுக்கும் அமைச்சர் பதவி தரணும்னு, தி.மு.க., மேலிடத்துக்கு கோரிக்கை வச்சிருக்காவ... அதாவது, கவரநாயுடு, பலிஜா நாயுடு, கம்மா நாயுடு ஆகிய மூன்று உட்பிரிவுகளை சேர்ந்தவர்களுக்கும் அமைச்சர் பதவி கேட்காவ வே...
''கவர நாயுடு பிரிவுல சேகர்பாபு, பலிஜா நாயுடு பிரிவுல எ.வ.வேலு, கம்மா நாயுடு பிரிவுல, கோவை கார்த்திக், மதுரை தளபதி, அணைக்கட்டு நந்தகுமார்னு, கடும் போட்டியே நடக்கு வே...'' என்றார், அண்ணாச்சி.ஒலித்த போனை எடுத்த அந்தோணிசாமி, ''ராஜு, உங்க விஷயத்தை இனிமே தான் பேசணும்... நானே கூப்பிடறேன்...'' எனக் கூறி வைத்தபடியே, ''அதிகாரி ஆசியோட அமோகமா சூதாட்டம் நடக்குதுங்க...'' என, விஷயத்திற்கு வந்தார்.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''ஈரோடு 'சப் - டிவிஷன்'ல, ஏழு போலீஸ் ஸ்டேஷன்கள் செயல்படுது... கருங்கல்பாளையம் பகுதியில மூணு, வீரப்பன்சத்திரம் பகுதியில ரெண்டு, சோலார் அருகே ஒரு 'கிளப்' உட்பட, எட்டு சீட்டாட்ட கிளப்கள் நடக்குதுங்க... தேர்தல் பிசியால, ஆளுங்கட்சியினர் தலையீடு இல்லாம, 24 மணி நேரமும் இந்த கிளப்கள் இயங்கிட்டு இருக்குதுங்க...
''இந்த கிளப்புகள்ல தினமும் பல லட்சம் ரூபாய் புரளுது... போலீசாருக்கு தெரியாம கிளப்கள் நடக்குமான்னு கேட்காதீங்க... போலீஸ் அதிகாரி ஒருத்தரின் முழு ஆசீர்வாதத்துல தான் எல்லாமே நடக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
அரட்டை முடியவும், ''இன்னிக்கு ஓட்டு எண்ணுதாங்கல்லா... சீக்கிரம் கிளம்புவோம்... நியூஸ் பார்க்கணும்...'' என்றபடியே அண்ணாச்சி கிளம்ப, மற்றவர்களும் நடையை கட்டினர்.