/
தினம் தினம்
/
டீ கடை பெஞ்ச்
/
பெண் வி.ஏ.ஓ.,க்களிடம் அத்துமீறும் அதிகாரி!
/
பெண் வி.ஏ.ஓ.,க்களிடம் அத்துமீறும் அதிகாரி!
PUBLISHED ON : டிச 26, 2024 12:00 AM

குளிருக்கு இதமாக, நாயர் தந்த சூடான மெது வடையை கடித்தபடியே, “பெரிய ஊழலே நடக்கறது ஓய்...” என, அரட்டையை ஆரம்பித்தார் குப்பண்ணா.
“எந்த துறையிலங்க...” என கேட்டார், அந்தோணிசாமி.
“அரசு மருத்துவமனைகள்ல, பிரசவத்துக்கு பின் தாய் மற்றும் குழந்தையை, இலவசமா வீட்டுல கொண்டு விடற திட்டம் ஒண்ணு இருக்கு... தேசிய குழந்தைகள் நலத்திட்டத்தின் கீழ், இதை செயல்படுத்திண்டு இருக்கா ஓய்...
“இது, கிராமப்புற ஏழை, எளிய மக்களுக்கு ரொம்பவே, 'யூஸ்புல்'லா இருந்துது... இப்ப, இந்த திட்டத்தை பெரும்பாலான அரசு மருத்துவமனைகள்ல செயல்படுத்தறது இல்ல ஓய்...
“ஆனாலும், குழந்தை மற்றும் தாயின் தகவல்களை மட்டும் கேட்டு வாங்கிக்கறா... இவாளுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து, வீடுகள்ல கொண்டு போய் விட்டதா கணக்கு காட்டி, நிதியை சுருட்டிக்கறா ஓய்...
“இதுல, சில மாவட்ட தலைமை மருத்துவமனைகள்ல, தினமும் ஒற்றை இலக்கத்துல தான் பிரசவங்கள் நடக்கறது... ஆனா, வீட்டுல கொண்டு போய் விடற கணக்கை பார்த்தா, இரட்டை இலக்கத்துல வரது... இது பத்தி விசாரணை நடத்தினா, பெரிய ஊழல் வெளியில வரும் ஓய்...” என்றார், குப்பண்ணா.
“நகராட்சி நிர்வாகத்தையே முடக்கிட்டாரு வே...” என்ற பெரியசாமி அண்ணாச்சியே தொடர்ந்தார்...
“திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி நகராட்சி தலைவியா, தி.மு.க.,வைச் சேர்ந்த பெண்மணி இருக்காங்க... ஆனாலும், ஆளுங்கட்சியின் நகர முக்கிய புள்ளி தான், நிர்வாகத்தை நடத்துதாரு வே...
“இவருக்கு, மாவட்ட செயலரான, 'மாண்புமிகு'வின் ஆதரவும் இருக்கிறதால, நகராட்சி அதிகாரிகள், துணை தலைவர், தி.மு.க., கவுன்சிலர்கள்னு பலரையும் தன் கட்டுப்பாட்டுல வச்சுக்கிட்டு, நகராட்சி பணிகளை முடக்குதாரு வே...
“டெண்டர் உள்ளிட்ட விஷயங்களை, தன் ஒப்புதல் வாங்கி தான் செய்யணும்னு சொல்லுதாரு... நகராட்சி தலைவியை தனிமைப்படுத்தி, அவங்க மேல அவதுாறுகளையும் பரப்பிட்டு இருக்காரு... இதனால, வெறுத்து போயிருக்கிற நகராட்சி தலைவி, 'பேசாம ராஜினாமா பண்ணிட்டு போயிடலாம்'னு புலம்பிட்டு இருக்காங்க வே...” என்றார், அண்ணாச்சி.
“பெண்களுக்கு செல்ல பெயர் சூட்டி கூப்பிடுறாருங்க...” என்றார், அந்தோணிசாமி.
“யாருப்பா அது...” என கேட்டார், அன்வர்பாய்.
“துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வருவாய் துறையில் ஒரு அதிகாரி இருக்காருங்க... இவர், ராத்திரி நேரங்கள்ல பெண் வி.ஏ.ஓ.,க்களை செல்ல பெயர்ல அழைச்சு, 'வாட்ஸாப்'ல மெசேஜ்களா தட்டி விடுறாருங்க...
“சமீபத்துல ஒரு பெண் வி.ஏ.ஓ.,விடம் அத்துமீறி நடந்துக்கிட்டாருங்க... இதனால, அவர் கட்டுப்பாட்டுல பணிபுரியும் பெண் வி.ஏ.ஓ.,க்கள், தங்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு கோவில்பட்டி ஆர்.டி.ஓ.,விடம் புகார் குடுத்தாங்க...
“ஆனா, அதிகாரி மீது எந்த நடவடிக்கையும் இல்ல... அடுத்த கட்டமா பெண் வி.ஏ.ஓ.,க்கள் மொத்தமா கையெழுத்து போட்டு, கலெக்டருக்கே புகார் அனுப்பிஇருக்காங்க...
“அதுல, 'அதிகாரி அனுப்புற ஏடாகூடமான மெசேஜ்களால, குடும்பத்துல குழப்பம் ஏற்படுது... அவர் மீது சீக்கிரமா நடவடிக்கை எடுக்கலன்னா போராட்டத்துல ஈடுபடுவோம்'னும் எச்சரிச்சிருக்காங்க...” என முடித்தார், அந்தோணிசாமி.
பெஞ்சில் புதியவர்கள் அமர, பெரியவர்கள் கிளம்பினர்.